உள்ளூர் செய்திகள்

ஒரு டாக்டரின் டைரி குறிப்பு

ஜரினாவுக்கு இருந்த பிரச்னை தீர்ந்து விட்டதாம். ஆனாலும், அலைபேசியில் ஒலித்த அவளது குரலில் சந்தோஷத்திற்கு பதிலாக அவ்வளவு சோகம்! எப்படி இல்லாமல் இருக்கும்? தாய்மை அடையும் வாய்ப்பு இன்று அவளுக்கு பறிபோயிருக்கிறது. அந்த வலி அனுபவிப்பவளுக்கு மட்டுமே தெரியும். ஒரு பெண் என்பதால், என்னாலும் அந்த வலியை உணர முடிகிறது.ஜரினாவை நான் முதன்முதலில் சந்தித்தபோதுதான், 'தாய்மை அடையப் போகும் செய்தி, எல்லாப் பெண்ணுக்குமே சந்தோஷம் கொடுத்து விடாது' என்பதை உணர்ந்தேன். அன்று, தன் கர்ப்பம் பற்றிய குழப்பத்தை நிவர்த்தி செய்ய அவள் என்னிடம் வந்திருந்தாள். 'சொந்தம் விட்டுப் போய்விடக் கூடாது' என்ற தந்தையின் விருப்பம் நிறைவேற்ற, சொந்த மாமனுக்கு 21 வயதிலேயே வாழ்க்கைப் பட்டிருந்தாள் அவள்.அவளுக்கு 'சினைப்பை நீர்க்கட்டி' பிரச்னை உண்டு. ஆனால், அப்போதைய பிரச்னை அதுவல்ல! அவளது கர்ப்பம் உறுதி செய்யப் பட்டிருந்தாலும், 'கரு' இருக்குமிடத்தை 'ஸ்கேன்' முடிவுகள் சொல்லவில்லை. மீண்டும் பிரபல ஆய்வகத்தில் 'ஸ்கேன்' செய்து பார்த்தோம். கரு இருக்குமிடம் புலப்பட்டது. ஜரினாவின் இரண்டு மாத கரு, வலது சினைப்பையிலேயே வளர்ச்சி அடையாமல் தங்கியிருந்தது. சினைப்பையில் இருந்த 8 செ.மீ., அளவுள்ள இரண்டு நீர்க்கட்டிகள் கருவை அழுத்திக் கொண்டிருந்தன.'சினைப்பையில் கரு தங்குவது தாய்க்கு ஆபத்து. இதற்கு ஒரே சிகிச்சை சினைப்பையை அகற்றுவதுதான்! இரண்டு சினைப்பைகளில் ஒன்றை அகற்றுவதனால், குழந்தைபேறுக்கான வாய்ப்புகள் 50 சதவீதம் குறைந்து விடும்' என்று ஜரினாவிடம் நான் சொன்னதும், அவள் உடைந்து போனாள். புகுந்தவீட்டு உறவுகளை எண்ணி பயந்தாள். அவளுடைய திருப்திக்காக, கைதேர்ந்த பெண்கள் நல மருத்துவரிடம் ஆலோசனைக்கு அனுப்பினேன்.இன்று, அவளது கண்ணீருக்கு கடவுள் மனம் இரங்கியிருக்கிறார். அம்மருத்துவரின் சிகிச்சையால், அறுவை சிகிச்சை இல்லாமலேயே, சினைப்பையிலிருந்த கரு சிறுநீரகக் குழாய் வழியாக வெளியேறி இருக்கிறது! ஆனாலும், தான் பிழைத்துவிட்ட சந்தோஷத்தை விட, ஓர் உயிர் உருகிவிட்ட வலிதான் அவளை வாட்டி வதைக்கிறது.ஜரினாவின் தந்தை நெகிழ்ந்து போய் என்னிடம் நன்றி சொன்னார். ''அவளது இந்த நிலைக்கு நீங்கள்தான் காரணம்'' என்று அவரிடம் நான் கோபித்துக் கொண்டேன். ''மரபணு குறைபாடுகளால்தான் ஜரினாவுக்கு இவ்வளவு சிரமம். சொந்தத்தில் திருமணம் செய்ததுதான் இப்பிரச்னைக்கு மூலகாரணம்'' என்றேன். அவரிடம் பதில் இல்லை. அந்த மவுனம், செய்த தவறை அவர் உணர்ந்து விட்டதாகவே எனக்குத் தோன்றியது.- டாக்டர் சாந்தி, காந்த அதிர்வலை மருத்துவர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !