நோய்கள் ஜாக்கிரதை - சத்தம் போடாதே!
சமீபத்தில் நடந்த சுவாரஸ்யமான சம்பவம் இது. சென்னை மாதவரத்தை சேர்ந்த ஒரு மென்பொறியாளர், தனது அடுக்குமாடி குடியிருப்பின் தரைதளத்தில் குடியிருப்பவரது வீட்டு 'ஏசி' சத்தம், கடந்த ஆறு மாதகாலமாக தன்னை துன்புறுத்துவதாகவும், இரவில் உறங்கவிடாமல் தம்மை இம்சை செய்வதாகவும் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த விஷயத்தில், மென்பொறியாளர் காவல்நிலையம் வரை செல்ல வேண்டிய அவசியம் என்ன? ஒலி! ஓசை எப்போது பெரும் ஒலியாக மாறுகிறதோ, அப்போது மனிதர்களுக்கு கோபம் வருகிறது.இது ஒலிகளின் நூற்றாண்டு. இந்த சூழலில், நம்மைச்சுற்றி ஒலிகளின் அத்துமீறல்கள் கடுமையாக நடந்து கொண்டிருக்கின்றன. மக்கள் வாழும் பகுதிகளில், அனுமதிக்கப்பட்ட ஒலியின் அளவு 50 டெசிபல் முதல் 60 டெசிபல் வரை மட்டுமே! ஆனால், ஜெனரேட்டர், 'ஏசி' தொழிற்சாலை சத்தம், அரசியல் பொதுக்கூட்டம், பண்டிகைக்கால கொண்டாட்டம், பட்டாசு சப்தம், மொபைல் ரிங் டோன், ஆழ்துளை கிணறு தோண்டும் சத்தம் போன்றவற்றால், 130 முதல் 140 டெசிபல் வரை ஒலியின் அளவு அதிகரித்துள்ளது.''இந்த ஒலி மாசுபாட்டால், நமது இதயத்திலிருந்து உடலெங்கும் ரத்தத்தை எடுத்துச் செல்லும் 'தமனிகள்' எனும் மெல்லிய நரம்புகள் தளர்வடைகின்றன. இதனால், இதய செயல்பாடு பாதிப்படைகிறது. தொடர்ந்து நுரையீரல், மூளை, சிறுநீரகம் உள்ளிட்ட உறுப்புகளும் பாதிக்கப்படுகின்றன. மேலும், இடைவிடாத ஒலிகளால் மனஉளைச்சல் அதிகமாகும். கேட்கும் திறனில் குறைபாடு ஏற்படும். காது மந்தப்படும்'' என்கிறார் காது, மூக்கு, தொண்டை மருத்துவர் வசந்தகுமார்.உலகிலுள்ள பத்து வயதிற்குட்பட்ட சிறார்களில், ஐந்து விழுக்காட்டினர் ஒலி மாசு காரணமாக கேட்கும் திறனை இழந்துள்ளதாக சொல்கிறது உலக சுகாதார நிறுவன ஆய்வறிக்கை! ஆக, ஒலி மாசு உடல் நலத்தை பாதிக்கும் என்பதை இனிமேலாவது நாம் உணர வேண்டும். இது, மனிதர்களாகிய நமக்கு மட்டுமல்ல... பறவைகளுக்கும், விலங்குகளுக்கும் கூட ஆறுதலாக அமையும்.