சிறிய அடுக்குமாடி கட்டடங்கள் மொத்தமாக இடிந்து விழ காரணம் என்ன?
பொதுவாக அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் போது, அதன் அடிப்படை கட்டமைப்புகள் உறுதியாக இருக்க வேண்டும் என்பதில் பொறியாளர்கள் கவனமாக இருப்பர். ஆனால், சில இடங்களில், 3 மாடி, 4 மாடி கட்டடங்கள் மழை வெள்ள காலத்தில் மொத்தமாக சரிந்து விழுவதை செய்திகளில் பார்த்து இருப்போம். இது போன்ற செய்திகளை பார்க்கும் போது, அடுக்குமாடி திட்டங்களில் வீடு வாங்குவோர், ஏற்கனவே வாங்கி குடியிருப்பவர்களுக்கு அச்சம் ஏற்படுவது இயற்கை தான். எங்கோ ஒரு இடத்தில் நீர் வழித்தடத்தில் கட்டப்பட்ட ஒரு கட்டடம் மொத்தமாக இடிந்து விழுகிறது என்றால், அந்த தகவலை அனைத்து கட்டடங்களுக்கும் பொருத்தி பார்க்கக் கூடாது. இந்த குறிப்பிட்ட இடத்தில், இந்த கட்டடம் இடிந்து விழுந்தது, அதில் எத்தனை பேர் சிக்கினர், அவர்கள் எப்படி மீட்கப்படுகிறார்கள் என்பதற்கு அப்பால், அந்த கட்டடத்தில் நடந்த குறைபாடு என்ன என்பதை பலரும் அறிவதில்லை. இது போன்ற கட்டட விபத்துகளின் பின்னணி குறித்து, பொது மக்கள் விழிப்புணர்வு அடைய வேண்டும். சென்னையில் கடந்த சில ஆண்டுகுளுக்கு முன் நடந்த சில விபத்துகள் அடிப்படையில், கட்டுமான நிறுவனங்கள் மத்தியில் விபத்துகள் குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. இதனால், எந்த பகுதியில் கட்டடம் கட்டினாலும், அதன் அஸ்திவார துாண்கள் உறுதியாக இடத்தில் நிற்க வேண்டும் என்பதில், கட்டுமான பொறியாளர்கள் கவனமாக இருக்கின்றனர். கட்டடத்தின் மொத்த உயரம் எதுவாக இருந்தாலும், அதன் அஸ்திவார துாணின் அடி பாகம், உறுதியான மண் அடுக்கு அல்லது பாறையின் மேல் அமர வேண்டும். அப்போது தான், அந்த கட்டடத்தில் எவ்வளவு சுமை அதிகரித்தாலும், உறுதித் தன்மை குலையாமல் நிற்கும்.இது விஷயத்தில் விபத்து நடந்த கட்டடங்கள் குறித்த முழுமையான விசாரணை விபரங்களை பார்க்கும் போது, அதில் முறையான தொழில் முறை வல்லுனர்கள் பங்கேற்கவில்லை என்பது தெரிகிறது. குறிப்பாக, கட்டட அமைப்பியல் பொறியாளர், கட்டட வடிவமைப்பாளர், கட்டுமான பொறியாளர் ஆகிய நிலைகளில் முறையாக பதிவு செய்த நபர்களை பயன்படுத்த வேண்டும். சிறிய அளவிலான அடுக்குமாடி குடியிருப்புகளில் இன்னொரு தவறும் பொதுவாக காணப்படுகிறது. ஒரு இடத்தில் தரைதளம் மற்றும் முதல் தளம் வரையிலான வீட்டை அதன் உரிமையாளர், தகுந்த பொறியாளர்கள் வழிகாட்டுதல் இன்றி, பணியாளர்களை அமர்த்தி கட்டியிருப்பார். சில ஆண்டுகள் கழிந்த நிலையில், அந்த கட்டடத்தில் கூடுதலாக, 2 தளங்களை கட்டி இருப்பார். ஆனால், அந்த கட்டடத்துக்கு, இரண்டு தளத்தின் சுமையை தாங்கும் அளவில் மட்டுமே அஸ்திவார துாண்கள் அமைக்கப்பட்டு இருக்கும் நிலையில், கூடுதல் தளங்களால் ஏற்படும் சுமையை தாங்க முடியாத நிலை ஏற்படும். எனவே, சிறிய வகை அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு வாங்குவோர் அதன் ஸ்திர தன்மை குறித்து கட்டட அமைப்பியல் பொறியாளரின் அறிக்கை பெறுவது அவசியம் என்கின்றனர் கட்டுமான பொறியாளர்கள்.