சென்னை: 'அமாவசை நாட்களில் இரவு நேர ரோந்து பணிகளை அதிகரிப்பதுடன், தெரு வாரியாக பூட்டி கிடக்கும் வீடுகளை படம் பிடித்து, இன்ஸ்பெக்டர்களின் வாட்ஸாப் எண்ணிற்கு அனுப்ப வேண்டும்' என, போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. குற்ற சம்பவங்களை தடுக்க, ரோந்து போலீசாருக்கு, மாவட்ட எஸ்.பி.,க்கள் பிறப்பித்துள்ள உத்தரவு: மாவட்ட வாரியாக ஏற்கனவே செயின் பறிப்பு உள்ளிட்ட குற்றங்கள் நடந்த இடங்கள் ஆய்வு செய்யப்பட்டு உள்ளன. அந்த இடங்களில், 'சிசிடிவி' கேமரா பொருத்தப்பட்டு, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன் பதிவுகளை ரோந்து போலீசார் பாதுகாக்க வேண்டும். தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் வசிப்போரை ஒருங்கிணைத்து, 'வாட்ஸாப்' குழு அமைக்க வேண்டும். சந்தேக நபர்கள் குறித்து, போலீஸ் நிலையங்களில் தினசரி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். கோவில்கள், வங்கி ஏ.டி.எம்., மையங்கள், பள்ளி, கல்லுாரிகள் இருக்கும் இடங்களில், எட்டு மணி நேரத்தில், குறைந்த பட்சம் மூன்று முறையாவது, ரோந்து அப்பகுதியில் இருக்கும்படி, ஏற்கனவே ரோந்து பணி அமைக்கப்பட்டுள்ளது. தற்போது, அமாவசை நாட்களில், இரவு நேர கொள்ளை அதிகரித்து வருவதால், அந்த இடங்களில் ஆறு முறையாவது, போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும். ரோந்து செல்லும் போலீசார், தெரு வாரியாக, மூன்று நாட்களுக்கு மேல் பூட்டி கிடக்கும் வீடுகளை படம் பிடித்து, இன்ஸ்பெக்டர்களின் வாட்ஸாப் எண்களுக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு அவர்கள் உத்தரவிட்டுள்ளனர்.