200 வது வாரத்தில் அடியெடுத்துவைக்கும் அன்னதான தம்பதிவிஜயகுமார்-தேவிசித்ராஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையையும் சென்னை வாழ் நடைபாதைவாசிகளுக்கு உணவு வழங்கும் உன்னதபணியை ஆற்றிவரும் இளம் தம்பதி.ஞாயிற்றுக்கிழமை எவ்வளவு முக்கியமான விசேஷம் வந்தாலும், அதைவிட்டுவிட்டு நடைபாதைவாசிகளுக்கு உணவு வழங்குவதையே முக்கியமாகக் கொண்டு செயல்பட்டு வரும் இந்த தம்பதியினர், வருகின்ற ஞாயிற்றுக்கிழமை 200 வது வாரத்தில் அடியெடுத்து வைக்கின்றனர்.விஜயகுமார் தனியார் நிறுவனத்தில் பணியாற்றுபவர்,மணைவி தேவிசித்ரா இல்லத்தரசி இருவரும் வில்லிவாக்கத்தில் சிறிய வாடகை வீட்டில் இருப்பதைக் கொண்டு திருப்தியாக வாழ்ந்து கொண்டிருக்கிறனர்.இருவருக்குள்ளுமே நிரம்பி வழிவது அன்பும், கருணையும் மட்டுமே.கோவிட் சமயத்தில் தனது வீட்டைச் சுற்றியிருந்த நடைபாதை வாசிகள் உணவிற்காக பெரிதும் சிரமப்படுவதை உணர்ந்த தேவிசித்ரா தன்னால் முடிந்த அளவு ஒட்டலில் உணவு பொட்டலம் வாங்கிக் கொடுத்தார்.லாப நோக்கோடு ஒட்டலில் செய்யப்பட்ட உணவால் அவர்களது வயிறு நிறைந்ததே தவிர மனம் நிறையவில்லை என்பதை உணர்ந்தார்.நாமே நம்மால் முடிந்த அளவு சமைத்து எடுத்துக் கொண்டு போய்க் கொடுப்பது என்று முடிவு செய்து கணவரிடம் கலந்து ஆலோசித்தார் 'தாராளமாக செய்யலாம்மா' என்று விஜயகுமார் பச்சகை்கொடி காட்ட ஒரு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து ஐம்பது பேர்களுக்கு வருமளவிற்கு கலவை சாதம் தயார் செய்தனர்.வெறுமனே கலவை சாதம் மட்டுமாக இல்லாமல் அதில் ஒரு பொரியல், ஒரு கூட்டு இருக்குமாறு பார்த்துக் கொண்டனர்.
இரு சக்கர வாகனத்தல் தம்பதியர் இருவரும் சுமையை துாக்கமுடியாமல் துாக்கிக்கொண்டு சென்று நடைபாதை வாசிகளுக்கு விநியோகித்தனர்,பசியால் வாடிக்கிடந்த அவர்கள் பரபரவென பொட்டலத்தைப் பிரித்து சாப்பிட்டனர்.அவர்கள் சாப்பிட்ட வேகத்திலேயே உணவு ரொம்பவே பிடித்துப் போனது என்பது தெரிந்தது.அந்த முகங்களில் தென்பட்ட சந்தோஷத்தையும் அதனால் கிடைத்த வாழ்த்துக்களையும் தம்பதியினர் அடுத்த ஞாயிறு எப்போது வரும் என்று அப்போது முதலே காத்திருக்கலாயினர்.இப்படியாக கிட்டத்தட்ட நான்கு வருடங்களாக ஒரு ஞாயிற்றுக்கிழமையைக்கூட மிஸ் செய்யாமல், எவ்வளவு புயல் மழையாக இருந்தாலும் உணவு விநியோகத்தை தொடர்ந்து வருகின்றனர்.அதிலும் தேவி சித்ரா வெறுமனே உணவு தருவதோடு நின்றுவிடாமல், அவர்களிடம் அன்பாக,ஆறுதலாக சிறிது நேரம் செலவிட்டு பேசவும் செய்வார், இது ஒரு பெரிய பாசப்பினைப்பை ஏற்படுத்தியுள்ளது, சாப்பாடு இல்லாவிட்டாலும் பராவாயில்லை நீ வந்து பேசாமல் இருந்துவிடாதே தாயி என்று சொல்பவர்கள் பலர் உண்டு.உணவோடு யாரும் செய்திடாத அளவிற்கு கூட்டும், பொரியலும் சேர்த்து தருவதால் தேவிசித்ராவின் பெயரே 'கூட்டு பொரியல்காரம்மா' என்றாகிவிட்டது.பொங்கல் புத்தாண்டு போன்ற நாட்களில் விசேஷ உணவும் உண்டு.வரும் வருமானத்தில் குடும்ப செலவிற்கு போக மீதமெல்லாவற்றையும் இதற்கென ஒதுக்கி செலவிட்டு வந்த விஜயகுமார், இப்போது இதற்கு செலவிட்டுவிட்டு மிச்சமிருக்கும் பணத்தைதான் குடும்ப செலவிற்கு என சுருக்கிக் கொள்கிறார்.இன்று என்னுடைய பிறந்த நாள்,இன்று எங்கள் மணநாள் உங்கள் மூலமாக நடைபாதை வாசிகளுக்கு செலவிட விரும்புகிறேன் என்று சொல்லி இவரிடம் யாராவது பணம் கொடுத்தால் உடனே அந்தப் பணத்தில் போர்வை,செருப்பு,லுங்கி என்று வாங்கிக்கொடுத்துவிடுவார்.ஐம்பது பேர் என்பது இப்போது 65 பேர் வரை உயர்ந்துள்ளது நுாறு பேர் வரை கொடுக்க வேண்டும் என்பது எண்ணம் ஆனால் உணவு மற்றும் தண்ணீர் பாட்டிலுடன் இரு சக்கர வாகனத்தில் அதற்கு மேல் எடுத்துச் செல்ல இயலவில்லை.பொருளாதாரமும் கைகொடுக்கவில்லை.வாரத்தில் ஏழு நாளும் மூன்று வேளையும் பசித்தவருக்கு உணவு படைத்திடத்தான் விரும்புகிறோம், காலம் கனியும் கடவுள் வழிகாட்டுவார் என்று நம்பிக்கை கொண்டுள்ள இந்த தம்பதியர் எடுத்துவைக்கவிருக்கும் 200 வது வார அன்னதான நிகழ்வை பாராட்ட நினைப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் 9841605054,9551371908.-எல்.முருகராஜ்