உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் /  எல்.பி.ஜி., இறக்குமதி: ஒரே கல்லில் பல மாங்காய் அடித்தது மத்திய அரசு

 எல்.பி.ஜி., இறக்குமதி: ஒரே கல்லில் பல மாங்காய் அடித்தது மத்திய அரசு

பெ ரும்பாலான நம் குடும்பங்களில் காலையில் எழுந்தவுடன், முதலில் செய்வது காஸ் அடுப்பை பற்ற வைத்து டீயோ, காபியோ போட்டு குடிப்பது தான். இதற்கு, எல்.பி.ஜி., எனப்படும் திரவ பெட்ரோலிய எரிவாயு சிலிண்டர் பயன்படுகிறது. நாட்டில் உள்ள மொத்த குடும்பங்களில் 60 சதவீதம் பேர், சமையலுக்கு எல்.பி.ஜி., சிலிண்டரையே பயன் படுத்துகின்றனர். இந்த எல்.பி.ஜி., சிலிண்டரில் 'புரொப்பேன்' மற்றும் 'பியூட்டேன்' என்ற இரண்டு எரியக்கூடிய 'ஹைட்ரோகார்பன்கள்' உள்ளன. புரொப்பேன் மிகக் குறைந்த வெப்பநிலையில் கூட ஆவியாகும். அமெரிக்கா, கனடா போன்ற குளிர் நாடு களுக்கு இது சிறந்தது. நம்மை போன்ற வெப்பமண்டல நாடுகளில், புரொப்பேன்- அதிகம் உள்ள சிலிண்டர் சுற்றுப்புற வெப்பம் காரணமாக, மிக அதிக அழுத்தத்தை உருவாக்கிவிடும். அதே சமயம், பியூட்டேன் அதிக வெப்பநிலையில் ஆவியாகும் தன்மை உடையது. இது நம் நாட்டு சூழலுக்கு சரியாகப் பொருந்தும். எனவே தான், நாம் எல்.பி.ஜி.,க்காக மேற்கு ஆசிய நாடுகளான சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார் ஆகிய நாடுகளை பெரிதும் நம்பியிருக்கிறோம். உலகின் மிகப்பெரிய எல்.பி.ஜி., உற்பத்தியாளராக அமெரிக்கா இருந்தாலும், நம் இறக்குமதியில் 90 சதவீதம் சவுதி உள்ளிட்ட நாடுகளிடம் இருந்துதான் வருகிறது. காரணம், வளைகுடா நாடுகள் பெரும்பாலும் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து எல்.பி.ஜி.,யை உற்பத்தி செய்கின்றன. கச்சா எண்ணெய் சுத்திகரிப்பின் போது, இயல்பாகவே பியூட்டேன் நிறைந்த எல்.பி.ஜி., உபப் பொருளாகக் கிடைக்கும். மாற்றம் அமெரிக்கா கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு மூலம் இல்லாமல், இயற்கை எரிவாயுவை பூமியில் இருந்து எடுத்து, எல்.பி.ஜி.,யை உற்பத்தி செய்கிறது. இயற்கை எரிவாயுவில் பியூட்டேனை விட புரொப்பேன் அதிகமாக இருக்கும். வளைகுடா நாடுகள் இந்தியாவுக்கு மிக அருகில் இருப்பதால், சரக்கு போக்குவரத்து செலவு மிகக் குறைவு என நாம் அங்கிருந்து இறக்குமதி செய்தோம் இதில் தற்போது மாற்றம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் இருந்து ஆண்டுக்கு 22 லட்சம் டன் எல்.பி.ஜி., இறக்குமதி செய்ய, நாட்டின் மூன்று பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்துள்ளன. இந்த ஒப்பந்தம் சமீபத்தில் மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி முன்னிலையில் கையெழுத்தானது. இது, நம் நாட்டின் ஓராண்டுக்கான எல்.பி.ஜி., இறக்குமதியில், 10 சதவீதமாகும். அமெரிக்க எல்.பி.