உள்ளூர் செய்திகள்

மழைகால மின்விபத்து செய்யக்கூடாதவை என்ன?

மழைநேரத்தின்போது, சாலைகளில் வாகன விபத்துகள் மட்டுமல்ல, மின் விபத்துகளும் ஏற்படுகின்றன. இதுபோன்ற விபத்துகளைத் தடுப்பதற்கு அரசு நடவடிக்கை மட்டும் போதாது. பொதுமக்களும் விழிப்புடன் இருந்தால் மட்டுமே உயிரிழப்புகளை தடுக்க முடியும்.ஏனெனில் சாலை விபத்துகள் போல் அன்றி, மின்விபத்துகளில், உயிர்பலி நிச்சயம் எனும் அளவுக்கு சேதம் உள்ளது. திடீரென ஒருவருக்கு ஷாக் அடித்து, விபத்து ஏற்பட்டால் அவருக்கு எந்த மாதிரியான முதலுதவி அளிக்க வேண்டும், அந்த சமயத்தில் என்னவெல்லாம் செய்யக் கூடாது என்பதை அனைவரும் அறிந்திருக்க வேண்டும்.சாலையில், அறுந்து கிடந்த மின்கம்பிகளைக் கண்டால் உடனடியாகப் பக்கத்திலிருக்கும் மின் அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அதற்கு முன் அப்பகுதி வழியாக யாரும் செல்ல முடியாத படி தடை ஏற்படுத்துவது சிறந்தது.தலைக்கு மேல் செல்லும் மின்சார வயர்களில் உரசிச் செல்லும்படியான கொடிகளில் ஈரத்துணிகளைக் காயப்போடக் கூடாது. கேபிள் பாக்ஸ், பில்லர் பாக்ஸ்களை தொடக்கூடாது. தண்ணீர் தேங்கியிருக்கும் நேரங்களில் பில்லர் பாக்ஸ்களின் அருகே யாரும் செல்லக் கூடாது. அதேபோல் தேங்கியிருக்கும் தண்ணீரின் அளவு பில்லர் பாக்ஸின் உயரத்துக்கு வந்துவிட்டால், உடனடியாக அருகில் இருக்கும் மின்சார அலுவலத்தில் தெரிவிக்க வேண்டும்.பழைய வீடுகளில், மழையின்போது சுவரில் ஈரம் பரவியிருக்கும். அப்படி ஈரம் பரவியிருக்கும் சுவர்களின் அருகில் இருக்கும் ஸ்விட்ச் பாக்ஸைத் தொடக் கூடாது. ஈரம் காய்ந்த பின்னரே அதைத் தொடவோ, பயன்படுத்தவோ வேண்டும். ஈரக்கையுடன் ஸ்விட்ச்சை, ஆன் ஆப் செய்யக் கூடாது. அதேபோல் மாடியிலிருந்து உடைகளோ, வேறு ஏதேனும் பொருள்களோ பறந்து கையால் எடுக்க முடியாத இடங்களில் விழுந்துவிட்டால், அதை இரும்புக் கம்பிகளைக் கொண்டு எடுக்கக் கூடாது.மின்சாரம் தொடர்பான எந்தப் புகாராக இருந்தாலும், உடனடியாக அருகில் உள்ள மின் அலுவலகத்தைத் தொடர்புகொள்ளலாம். 1912 என்கிற புகார் எண்ணுக்கு அழைத்தும் புகார் தெரிவிக்கலாம். யாருக்காவது ஷாக் அடித்துவிட்டால் அருகில் இருப்பவர்கள் உடனடியாக 'சி.பி.ஆர்' எனும் இதயம் மற்றும் சுவாச இயக்க மீட்பு நடவடிக்கைகளைச் செய்ய வேண்டும்.அதாவது விபத்துக்குள்ளானவரை சமதளத்தில் படுக்கவைத்து, ஒரு கைக்குட்டையை அவர் வாயில் வைத்து மூச்சுக்காற்றை ஊதி, உள்ளும் புறமுமாக இழுக்க வேண்டும். அதே நேரத்தில், மார்பின் இடது பக்கம் நன்றாகக் கையை வைத்து அழுத்தம் கொடுக்க வேண்டும்..இதைப் பற்றித் தெரியாதவர்கள், 108 அல்லது 104 ஆகிய இரண்டு எண்களுக்கு அழைத்தால். அவர்கள் முதலுதவிக்கான வழிமுறைகளைச் சொல்வார்கள். அதைச் சரியாகப் பின்பற்றினாலே போதும். பாதிப்பு குறைந்துவிடும்.மின்சாரத்தால் அதிகமாக பாதிப்புக்குள்ளான நபராக இருந்தால், அவரை உடனடியாக மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்றுவிடுவது நல்லது. 108 ஆம்புலன்ஸை வரச்சொல்லி, அதில் கூட்டிச் செல்லலாம். 108 ஆம்புலன்ஸில் உதறல் நீக்கி கருவி மற்றும் முதலுதவிக்குத் தேவையான அனைத்து வசதிகளும் உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !