டாக்டரின் டைரி குறிப்பு
ஜூன், 5, 2016: 'நாத்தனார் லஷ்மிக்கு சேவை செய்தே என் பிராணன் போகிறது' என்று, வாசுகி புலம்ப ஆரம்பித்ததோடு, நாத்தனாரை பார்த்துக் கொள்ள ஆள் அமர்த்துமாறு கணவரிடம் சண்டையிட ஆரம்பித்துவிட்டார். லஷ்மிக்கு மார்பக புற்றுநோய். கணவரது வீட்டார் கைவிட்ட நிலையில், அண்ணன் வீடு தான் அடைக்கலம் என்று வந்துவிட்டார். நோயின் தீவிரம் அதிகமானதால், மார்பகங்களில் இருந்து ரத்தம், சீழ் வழிந்தது; தினமும் சுத்தம் செய்ய வேண்டிய கட்டாயம். இதனால் ஏற்பட்ட சலிப்பின் காரணமாக என்னைத் தொடர்பு கொண்டார்.செல்களின் சீரற்ற வளர்ச்சியே புற்றுநோய். இரண்டின் மடங்காகப் பிரியும் செல்கள், முறையற்று பிரிந்து வேகமாக வளர்ந்து, அருகில் உள்ள திசுக்களை பாதிக்கிறது. தாய்ப்பால் கொடுக்காதது, மரபியல் காரணம், வாழ்க்கை முறை மாற்றம், சுற்றுச்சூழல் மாசு போன்ற பல காரணங்களால் மார்பகப் புற்றுநோய் ஏற்படுகிறது. முதல் நிலையில், சிறிய கட்டிகள் தோன்றும்; அடுத்தடுத்த நிலைகளில் மார்புக் காம்புகள் உள் வாங்கி, மார்பகங்கள் இறுகும். மார்பகத்தின் அளவும் வடிவமும் மாறுபடும். மார்புக் காம்பிலிருந்து ரத்தம் அல்லது நீர் போன்ற திரவம் கசியலாம்.40 வயதிற்கு மேற்பட்டவர்கள், மாதம் ஒருமுறை மார்பகங்களை சுய பரிசோதனை செய்வது அவசியம். மார்பகப் புற்று நோயை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்தால் முற்றிலும் குணப்படுத்த முடியும். 40 வயதிற்கு மேல், 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை மேமோகிராம் செய்வதும் நல்லது.புற்றுநோயில் ஆரம்ப கட்டம், இரண்டாம் நிலை, தீவிரம், அதிதீவிரம் என நான்கு நிலைகள் உள்ளன. அதிதீவிர நோயாளிகளை குணப்படுத்த இயலாது. காரணம், நோயின் தீவிரம் மற்ற உடல் உறுப்புகளுக்கும் பரவக்கூடிய வாய்ப்பு உண்டு. இந்த நிலையில், வலி நிவாரணம் மற்றும் ஆதரவு சிகிச்சை முறையில் நோயாளிகளை பராமரிப்பது ஒன்று தான் வழி. அதீத வலி மற்றும் நோய்த் தொற்றினால் ஏற்பட்ட பாதிப்பு களுக்கு, வலி மருந்துகள் கொடுக்கிறோம். இதனால், நோயாளி தன் இறுதி நாட்கள் வரையிலும் வலி தெரியாமல் இருப்பார். ஹார்மோன் சிகிச்சையும் கொடுக்கப்பட்டு நோயின் தீவிரம் குறைக்கப்படுகிறது. நோய் தீவிரத்தால் ஏற்பட்ட மற்ற உடல் பாதிப்புகளும் முறையாக பராமரிக்கப்படுவதால், நோயாளி மற்றும் உறவினர்களின் மன அழுத்தம் குறைகிறது. லஷ்மிக்கு வலி மற்றும் ஆதரவு சிகிச்சை மூலம் அவரது நோய் பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டு நன்றாக இருக்கிறார்.ரிபப்ளிகா ஸ்ரீதர், வலி நிவாரணம் மற்றும் ஆதரவு சிகிச்சை நிபுணர்.93810 16588