உள்ளூர் செய்திகள்

25ஏப்ரல் 2008: ஒரு டாக்டரின் டைரி குறிப்பு

ஐந்தாம் வகுப்பு, படிக்கும் தன் மகன் சந்தோஷை, பள்ளிக்கூடம் முடியும் முன்பே, ஆசிரியர் அழைத்து வருவதை பார்த்த கோமதிக்கு, அதிர்ச்சியானது. தன் பிள்ளையின் உடல்நலத்திற்கு, என்னவோ ஏதோ என்ற பயம் தொற்றிக்கொண்டு, ஆசிரியரின் வார்த்தைகளுக்காக காத்திராமல், ''என் மகனுக்கு என்னாயிற்று,'' என்று, பதறி கேட்டிருக்கிறார்.''பள்ளியில், சந்தோஷ் எழுதிக் கொண்டிருக்கும் போது, அவனது மூக்கில் இருந்து ரத்தம் வந்தது. உடனே அழைத்து வந்துவிட்டேன்,'' என்றார்.கோமதி, தனக்கேற்பட்ட பயத்தையும், பதற்றத்தையும் சந்தோஷிடம், காட்டிக் கொள்ளாமல், 2008ம் ஆண்டு, ஏப்ரல் மாதம், அழைத்து வந்தார்.கோமதியின் கணவர் திருமலை, ரத்தப்புற்று நோயால், சில ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டாராம். தன் கணவனை வாரிக்கொண்டு சென்ற ரத்தப்புற்று எனும் சாத்தான், தன் ஆசை மகனையும் அள்ளிச் செல்ல வந்திருக்கிறதோ என, கோமதி பயந்தார். பரிசோதனைகள் செய்தோம். சந்தோஷின் சந்தோஷத்தை பறிக்க காத்திருந்தது, அவனது உடலில் வேர்விட்டிருந்த ரத்த புற்று.புற்றுநோய் எதனால் வருகிறது?உடலில், இருக்கும் செல்களில் ஏற்படும், விபரீத மாற்றமே புற்றுநோய்க்கான காரணம். நம் உடலில் இருக்கும் எல்லா உறுப்புகளிலும், வயதான மற்றும் சேதமடைந்த செல்கள் மறைவதும், அவற்றின் இடத்தை புதிய செல்கள் வளர்ந்து நிரப்புவதும், இயல்பாக, தொடர்ந்து நடக்கும் செயல்.இந்த நிலையில், சில செல்களில் மட்டும் ஏற்படும் விபரீதமான மரபணு மாற்றம், புற்றுநோய்க்கு காரணமான செல்களாக உருமாறி விடுகிறது. வாய்ப்புற்று, நுரையீரல் புற்று, கர்ப்பப்பை புற்று, கர்ப்பப்பை வாய் புற்று, தொண்டைப் புற்று, ரத்தப் புற்று, எலும்புப் புற்று, மார்பகப் புற்று, குதப் புற்று, கணைய புற்று, தோல் புற்று என, புற்றுநோயின் பட்டியல் வெகுநீளம்!உடலின் எந்த பகுதியையும் இந்த நோய் தாக்கும். எந்த இடத்தை தாக்குகிறதோ, அதைப் பொறுத்துதான், அறிகுறிகள்!குணமாகாத புண், ரத்த வாந்தி அல்லது புறவழி ரத்தப்போக்கு, சளியில் ரத்தம் வெளிப்படுதல், கட்டி பெரிதாகிக் கொண்டே இருத்தல் ஆகியவற்றை, புற்றுநோயின் அறிகுறி என்று கூறலாம்.நோயின் தாக்கத்தை பொறுத்தே, சிகிச்சை முறைகள் உள்ளன. ரத்தப்புற்றுக்கு கீமோதெரபி மற்றும் டார்ஜெட்டட்தெரபி எனும் சிகிச்சைகள் உள்ளன. ஏழு ஆண்டுகள் கடந்தும், மரணத்தின் பிடியிலிருந்து, சந்தோஷ் தப்பி, மருத்துவ உதவியோடு வாழ்ந்து கொண்டிருக்கிறான்.இனி எவ்வளவு நாள் வாழ்வான் என்று தெரியாது. ஆனால் சந்தோஷின் கடைசி நிமிடம் வரை, அவனது சந்தோஷத்திற்கு குறைவு வரக்கூடாது என்பதே, என் பிரார்த்தனை.- துரை. ஜெயகுமார், புற்றுநோய் அறுவைசிகிச்சை நிபுணர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்