மனசே மனசே... குழப்பம் என்ன!
தொழிற் கல்வி படித்து, நல்ல வேலையில் இருக்கும் இளம் பெண் அவர். கடந்த பல வாரங்களாக, இறுக்கமான மனநிலையோடு, தொடர்ந்து, தற்கொலை எண்ணங்கள் வருவதாக கூறினார். நெருங்கிய தோழிகள் கொடுத்த யோசனையில், என்னிடம் ஆலோசனைக்கு வந்தார். ஆரம்பத்தில், தயக்கமாகவே பேசினார்; நீண்ட நேரம் பேசிய பின், விஷயத்தைச் சொன்னார். கல்லுாரி நாட்களிலிருந்தே இளைஞர் ஒருவரை காதலித்து உள்ளார். இரு வீட்டிலும் பேசி, திருமண ஏற்பாடுகள் நடந்து, அழைப்பிதழ்கள் எல்லாம் அடித்த பின், 'உன்னுடைய சில பழக்க வழக்கங்கள், விருப்பங்கள், என் குடும்பத்திற்கு ஒத்து வராது என தோன்றுகிறது; இந்த திருமணம் வேண்டாம்' என சொல்லி, போன் நம்பர் உட்பட, அனைத்து தொடர்புகளையும் துண்டித்து, தலைமறைவாகி விட்டான், காதலன்; இது, மிகப் பெரிய அதிர்ச்சியையும், அவமானத்தையும் தர, யாரைப் பார்த்தாலும் பயம் வந்து விட்டது. இயல்பாக யாருடனும் பேச முடியவில்லை; தற்கொலை எண்ணங்கள் வந்தபடியே இருந்தது. நாம் வளர்ந்த விதம், சமுதாய நடைமுறைகள், 'இப்படி நடந்தால் அவமானம்' என, நாம் நினைக்கும் விஷயங்கள், யதார்த்தத்தை புரிந்து கொள்ள விடாமல், நம்மை பயமுறுத்துகிறது. 'உங்கள் மேல் எந்த தவறும் இல்லை... திருமணத்திற்கு முன்பே, அந்த பையனின் சுயரூபம் தெரிந்தது நல்லதாகி விட்டது; திருமணத்திற்கு பின் என்றால், இதை விடவும், சிக்கலான பிரச்னைகளை எதிர் கொள்ள வேண்டியிருந்திருக்கும்' என, நான் சொன்னவுடன், 'என்னால் எப்படி சார், வாழ்க்கை முழுவதும் தனியாக வாழ முடியும்?' என்றார். 'இத்தோடு வாழ்க்கையே முடிந்து விட்டது என, ஏன் நினைக்கிறீர்கள். இன்னும் நீங்கள் வாழ்க்கையை ஆரம்பிக்கவே இல்லையே... வேலை நேரம் போக, மற்ற நேரத்தில், உங்களுக்கு பிடித்தமான புது விஷயம் ஒன்றைக் கற்றுக் கொள்ளுங்கள். தனிமையில் இருப்பதை தவிர்த்து, படிப்பது, பாட்டு கேட்பது, தோழிகளுடன் பேசுவது, வீட்டில் உள்ளவர்களுக்கு உதவுவது என, ஏதேனும் ஒரு காரியத்தில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள்' என சொன்னவுடன், அமைதியாக இருந்தார்.'நடந்ததையே நினைக்காமல், வேறு விஷயங்களில் மனதை செலுத்தும் போது, சில நாட்களில் உணர்ச்சி வசப்படாமல், தள்ளி நின்று பார்க்க, மனம் பழகி விடும். அடுத்து என்ன என, முடிவு செய்வதற்கும், குழப்பம் இல்லாமல் சிந்திக்கவும், நாம் உறுதியாக நம்பும் விஷயங்களுக்கு மூளை பழகி விடும் என்பது, அறிவியல் பூர்வ உண்மை' என, விளக்கினேன். இரண்டு, மூன்று முறை, 'கவுன்சிலிங்' வந்த போது, சொல்வதை புரிந்து கொண்டார். அவருக்கு இருந்த பெரிய பயமே, இப்படி நடந்த பின், இன்னொரு திருமணம் எப்படி செய்ய முடியும்? வாழ்க்கை முழுவதும் தனியாக இருக்க முடியுமா என்பது தான். இந்த குழப்பம், நம்மில் பெரும்பாலானோருக்கு உள்ளது. இதற்கு உளவியல் ரீதியான காரணம், நமக்குத் தரும் முக்கியத்துவத்தை விடவும், யாரோ ஒருவரை சார்ந்து வாழவே பழகுகிறோம். மற்றவரைச் சார்ந்து இருந்தால் மட்டுமே, வாழ்க்கை முழுமையாக்கும் என நம்புகிறோம்; அதில் தவறில்லை. தனித்தன்மையை விட்டுக் கொடுக்காமல், இணைந்து வாழ வேண்டுமே தவிர, சார்ந்து இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. எல்லாவற்றிலும் உங்களுக்கு பொருத்தமானதை தேர்வு செய்து, தனித்தன்மையோடு இணைந்து வாழ்வது எப்படி என்பது குறித்து, அவருக்கு புரிய வைத்தேன். குடும்ப வாழ்க்கை, 'கேரியர்' இரண்டிலும் வெற்றி பெற்ற பெண்களின், 'பார்முலா' இது தான். கணவன், மனைவி இருவரும் தனித்தன்மையோடு, அவரவர் துறையில் வெற்றி பெற்ற தம்பதிகள் பலரை உதாரணம் சொன்னவுடன், தெளிவாகி விட்டார்.டாக்டர் ஜே.விக்னேஷ் சங்கர்உளவியல் நிபுணர், மதுரை. unitedsoulfoundation@gmail.com