வாசகர்கள் கருத்துகள் ( 1 )
வணிகப்படிப்பும், அரசின் அங்கீகாரமும் வணிகப்படிப்பில் உள்ள பல்வேறு வகை பிரிவுகளை அனைவரும் அறிந்திட நடத்தப்படும் தின மலர் உயர் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி வரவேற்கப்பட வேண்டியதே. இருந்தாலும் இளங்கலை, முதுகலை வணிகப் பாடப்பிரிவுகள் தொழில் முறை படிப்புகளாக அரசின் அங்கீகாரம் பெற்றால்தான் அதைப் படித்தவர்களுக்கு ஒரு கௌரவமும், வருமானத்தை இரட்டிப்பாக்கும் நிலையும் , வேலை வாய்ப்புகள் பெருமளவில் உருவாகும் நிலையும் உண்டாகும். அதனால் பலரும் இதனைப் படிப்பர். அதாவது எவ்வளவு படிப்புகள் இருந்தாலும் முடிவில் அதன் மூலம் என்ன வருமானம் வரும், மற்றும் அதன் தேவை உள்ளதா என்பது சராசரி மக்கள் மற்றும் மாணவனின் எதிர்பார்ப்பு. மேலும் இளங்கலை, முதுகலை படிப்புகளில் மருத்துவம், மருத்துவம் சார்ந்த துறைகளின் படிப்பும், பொறியியல் கல்வி, சட்டப்படிப்பு எல்லாம் பல்கலைக் கழகம் மற்றும் அரசு, பொதுமக்கள் இடையே தொழிற்கல்வி எனும் அங்கீகாரத்தை கொண்டிருப்பதாலும், வருமானம் அதிகம், வாய்ப்புகள் அதிகம் வரும் எனும் காரணத்தினாலும் மக்களிடையே அதிக வரவேற்பு பெற்றுள்ளது. அதே நேரத்தில் வணிகப் பிரிவில் பட்டய கணக்காளர் மட்டுமே தொழில் கல்வி எனும் அங்கீகாரம் பெற்றுள்ளது. பட்டயக் கணக்காளர் படிப்பு என்பது பல்கலைக்கழக படிப்பு அல்ல. அது சுதந்திரம் அடைந்த கால கட்டத்தில், பல்கலைக் கழகங்கள் அதிகம் வளர்ச்சி பெறாத சமயத்திலும், வணிகப்படிப்பு தெரிந்தவர்கள் குறைவாக இருந்ததாலும் பாராளுமன்ற சட்டம் மூலமாக ஒரு தனி அமைப்பு ஏற்படுத்தப்பட்டு தனியார் நிறுவனங்களை தணிக்கை செய்யவும, அது தொடர்பான அறிக்கைகளை, வணிகம், வரி சார்ந்த துறைகளுக்கு சமர்ப்பிக்கவும் நடு நிலைமையான அமைப்பாக அரசு அங்கீகரித்துள்ளது. ஏனென்றால் அரசின் வணிக சட்டங்களை தனியார் நிறுவனங்கள் பின்பற்றுகிறார்களா என்று சரிபார்க்க அதிக அளவு வணிக முறை தெரிந்த அரசு ஊழியர்கள் பற்றாக்குறையே. அதற்கு மாற்றாக இந்த அமைப்பு உதவி செய்கிறது. வணிகவியலில் இன்றைய கள நிலவரத்தைப் பார்க்கும்போது நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. உதாரணத்திற்கு தினம் தினம் புது நிறுவனங்களின் தொடக்கம், மின்னணு வணிக சேவைகள், பன்னாட்டு வணிக ஒப்பந்தங்கள் மற்றும் அவர்களின் சட்ட திட்டங்கள், ஜிஎஸ்டி சட்டங்கள், வருமான வரி சட்டங்கள், வங்கிகளின் பற்று அட்டை, வரவு அட்டை, கடன் அட்டை, மின்னஞ்சல் பணப் பரிமாற்றத்தில் ஜிபே, ஃபோன் பே, இணைய தள வங்கி சேவை என பல பரிமாணங்களில் வளர்ந்துள்ளது. அதற்கேற்ப பட்டய கணக்காளர்கள் மற்றும் வணிக