| ADDED : நவ 20, 2025 01:13 AM
சென்னை: அ.தி.மு.க., தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநிலத் தலைவர், கோவை சத்யன் மீதான வழக்கு விசாரணைக்கு, சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. தனியார் 'டிவி' விவாத நிகழ்ச்சியில் பங்கேற்ற கோவை சத்யன், பட்டியலின மக்கள் குறித்து, சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக புகார் அளிக்கப்பட்டது. அவர் மீது, வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் சத்யன் மனு தாக்கல் செய்தார். இந்த மனு, நீதிபதி ஏ.டிஜெகதீஷ் சந்திரா முன் விசாரணைக்கு வந்தது. சத்யன் தரப்பில், வழக்கறிஞர் முகமது ரியாஸ் ஆஜராகி, ''மனுதாரர் வாக்காளர் சரிபார்ப்பு நடவடிக்கை குறித்து பேசினார்; உள்நோக்கத்தோடு பேசவில்லை,'' என்றார். இதையடுத்து, கோவை சத்யன் மீதான வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்ட நீதிபதி, மனுவுக்கு காவல்துறை இரண்டு வாரங்களில் பதிலளிக்கும்படி கூறி, விசாரணையை தள்ளி வைத்தார்.