ஒரு டாக்டரின் டைரி குறிப்பு
24டிசம்பர் ஒரு டாக்டரின் டைரி குறிப்புஏழைக் குடும்பத்தில் பிறந்த திவ்யா, படித்த, அழகான பெண். சராசரி பெண்களுக்கான அத்தனை கனவுகளோடும் இருந்தவள். சரியாக, 2 மாதங்களுக்கு முன்பு அந்த சம்பவம் நிகழ்ந்தது. அவள் திருமணத்திற்கு முந்தைய நாள் மாலை... மருதாணி போட்டுக் கொள்வதற்காக, தன் அண்ணனுடன், இரு சக்கர வாகனத்தில் அழகு நிலையத்திற்கு பயணித்திருக்கிறாள்.இரு கைகளிலும் மருதாணி போட்டுக் கொண்டு வீடு திரும்பியபோது, வழியில் விபத்து! மருதாணியோடு சேர்ந்து, திவ்யாவின் வாழ்க்கையும் அன்று அலங்கோலமாகியது. கீழே விழுந்ததில், திவ்யாவின் மூளை தண்டுவடத்தில் பிரச்னை ஏற்பட்டு, உடனே மரணம்.பொதுவாக, நம் மூளையானது இரண்டு பகுதிகளைக் கொண்டது. முதலாவது, மூளைப் புறணி; இது, மூளையின் மிகப் பெரிய பாகம்; இது, இரண்டு அரைக்கோளங்களாக, மேடு பள்ளமாக இருக்கும். இரண்டாவது, மூளைத்தண்டு; இது, தண்டுவடத்தை மூளையின் புறணியுடன் இணைக்கும் பகுதி! தலையில் கடுமையான காயம் உண்டாகும் நேரத்தில், புறணி வீங்கத் தொடங்கும். ஆனால், உறுதியான கபாலத்துக்குள் இருப்பதால், மூளையின் வீக்கம் ஒரு கட்டத்திற்கு மேல் அதிகரிக்க முடியாமல், மூளையில் அழுத்தம் உண்டாகும். இந்த அழுத்தம், இதயத்தின் அழுத்தத்தை விட அதிகமாகும்போது, இதயத்தால் மூளைக்கு ரத்தத்தை அனுப்ப முடியாது.ரத்த ஓட்டம் இல்லாத நிலையில், ஆக்ஸிஜன் கிடைக்காததால், மூளைத்தண்டு உட்பட, மூளை முற்றிலுமாக செயல் இழக்கிறது. இதோடு, மூளைச் செல்கள் நீர்த்துப் போகவும் செய்கின்றன. இதன் விளைவுதான் மரணம். ஆனால், இதயம் மட்டும் துடித்துக் கொண்டிருக்கும்! ஏனெனில், இதயத்தின் இயக்கம் மூளையைச் சார்ந்து இருப்பதில்லை. அதனால்தான், மூளைச்சாவு அடைந்த பின்னும் இதயம் வேலை செய்கிறது. இந்த, மூளைச்சாவு பல காரணங்களால் ஏற்படுகிறது என்றாலும், மிக முக்கிய காரணமாக இருப்பது விபத்து மட்டுமே! அதிலும், இருசக்கர வாகன விபத்தே, இப்பிரச்னைக்கு பெரிதும் காரணமாகிறது.மூளைச்சாவு அடைந்த திவ்யாவின் உடல் உறுப்புகள், தானமாக கொடுக்கப்பட்டன. இன்று, திவ்யாவால் ஆறு பேர் உயிர் வாழ்கின்றனர். ஆனாலும், திவ்யாவின் மரணத்தை என்னால் இப்போது வரை ஜீரணிக்க முடியவில்லை. மரணம் தழுவ வேண்டிய வயதா அது? ஜோ. அமலோர்பவ நாதன்,ரத்தநாள அறுவை சிகிச்சை துறை இயக்குனர்.