வல்லுனர்களின் தேவை அதிகமாக இருக்கிறது. அதனால்தான் பட்டயக் கணக்காளர் பல இளங்கலை, முதுகலை வணிகவியல் பட்டதாரிகளைக் கொண்டு சிறு, குறு, பெரு நிறுவனங்களின் கணக்கு தணிக்கை, வரி படிவம் தாக்கல் செய்தல், வரவு செலவு கணக்குகள், இலாப நஷ்ட கணக்குகள், சொத்துக்களும் கடன்களுக்கான சமநிலை அறிக்கையின் சான்றிதழ் தயாரித்தல் போன்ற பணிகளை செய்கின்றனர். தற்போது உள்ள சூழ் நிலையில் பெரும்பாலான வணிகத் தவறுகளுக்கு ஆட்கள் பற்றாக்குறையே காரணம் என்றும் சொல்கிறார்கள். மேலும் ஒரு தணிக்கையாளர் சான்றிடப்பட்ட வணிக நிறுவன படிவங்களில் அரசுப் பணியில் இருக்கும் வருமான வரி அலுவலக மேல் நிலை உதவியாளர் தவறு கண்டு பிடிக்கிறார் என்றால் இந்த முறையை மேலும் செவ்வனே செய்ய பொறுப்பான பொறுப்புள்ள வணிகவியல் துறையில் பயிற்சி பெற்றவர்கள் தேவை. மேலும் பலவித சட்ட விரோத பண பரிமாற்றம், வரி ஏயப்பு செய்யும் நிறுவனங்களின் கணக்குகள் பட்டய கணக்காளர் தணிக்கை செய்தும் தவறு நடக்கிறது என்றால் ஒன்று சரியான ஆட்கள் இல்லை மற்றும் அரசு வணிக சட்ட திட்டங்கள் அறியாமல் இருக்கலாம். அடுத்தது ஒரு முது நிலை வணிகவியல் பட்டதாரி சுமார் 7 வருடங்கள் அதாவது 2 படிப்பில் 2 வருடம், இளங்கலை வணிகம் 3 வருடம் மற்றும் முதுகலை 2 வருடம் என பட்டயக் கணக்காளர் படிக்கும் அதே படிப்பை படிக்கிறார்கள். பட்டயப் படிப்போ 4 வருடத்திலேயே முடித்து விடலாம். அடுத்தது நமது அரசாங்கம் பல்கலைக் கழக மானியக்குழு அல்லது ஆணையகம் மூலமாக கோடிக்கணக்கான ரூபாய் உயர் கல்விக்காக செலவிடுகிறது. அதன் பயனை முழுமையாக பெறவேண்டும் எனில் முதுகலை வணிகப் படிப்பை அரசு பட்டயக் கணக்காளருக்கு சமமாக தொழிற் கல்வி (professional course) என அங்கீகரிக்க வேண்டும். இதன் மூலம் பல பேரின் வாழ்வாதாரம் உயர்வதுடன், பல பேர் கனவுகள் நிஜமாகும். அது மாத்திரமல்ல இந்த செய்கையினால் வேலை வாய்ப்பு பெருகும். முக்கியமாக அரசின் வணிக வரி, வணிக மேம்பாடு சட்ட திட்டங்கள் எளிதில் அனைவருக்கும் புரியும் படி சென்று சேரும். உயர் கல்விக்காக அரசு செய்யும் செலவுகள் அதன் குறிக்கோளை அடையும்.
மேலும் செய்திகள்
சிருங்கேரி சுவாமிகளின் டில்லி விஜய யாத்திரை
1 hour(s) ago
கேரளா செல்லும் ஆம்னி பஸ்கள் இரண்டாவது நாளாக நிறுத்தம்
1 hour(s) ago
தமிழில் ஆன்லைன் ஆன்மிக வகுப்பு இளைய தலைமுறைக்கு அழைப்பு
1 hour(s) ago
பிளஸ் 1 மாணவர்களுக்கு ஆன்லைனில் வணிக கல்வி
1 hour(s) ago
கேழ்வரகு கொள்முதல் துவக்கம் டன்னுக்கு ரூ.48,860 விலை
1 hour(s) ago
சிறையில் இலங்கை கைதியை சந்திக்க குடும்பத்திற்கு அனுமதி
1 hour(s) ago