உள்ளூர் செய்திகள்

/ கனவு இல்லம் / சிறப்பு கட்டுரை / வசதிகள் குறைபாடு உள்ள இடத்தில் வீடு வாங்கினால் என்ன நடக்கும்?

வசதிகள் குறைபாடு உள்ள இடத்தில் வீடு வாங்கினால் என்ன நடக்கும்?

சொந்தமாக வீடு, மனை வாங்கும் போது அடிப்படையில் பல்வேறு எதிர்பார்ப்புகள் அனைவருக்கும் இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், எதார்த்த சூழலில், அனைத்து எதிர்பார்ப்புகளும் முழுமையாக நிறைவேறுமா என்பது பலருக்கும் கேள்விக்குறிதான். குறிப்பாக, நல்ல போக்குவரத்து வசதிகள் இருக்கிறது; ரயில், பஸ் நிலையம் பக்கத்திலேயே இருக்கிறது என்று சென்றால் அங்கு தண்ணீர் பற்றாக்குறை இருக்கும். நல்ல தண்ணீர் வசதி இருக்கிறது என்று ஒரு பகுதியை தேர்வு செய்தால், அங்கிருந்து பிற பகுதிகளுக்கு சென்று வர முறையான சாலை வசதி கூட இருக்காது. இது போன்ற நிலையில் ஒரு வீட்டை அல்லது மனையை வாங்குவதற்காக தேர்வு செய்யும் நபர்கள், எந்த விஷயத்துக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. குறிப்பாக உங்களது அடிப்படை தேவைகள் என்ன என்பதை தெளிவாக புரிந்து, அதை சார்ந்து தான் எந்த முடிவையும் எடுக்க வேண்டும். ஒரு வீடு, மனை வாங்க வேண்டும் என்றால் அது அமைந்துள்ள பகுதி நீங்கள் வசிக்க பாதுகாப்பான சூழலில் உள்ளதா என்று பாருங்கள். இதில் தண்ணீர் வசதியும், சாலை வசதியும் மிக மிக முக்கியமான அடிப்படை தேவைகள் என்பதை கவனத்தில் வைத்து செயல்படுங்கள். வீடு, மனை வாங்கும் போது அதற்கான நிலம் எத்தகைய இடத்தில் அமைந்துள்ளது, அங்கு குடியேறும் நிலையில் என்னென்ன பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்று பாருங்கள். உதாரணமாக, சென்னை புறநகரில் அதிகம் வளர்ச்சி இல்லாத இடத்தில் ஒரு நிறுவனம் அடுக்குமாடி குடியிருப்பு கட்டியுள்ளது. மற்ற இடங்களை விட இங்கு சற்று விலை குறைவாக வீடு கிடைக்க வாய்ப்புள்ளது என்றாலும், அந்த இடத்துக்கு தினமும், எந்த நேரத்திலும் எளிதாக சென்று வர முடியுமா என்று பாருங்கள். அந்த வீடு அமைந்துள்ள பகுதி அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய கிரெட்டட் கம்யூனிட்டியாக இருந்தாலும், வேலைக்கு வெளியில் தான் சென்று வர வேண்டும். குறிப்பாக இன்றைய சூழலில், அரசு, தனியார் என எந்த வகை பணியானாலும், அதற்கு எந்த நேரத்திலும் சென்று வர வேண்டிய தேவை இருக்கும். அடிப்படை வசதிகளில் சில விஷயங்கள் இல்லை என்பதை உணர்ந்து வீடு, மனை வாங்கும் போது மனதளவில் சரியான புரிதலுடன் செயல்பட வேண்டும். எந்த வசதி விஷயத்தில் குறைபாடு உள்ளதோ அதற்கான மாற்று ஏற்பாடு என்ன என்று பார்க்க வேண்டும். அந்த மாற்று வசதியை ஏற்படுத்தவும், பயன்படுத்தவும் என்ன செலவாகும் என்பதையும கருத்தில் கொள்ள வேண்டும். இத்துடன் நில்லாமல், இது போன்ற மாற்று ஏற்பாடுகளால் புதிதாக ஏதாவது பிரச்னை வர வாய்ப்புள்ளதா என்பதையும் கவனத்தில் கொள்வது அவசியம் என்கின்றனர் நகரமைப்பு வல்லுனர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை