உள்ளூர் செய்திகள்

நோய்கள் ஜாக்கிரதை : மறுபடியுமா

நம்மில் பலர், சந்தேகத்தின் பேரில் செய்த செயலையே திரும்பத் திரும்ப செய்து கொண்டிருப்போம். இது எண்ண சுழற்சி நோயின் அறிகுறியாக கூட இருக்கலாம்! கட்டுப்படுத்த முடியாத எண்ணங்கள் மூளையில் தோன்றி, அந்த எண்ணத் துாண்டுதலின் பேரில் ஒரு செயலை மறுபடி மறுபடி செய்வதே இந்நோயின் அறிகுறி. இதனை ஆங்கிலத்தில் OBBSESSIVE COMPULSIVE DISORDER என்கின்றனர்.ஏழு வயது குழந்தைக்கும், எழுபது வயதுக்காரருக்கும் கூட இந்நோய் வரலாம். ஆரம்பத்தில் இந்த நோய் தாக்கியவர்கள் சில விசித்திரமான செயல்களைச் செய்வர். உதாரணத்திற்கு, கை கழுவுவது! இவர்கள், ஒரு முறை கை கழுவியவுடன் நிறுத்த மாட்டார்கள்; தொடர்ந்து ஐந்தாறு முறை கழுவுவார்கள்! தங்களின் கைகளில் இருக்கும் கிருமி போகவில்லை என்றே நினைத்துக் கொண்டிருப்பார்கள். அவர்களின் எண்ணம், அவர்களை துன்புறுத்திக் கொண்டே இருக்கும். அந்த சிந்தனையில் இருந்து வெளியேற முடியாமல் கஷ்டப்படுவார்கள். நோயின் வீரியம் அதிகமாக, அதிகமாக குளியல் சோப்பில் கை கழுவியவர்கள், துணி துவைக்கும் டிடர்ஜெண்டுகளில் கைகளை கழுவ ஆரம்பிப்பார்கள். அப்போதும், கைகளில் உள்ள அழுக்கு போகவில்லை என்ற எண்ணத்தில், துணி துவைக்கும் சோப்புக் கட்டிகளால் கைகழுவுவார்கள். இப்படி, நாள் முழுவதும் கைகளை கழுவிக்கொண்டே இருப்பார்கள்.நம்மில் பலர் வெளியில் கிளம்பிப் போகும்போது, வீட்டை பூட்டி விட்டோமா என்று பூட்டை இழுத்து சரிபார்ப்போம். அப்போதும்கூட, சந்தேகம் தீராமல், பூட்டில் தொங்குவதும் உண்டு. ஒருவகையில், இதுவும் இந்நோயின் அறிகுறிதான்!இதற்கெல்லாம் சிகிச்சை முறைகள் உள்ளன என்றாலும், இவையெல்லாம் நோயின் தீவிரத்தை பொறுத்துதான். என்ன... 'கட்டுரையை முழுமையாக படித்துவிட்டோமா?' என்ற சந்தேகம் வருகிறதா?பி.பி. கண்ணன், மனநல மருத்துவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்