வீட்டின் உள்ளே மாடி படிக்கட்டு எவ்வாறு அமைக்க வேண்டும்?
ஒட்டுமொத்த கட்டடப் பரப்பில், மூன்றில் ஒரு பங்கோ அல்லது நான்கில் ஒரு பங்கோ வீட்டு வரவேற்பறையாக அமைந்திருந்தால், சிறப்பாக இருக்கும். சிலர் வரவேற்பறை மிகப் பெரியதாக இருக்க வேண்டும் என்பதற்காக, கட்டடப் பரப்பில் இரண்டில் ஒரு பங்கு அமைப்பார்கள். அது அவசியமல்ல. தெருவைப் பார்த்தபடியோ, காம்பவுண்ட் வாசலுக்கு நேராகவோ வரவேற்பறையை அமைக்க வேண்டாம். குறைந்தபட்சம் நான்கடி உயர ஜன்னல்கள், அறையில் இருக்க வேண்டும். வீட்டுக்குள் இயற்கையான காற்றும், வெளிச்சமும் வருவது மின் சிக்கனத்துக்கும் நல்லது.சூரிய வெளிச்சம், நோய் உண்டாக்கும் நுண்ணுயிர்க் கிருமிகளைக் கொன்று விடும். அதனால் உடலுக்கும் ஆரோக்கியம். ஜன்னல்கள் எதிர் எதிர் திசையில் இருப்பது அமைப்பாக இருக்கும். இடப் பற்றாக்குறை இருக்கும் பட்சத்தில் வரவேற்பறையின் மூலையிலேயே, கழிப்பறை அமைக்கலாம். அப்படி இல்லாதபட்சத்தில் வீட்டின் பின்புறம் அமைப்பது நல்லது. .அதுபோல, வரவேற்பறையை வடிவமைக்கும் முன், அறையில் அறைக்கலன்களை எங்கு, வைக்கப் போகிறோம் என்பதை முடிவு செய்ய வேண்டும். வரவேற்பறையில், ஒரு புத்தக அலமாரி நிறுவுவதாக இருந்தால் அறை கட்டுவதற்கு முன்பே முடிவெடுப்பது நல்லது. அதற்கேற்ப வரவேற்பறையை அழகாகக் கட்டலாம்.வரவேற்பறையின் உள்ளே, மாடிப்படிகளை அமைப்பது, முன்பைவிட இப்போது பேஷனாக மாறிவிட்டது. படிக்கட்டுகளை அமைப்பதில் இரு வகைகள் உண்டு. ஒன்று வெளிப்புறமாக, மற்றொன்று வரவேற்பறையிலேயே உட்புறப் படிக்கட்டுகள் அமைத்துக்கொள்ளலாம்.படிக்கட்டுகள் நல்ல நீள அகலங்களோடும், திருப்பங்களுடனும் அமைய வேண்டும். திருப்பங்கள் அற்ற படிக்கட்டுகள், ஏறுவதற்கு நல்லதல்ல. வட்ட வடிவத் திருப்பம் அமைப்பதிலும் பல வகைகள் உள்ளன. அதில் நமக்கு பிடித்தமானதைத் தேர்ந்தெடுக்கலாம் என்கின்றனர் கட்டட வல்லுனர்கள்.
பெரியவர்களுக்கும் வசதியாக!
படிக்கட்டுகள் அமைக்கும் விஷயத்தில், அழகுணர்வு அவசியம். அதே நேரத்தில் அழகாக அமைக்கிறோம் என்று, வீட்டில் உள்ள பெரியவர்கள் பயன்படுத்த முடியாதபடிக்கு சிரமமான முறையில், படிகளை அமைத்து விடக்கூடாது. அதனால் வீட்டில் உள்ளவர்களின் உடல் நிலையையும் கவனத்தில்கொள்ள வேண்டும்.