உள்ளூர் செய்திகள்

மனசே மனசே... குழப்பம் என்ன!

முப்பது ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட அனுபவம் இது; இன்றும் அப்படியே நினைவில் உள்ளது. வடக்கு மத்திய நேபாளத்தில், இமயமலையில் உள்ள, அன்னபூர்ணா மலைக்கு, என் தோழியுடன், 'டிரெக்கிங்' சென்றேன். அதிகாலையில் துவங்கி, அரை நாள் மலை ஏறுவது என, முடிவு செய்து சென்றோம். இமயமலையின் குளிர், பனி சிகரங்கள் மற்றும் மரங்கள் என, அடர்ந்த பாதையில், இயற்கையை ரசித்து, அனுபவித்தபடி நடந்தோம். காலை, 7:00 மணிக்கு ஓரிடத்தில் அமர்ந்து, பிளாஸ்கில் கொண்டு சென்ற தேநீரைக் குடித்தபடி, ரம்மியமான சூழலில் ஒன்றிப் போயிருந்தோம். மனித சஞ்சாரமே இல்லாத, அமானுஷ்ய அமைதி... நாங்கள் அமர்ந்திருந்த இடத்தில் இருந்து, எதிர் திசையில், யதேச்சையாகப் பார்த்த போது, தொலைவில் ஓர் உருவம், மெதுவாக நகர்ந்து வருவதைப் போல இருந்தது.அந்த திசையையே பார்த்தபடி இருந்தேன். உருவம் அருகில் வர வர திகைப்பும், ஆச்சரியமும் நிரம்ப, அப்படியே எழுந்து விட்டேன். ஒற்றையடிப் பாதையில், இயற்கையின் எந்த அற்புதத்தையும், நம் கண்கள் பார்க்காமல் விட்டுவிடக் கூடாது என்பது போல, சுற்றி பார்த்தபடி, மெதுவாக நடந்து வந்தார், அந்த இளம்பெண். பார்வைக்கு எட்டும் துாரத்தில் வந்தவுடன், அவர் வெளிநாட்டுப் பெண் என்பது தெரிந்தது. சராசரி உயரம், ஒல்லியான தேகம், முதுகில் மாட்டிய டிராவலிங் லக்கேஜ். 'எதிர் திசையில் இருந்து வருகிறார். அப்படியானால், அடர்ந்த காட்டிற்குள் போய் விட்டே திரும்புகிறார். இப்படி ஓர் அசாதாரணமான இடத்தில், ஒவ்வொரு விஷயத்தையும் ரசித்து அனுபவித்த படி, எப்படி இவரால் எந்தப் பதற்றமும் இல்லாமல், தனியாக வர முடிகிறது' என்ற வியப்பு... அவர் என்னருகில் வந்தவுடன், புன்னகையாக மாறியது; அவரும் சிரித்தார். என் தோழி தேநீரை ஊற்றி அவரிடம் நீட்ட, மகிழ்ச்சியாக வாங்கியபடி, எங்களோடு அமர்ந்தார்.பரஸ்பர அறிமுகத்திற்கு பின், 'தனியாகவா, 'டிரெக்கிங்' வந்தீர்கள்?' என, கேட்டேன். 'ஆம்' என, தலையாட்டியவர், சொன்ன விஷயம் தான், நாம் ஒவ்வொருவரும் வாழ்க்கையில் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்.'எனக்கு கேன்சர் என, உறுதியான முதல் பரிசோதனையிலேயே, நோயின் தன்மை தீவிரமாக இருப்பதாகவும், இன்னும் ஓரிரு ஆண்டுகளே உயிர் வாழ்வது சாத்தியம்' எனவும், டாக்டர் உறுதியாக சொல்லி விட்டார். 'நான் உயிருடன் இருக்கும் நாட்களுக்குள், விரும்பியதை எல்லாம் செய்து விட வேண்டும் என, நினைத்தேன். இமயமலை ஏற வேண்டும் என்பதும், என் நீண்ட நாள் விருப்பம். அமெரிக்காவிலிருந்து கிளம்பி விட்டேன்' என்றார்.இவ்வளவு நாட்கள் தான், வாழ முடியும் என, தெரிந்த பின்னும், எந்த பயமும், பதற்றமும், ஆரவாரமும் இல்லாமல் இருக்கும் வரை, நம்பிக்கையோடு, மகிழ்ச்சியாக எதையெல்லாம் செய்ய விருப்பமோ, அதை செய்வதற்கு, எவ்வளவு மன தைரியம் வேண்டும் என, யோசித்துப் பாருங்கள்.நோய் வந்து விட்டது என்றவுடன், 'எனக்கு ஏன் இப்படி?' என கேட்கவில்லை, அந்த இளம்பெண்.'இருக்கும் நாட்களுக்குள், என் விருப்பத்தை எல்லாம் நிறைவேற்றிய பெண்ணாக ஏன் இருக்கக் கூடாது!' என, தான் நினைத்தார். எப்பேர்ப்பட்ட, அற்புதமான பெண் அவர். உண்மையில், என் வாழ்க்கையில் மிகப்பெரிய பாடத்தை, அவரிடம் இருந்து கற்றுக் கொண்டேன்.சிவசங்கரி, எழுத்தாளர்.jibu_chandra@yahoo.co.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்