உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டீக்கடை பெஞ்ச்: எதிர்க்கட்சி புள்ளியை, வாங்கிய எம்.பி.,

டீக்கடை பெஞ்ச்: எதிர்க்கட்சி புள்ளியை, வாங்கிய எம்.பி.,

டீயை குடித்து முடித்ததும், டம்ளரை மேஜையில் வைத்தபடியே, ''போலீஸ் அதிகாரியை மாத்துங்கன்னு, சமூக ஆர்வலர்கள் பலரும் மனு குடுத்திருக்காங்க பா...'' என்றார், அன்வர்பாய்.''எந்த ஊருல வே...'' எனக் கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.''மத்திய சென்னையில, அண்ணாநகர் சட்டசபை தொகுதிக்குள்ள வர்ற ஒரு போலீஸ் ஸ்டேஷன்ல தொடர்ந்து, மூணு வருஷத்துக்கும் மேல இருக்கிற இன்ஸ்பெக்டரை, தேர்தல் கமிஷன் விதிப்படி மாத்தியிருக்கணும் பா...''ஆனா, அவருக்கு தொகுதி முக்கிய புள்ளி, அவரது வாரிசின் பரிபூரண ஆசி இருக்கிறதால, அதே ஸ்டேஷன்ல, 'பவர்புல்' அதிகாரியா வலம் வர்றாரு... தேர்தல்ல குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவாக செயல்படவே, அவரை மாத்தாம வச்சிருக்காங்களோன்னு சந்தேகம் எழுந்திருக்குது பா...''அவரை மாத்தியே தீரணும்னு தேர்தல் கமிஷனுக்கு சமூக ஆர்வலர்கள் சிலர் மனு அனுப்பியிருக்காங்க பா...'' என்றார், அன்வர்பாய்.''எம்.பி.,க்கு மாவட்ட நிர்வாகிகள் ஒத்துழைப்பு தருவாளான்னு கேள்வி எழுந்திருக்கு ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...''காஞ்சிபுரம் லோக்சபா தொகுதியில், சிட்டிங், தி.மு.க.,- - எம்.பி., செல்வம், 2014 தேர்தல்ல தோத்துட்டார்... 2019ல ஜெயிச்சவருக்கு, மூணாவது முறையாகவும் வாய்ப்பு குடுத்திருக்கா ஓய்...''ஆனா, இதுல செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகிகள் பலருக்கும் விருப்பமில்லை... ஏன்னா, இந்த மாவட்டத்துல இருக்கற நாலு சட்டசபை தொகுதிகள், காஞ்சிபுரம் லோக்சபா தொகுதிக்குள்ள வரது ஓய்...''இந்த நாலு தொகுதிகள்லயும் பண பலம், ஆட்கள் பலத்தோட உள்ள பலரும் சீட் கேட்டிருந்தா... ஆனா, தெற்கு மாவட்ட செயலர் சுந்தர் தன் பேச்சுக்கு கட்டுப்பட்டு, அடக்க ஒடுக்கமா இருந்ததால, செல்வத்துக்கே மறுபடியும் சீட் வாங்கி குடுத்துட்டார்...''ஆனாலும், சீட் கிடைக்காத மற்ற நிர்வாகிகள், செல்வத்துக்கு எந்த அளவுக்கு வேலை பாப்பான்னு தெரியல ஓய்...'' என்றார், குப்பண்ணா.''என்கிட்டயும் ஒரு, எம்.பி., தகவல் இருக்கு வே...'' என்றார், அண்ணாச்சி.''சீக்கிரம் சொல்லுங்க...'' என்றார், அந்தோணிசாமி.''சென்னைக்கு பக்கத்துல இருக்கிற ஒரு தொகுதியில, 2019ல ஜெயிச்ச, தி.மு.க., - எம்.பி., அப்புறமா தொகுதி பக்கமே தலை காட்டல... கட்சிக்கு காமதேனுவா இருக்கிற பெரிய தொழிலதிபர் என்பதால, இந்த முறையும் சீட் வாங்கிட்டாரு வே...''அதே நேரம், போன தேர்தல்ல இவரை எதிர்த்து தோற்று போன, ஜாதி கட்சி புள்ளி மறுபடியும் இங்க நிற்க போறதா தகவல் பரவுச்சு... இப்ப, அந்த கட்சி, தாமரை கூட்டணியில சங்கமம் ஆகியிருக்கு வே...''இதனால, உஷாரான எம்.பி., அந்த ஜாதி கட்சி புள்ளிக்கு நெருக்கமான நண்பர்களிடம் பேசி, 'இந்த முறை அவரை போட்டியிட வேண்டாம்னு தடுத்துடுங்க... அவரை முறைப்படி கவனிச்சிடுறேன்'னு சொல்லியிருக்காரு வே...''அவரும் இந்த டீல் நல்லாயிருக்கேன்னு, போட்டியிட விருப்பமில்லைன்னு தலைமைகிட்ட சொல்லிட்டு நழுவிட்டாரு வே... இதுக்கு பிரதிபலனா எம்.பி., தரப்புல இருந்து சில கோடிகள் அவருக்கு போயிட்டு வே...'' என முடித்தார், அண்ணாச்சி.''ஜெகத்தும், மூர்த்தியும் வாறாவ... சுக்கு காபி குடும் நாயரே...'' என்றபடியே அண்ணாச்சி எழ, மற்றவர்களும் புறப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை