உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / நிஜக்கதை / கண்ணீர்புரமான கருணாபுரம் குழந்தைகள் கதறல்.

கண்ணீர்புரமான கருணாபுரம் குழந்தைகள் கதறல்.

எங்களை நிம்மதியா படிக்கவிடுங்க..கண்ணீர்புரமான கருணாபுரம் குழந்தைகள் கதறல்.முதலிலே ஒரு விஷயத்தை தெளிவு படுத்திவிடுகிறோம்.கள்ளக்குறிச்சியை அடுத்துள்ள கருணாபுரத்தில் கள்ளச்சாராய சாவு என்று தொடர்ந்து ஊடகங்களில் வரும் செய்திகளைப் பார்த்துவிட்டு கருணாபுரம் என்பது ஏதோ மாவட்டத் தலைநகரான கள்ளக்குறிச்சிக்கு தொலைதுாரத்தில் உள்ள குக்கிராமம் போலவும், அங்கே ஒதுங்கியிருக்கும் அல்லது ஒதுக்கப்பட்ட குடியிருப்புகளை சேர்ந்த குடிசைவாசிகள்தான், யாருக்கும் தெரியாமல் கள்ளச்சாராயம் சாப்பிட்டு இறந்திருக்கின்றனர் என்றும் நீங்கள் நினைத்துக் கொண்டால், முதலில் அந்த நினைப்பை விட்டுவிடுங்கள்.கருணாபுரம் என்பது கள்ளக்குறிச்சியிலேதான் உள்ளது, இன்னும் சொல்லப்போனால் ஒரு பக்கம் பஸ்நிலையம்.ஒரு பக்கம் காவல் நிலையம்,ஒரு பக்கம் நீதிமன்றம்,இன்னோரு பக்கம் கடைவீதி என்று நாலாபக்கமும் சூழ்ந்திருக்கும் நகரின் இதயப்பகுதியில்தான் உள்ளது.பெயிண்டர்கள்,மூடை சுமக்கும் தொழிலாளர்கள் என்று உடல் உழைப்பைச் சார்ந்த ஏழை எளிய மக்கள் வாழும் பகுதி அது.கதவுகளுக்கு பதிலாக போர்வைகளும்,சாக்குகளும் இருக்கும், அதிர்நது பேசினால் உதிர்ந்து போகும் காரை வீடுகள்தான் பெரும்பாலானவை.,அன்றாடம் உழைத்துப் பிழைப்பவர்கள் ஒரு நாளைக்கு ஐநுாறு ரூபாய் சம்பாதித்தால் அதுவே அதிகம்.இங்கு இருப்பவர்களுக்குள் நல்லது கெட்டது என்று எது நடந்தாலும் கள்ளச் சாராயத்தின் மூலம்தான் அதை பகிர்ந்து கொள்வர்,டீ காபி போல பெரும்பாலானவர்களுக்கு கள்ளச் சாராயம் சாப்பிடும் பழக்கம் உண்டு.ஊருக்குள் நிறைய டாஸ்மாக் கடைகள் இருந்தாலும் அங்கே வாங்கி சாப்பிடும் அளவிற்கு வசதியும் கிடையாது, அதில் 'திருப்பதியும்' கிடையாது. இருபத்து நான்கு மணி நேரமும் தடையின்றி கள்ளச் சாராயம் கிடைப்பதால் டாஸ்மாக் சரக்குகளைத் தேடுவதும் கிடையாது.இப்படித்தான் ஒரு இறப்பு வீட்டில் துக்கத்துடன் சரக்கையும் பகிர்ந்து கொண்டவர்களுக்கு, சரக்கு துாக்கலாக இருக்கிறதே என்று எண்ணுவதற்குள் கண் இருட்டியது, வயிறு குமட்டியது 'ஐயோ அம்மா என்னைய என்னவோ செய்யுதே, காப்பாத்துங்களேன்' என்ற கதறல் சொல்லிவைத்தாற் போல கள்ளச் சாராயம் சாப்பிட்டவர்களின் அனைத்து வீடுகளிலும் கேட்டது,வீபரீதத்தின் வீரியத்தை உணராமல் மாவட்ட ஆட்சித்தலைவர் சாதாரண வயிற்றுப்போக்கு என்று சப்பைக்கட்டு கட்ட, பத்து இருபது பேர் மதியத்திற்குள் பொத்து பொத்தென்று செத்து விழுந்தபிறகுதான் இது கள்ளச் சாராய சாவு என்று கன்பர்ம் செய்தனர்.பாதிக்கப்பட்டவர்கள் இன்னமும் சேலத்திலும்,கள்ளக்குறிச்சியிலும்,புதுச்சேரியிலும் ஆபத்தான கட்டத்தில்தான் உள்ளனர் ஊரின் ஆரம்பத்தில் ஏதாவது பிளக்ஸ் பேனர் புதிதாக கட்டுகின்றனர் என்றால் அன்றைக்கு சிகிச்சையில் இருந்தவர்கள் பலனின்றி இறந்துவிட்டார்கள் என்று அர்த்தம்.சூட்டிங் முடித்த தலைவர்களும்,வெளிநாடு போய் திரும்பிய தலைவர்களும் ஆறுதல் சொல்ல சம்பவம் நடந்து பல நாட்களுக்கு பின்னர் இப்போதுதான் வருகின்றனர், அவர்களுக்கு பாதிக்கப்பட்டவர்கள் 'முதலில்' இருந்து அழ ஆரம்பிக்கின்றனர்.இறந்தவர்களின் குடும்பங்களை பத்து லட்சம்தான் ஆறுதல் படுத்திவைத்திருக்கிறது,இங்குள்ள ஆண்கள் பெண்கள் யாருக்கும் அவ்வளவாக படிப்பறிவு இல்லை, ஆனால் தங்களது அடுத்த தலைமுறையாவது படிக்கவேண்டும் என்ற ஆர்வத்தில் வீட்டில் உள்ள பிள்ளைகளை படிக்க வைத்துள்ளனர், இப்போது அந்தப் பிள்ளைகள்தான் பாவம் மனதால் மிகவும் பாதிக்கப்பட்டுள்னர், மீடியாக்கள் முன் அழத்தெரியாமல் இறுகிய முகத்துடன் அடுத்த என்ன? என்று கேள்வியுடன் அமர்ந்துள்ளனர் ,பெரும்பாலான பிள்ளைகள் எதிர்காலத்தை தீர்மானிக்கும் பிளஸ் ஒன் பிளஸ் டூ படிப்பில் உள்ளனர் இறுக்கத்தை உடைத்து அவர்களில் சிலர் எங்களை படிக்கவிடுங்க எங்க அப்பா அதுக்குதான் ஆசைப்பட்டனர் என்று கதறுகின்றனர்.இந்த கதறல்கள்தான் உடனடியாக கவனிக்கப்படவேண்டும்.-எல்.முருகராஜ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

என்றும் இந்தியன்
ஜூன் 27, 2024 16:26

கருணாபுரம் டாஸ்மாக் கருணாநிதிபுரம் என்று இதனால் தெள்ளத்தெளிவாகத்தெரிகின்றது


மலரின் மகள்
ஜூன் 26, 2024 13:41

திரு எல் முருகராஜ் அவர்களின் கட்டுரை மனதை இதமாகவும் வருடும், சோககீதமும் பாடும். சோகத்தை வார்த்தைகளில் எளிய தமிழில் இவர் எழுதுவது மிகச்சிறப்பு. ஒரு சிறந்த நிருபர் பெயரை சொல்லுங்கள் என்றால் தாராளமாக எந்த தயக்கமுமின்றி இவர் பெயரை உச்சரிக்கலாம். எளிமையாக எப்போதும் சட்டைப்பையில் பேனாவுடன், சிந்தனைகளை செதுக்கும் கைவண்ணம் அறிந்தவர். அனாதையாக்கப்பட்டு வயதான பாட்டியின் நிழலில் வாழும் இந்த குழந்தைகளின் முகவரியை தெரியப்படுத்துங்களேன். உதவி செய்கிறேன். முருகராஜின் இதயம் என்ற பெயரிலேயே.


தமிழ்வேள்
ஜூன் 24, 2024 20:39

குழந்தைகளின் கல்வி மீது ஆர்வம் இருந்தது என்றால் அவர்கள் குடிகாரன்களாக இருக்கும் வாய்ப்பு இல்லை.... உடல் உழைப்பு தொழிலாளர் என்றால் நிச்சயம் குடித்தே ஆக வேண்டும் என்பது என்ன கட்டாயம்? கல்யாணம் கருமாதி என்று எதற்கெடுத்தாலும் குடிதானா? இவர்கள் குடி நோயாளிகள் குடி அடிமைகள் என்பதே உண்மை


.Dr.A.Joseph
ஜூன் 24, 2024 17:30

அந்த ஊரில் உள்ள காவல் நிலையத்துக்கு துளி கூட தெரியாமல் போனதுதான் ஆச்சர்யமாக உள்ளது


சமீபத்திய செய்தி