ஜி.,யில் புரொப்பேன் அதிகம் உள்ளதோடு, அது சவுதி உள்ளிட்ட நாடுகளை விட தொலைவிலும் உள்ளது. அப்படியிருக்க, நாம் ஏன் அமெரிக்காவிடம் எல்.பி.ஜி., வாங்க வேண்டும்? இதற்கு காரணம், சீனா -- அமெரிக்கா - வர்த்தகப் போர். அமெரிக்க எல்.பி.ஜி.,யை வாங்கும் மிகப்பெரிய நாடாக சீனா தான் இருந்தது. சீன பொருட்களுக்கு அமெரிக்கா அதிக வரி விதித்தபோது, சீனா பதிலுக்கு அமெரிக்க எல்.பி.ஜி., இறக்குமதியைக் குறைத்தது. இதனால், அமெரிக்க உற்பத்தியாளர்களிடம் புரொப்பேன் அதிகமுள்ள எல்.பி.ஜி., குவிந்தது; விலையும் குறைந்தது. குறைந்த விலை அதே நேரத்தில், மேற்காசிய நாடுகளான ஈரான் - -இஸ்ரேல் மோதல் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தியில் சரக்கு கப்பல்கள் மீதான தாக்குதல் பதற்றம் காரணமாக, அந்த வழித்தடத்தில் சரக்கு போக்கு வரத்து செலவுகள் அதிகரித்தன. இதனால் முதல் முறையாக நம் நாடு, அமெரிக்காவிடம் இருந்து ஓராண்டுக்கு எல்.பி.ஜி.,யை குறைந்த விலையில் இறக்குமதி செய்யும் ஒப்பந்தத்தை இறுதி செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்தால், நாட்டின் எரிசக்தி பாதுகாப்பு வலுவடையும். மேற்கு ஆசிய நாடுகளை சார்ந்திருப்பது 10 சதவீதம் குறையும். போட்டி ஏற்பட்டிருப்பதால் சவுதியும் நமக்கு குறைந்த விலையில் எல்.பி.ஜி., வழங்க முன் வரும். அமெரிக்கா, நாம் அதன் தயாரிப்புகளை அதிகம் வாங்குவதில்லை என குற்றஞ்சாட்டி 50 சதவீத இறக்குமதி வரி விதித்தது. தற்போது இந்த ஒப்பந்தம் மூலம் வர்த்தக உறவை சமநிலைப் படுத்த முடியும். இது இறக்குமதி வரியை குறைப்பது தொடர்பான பேச்சை எளிமையாக்கும். எல்.பி.ஜி., விலை உலகளாவிய அளவில் மாறிக் கொண்டிருக்கும். நம் நாட்டு எண்ணெய் நிறுவனங்கள் அவற்றை வாங்கி, ஒரு நிலையான விலையில் விற்கின்றன. சில சமயங்களில் நாம் வீடுகளுக்கு சிலிண்டர் வாங்கும்போது செலுத்தும் தொகையை விட, எண்ணெய் நிறுவனங்கள் இறக்குமதி செய்த தொகை அதிகமாக இருக்கும். இந்த இழப்புக்கான தொகையை மத்திய அரசு வழங்குகிறது. தற்போது அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தால் எண்ணெய் நிறுவனங்களின் இழப்பு, 37 சதவீதம் குறையக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, எண்ணெய் நிறுவனங்களின் இழப்புக்கு அரசு ஒதுக்கும் பட்ஜெட் குறையும். ஆனால் நமக்கான எல்.பி.ஜி., சிலிண்டர் விலை குறைய வாய்ப்பில்லை. மத்திய அரசு அடித்த மாங்காய்கள் 1 எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாமல் சமாளிக்கலாம் 2 மேற்காசிய நாடுகளை சார்ந்திருப்பதை தவிர்க்கலாம் 3 எண்ணெய் நிறுவனங்கள் நஷ்டத்தை குறைக்கலாம் 4 நஷ்ட இழப்பீடு வழங்க வேண்டியதை குறைக்கலாம் 5 போட்டியால் குறைந்த விலையில் எல்.பி.ஜி., கிடைக்கலாம் 6 அமெரிக்காவுடன் வர்த்தக இடைவெளியை சமப்படுத்தலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை