எலும்பை துல்லியமாக பொருத்த எளிய கருவி
மதுரையை சேர்ந்த டாக்டர் என்.வெங்கடாசலபதி, அறுவை சிகிச்சைக்கு உதவும் கருவியை அண்மையில் கண்டுபிடித்ததன் மூலம் மருத்துவ உலகையே திரும்பி பார்க்க வைத்திருக்கிறார்.மதுரை ஹன்னா ஜோசப் மருத்துவமனையில் வாய், முக அறுவை சிகிச்சை நிபுணராக பணிபுரியும் இவரின் சொந்த ஊர் சங்கரன்கோவில். எம்.டி.எஸ்., மற்றும் அமெரிக்க பெல்லோஷிப் பட்டம் பெற்ற இவர், முக அறுவை சிகிச்சையில்(பேஷியல் சர்ஜரி) பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியவர். முக எலும்புகளை '3 டி' முறையில் துல்லியமாக, நேர்த்தியாக பொருத்துவதற்கான கருவியை உருவாக்க ஐந்தாண்டுகளாக ஆராய்ச்சி செய்து வந்தார். ஆராய்ச்சியின் பயனாக, மிக குறைந்த விலையில், உடைந்த எலும்பை இணைத்து பொருத்துவதற்கான, இந்த்வெஸ்(Indvess-bone stabilizer) என்ற கருவியை டிசைன் செய்து உருவாக்கினார். இதுவரை இக்கருவி மூலம் 240 பேருக்கு முக அறுவை சிகிச்சை நடந்துள்ளது. நாடு முழுவதிலும் இருந்து 27 மருத்துவ நிறுவனங்கள் இக்கருவியை வாங்கியுள்ளன. இதற்கான காப்புரிமைக்கும் விண்ணப்பித்துள்ளார்.டாக்டர் வெங்கடாசலபதி கூறியதாவது:அண்மையில் சென்னையில் நடந்த இந்தோ- - ஜப்பான் மருத்துவ மாநாட்டில், கண்டுபிடிப்புகள் பிரிவில் இந்த கருவிக்கு முதல் பரிசு கிடைத்தது. இதுவரை 1400 டாக்டர்கள் இக்கருவியின் பயனை ஏற்றுக்கொண்டுள்ளனர். உடலின் பிற பகுதிகளுக்கும், எலும்பு பொருத்தும் அறுவை சிகிச்சையில் இக்கருவியை பயன்படுத்த, 'ஆர்த்தோ' டாக்டர்கள் இது தொடர்பான கருத்துக்களை கேட்டுள்ளனர்.இந்த கருவியின் கண்டுபிடிப்பிற்காகவும், பயன்பாட்டை விளக்கவும் மே 20 முதல், பிரேசிலில் நடக்கும் உலக வாய், முக அறுவை சிகிச்சை மாநாட்டில், இந்தியா சார்பில் பங்கேற்க நான் தேர்வு செய்யப்பட்டுள்ளது, மட்டற்ற மகிழ்ச்சியை அளிக்கிறது.விபத்துக்களில் சிக்கி முகம் சிதையும் நோயாளிகளுக்கு அதிக பணச்செலவு இல்லாமல், துல்லியமாகவும், நேர்த்தியாகவும் முகஅறுவை சிகிச்சை செய்து, பழைய முக அமைப்பை மீட்டுத்தர என் முயற்சிகளும், ஆராய்ச்சிகளும் தொடரும். நவீன மருத்துவத்தின் பயன்கள், ஏழை மக்களுக்கும் சென்று சேரவேண்டும் என்பதே என் லட்சியம் என்றார்.இவரை வாழ்த்த 98421 75746ல் தொடர்பு கொள்ளலாம்.