உள்ளூர் செய்திகள்

கொஞ்சம் கவனம்... கொட்டும் நிம்மதி!: உஷ்ணத்தை சமன் செய்யும் வியர்வை!

வைரஸ், பாக்டீரியா மற்றும் பூஞ்சை போன்ற தொற்றுகளால், கோடை காலத்தில், வியர்க்குரு, வேனல் கட்டி, சிவப்பு நிறத் திட்டுக்கள் போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. வெயில் காலத்தில், இரண்டு வேளையும் குளிப்பதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். குளித்து முடித்ததும், ஈரத்தை நன்றாகத் துடைத்து, சருமம் உலர்ந்த உடன், 'காலமைன் லோஷன்' தடவலாம். வியர்க்குரு, கட்டி, தடிப்புகள் இருப்பவர்கள், குளிப்பதற்கு, 'ஆன்டிபயாடிக்' சோப்புகளை பயன்படுத்தலாம். கோடையில் பருத்தி ஆடைகளை மட்டுமே அணிய வேண்டும்; இவை வியர்வை உறிஞ்சுவதோடு, காற்றோட்டமாகவும் இருக்கும். உடம்பில் தேவையில்லாத ரோமங்களை அகற்றி விடுவது நல்லது.பருவநிலை மாற்றங்கள் ஏற்படும் போது, ஜீரண சக்தி குறைவாக இருக்கும்; அதனால், எளிதாக செரிமானம் ஆகக் கூடிய உணவுகளை சாப்பிட வேண்டும்.பூரி, வடை, தோசை போன்ற எண்ணெய் அதிகம் உள்ள உணவுகளைத் தவிர்த்து, ஆவியில் வேக வைத்த இட்லி, இடியாப்பம் போன்ற உணவு வகைகளை சாப்பிடலாம். அசைவ உணவு சாப்பிடுபவர்கள், கோடை காலத்தில் அதை தவிர்ப்பது நல்லது. சாப்பிட்டே ஆக வேண்டிய கட்டாயம் எனில், வாரத்திற்கு ஓரிரு நாட்கள் சாப்பிடுங்கள்; அதிலும் அதிக மசாலா சேர்த்து சமைக்காமல், அப்படியே வேக வைத்து சாப்பிடலாம். பொரித்த, வறுத்த உணவுகளை தவிர்க்கலாம்.காய்கறி, பழங்கள் அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். இயற்கையிலேயே அவற்றில் நீர்ச்சத்து அதிகம் என்பதால், நீர்ச்சத்து குறையாமல் இருக்க உதவும்.ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற, வைட்டமின் சி சத்து அதிகம் உள்ள, பழச்சாறு தினமும் அருந்தலாம். ஒரு நாளைக்கு மூன்று லிட்டர் தண்ணீர் அவசியம் குடிக்க வேண்டும். தயிர் தவிர்த்து, மோர் குடிக்கலாம்.உடல் பருமன் அதிகம் உள்ளவர்களுக்கு தொடைகளின் உள்பக்கம், கக்கங்கள் போன்ற பகுதிகளில், கட்டிகள் வரலாம்; கட்டிகள் வந்த இடத்தை, சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். ஈரத்தை துடைத்து, உலர்வாக வைத்து 'டால்கம் பவுடர்' தடவலாம்.வியர்வை அதிகமாக இருப்பவர்களும், இந்த விஷயங்களை தவறாமல் பின்பற்ற வேணடும். வெயில் காலத்தில், உடல் வெப்பத்தை சமன் செய்ய, வியர்வை அவசியம். வியர்க்காமலேயே இருக்கக் கூடாது; உடல் வெப்பம் அதிகமாகி விடும்.வழக்கம் போல இல்லாமல், வியர்க்கும் போது, ஏதாவது வித்தியாசம், உடலில் மாற்றம் தெரிந்தால், உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டியது முக்கியம்.டாக்டர் ஷர்மதாதோல் சிறப்பு நிபுணர்.dr.sharmatha@gmail.com


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்