ஒவ்வொரு துறையிலும் சாதித்தவர்கள் தங்களுக்கு கிடைத்த அனுபவத்தை பகிர்ந்து கொள்வதை கேட்பது என்பது ஒரு மகத்தான அனுபவம்நாலாயிரத்திற்கும் மேற்பட்ட பேட்டிகள்,700 சிறுகதைகள்,11 நாவல்கள்,கட்டுரைகள்,ஜோக்குகள்,துணுக்குகள் என்று எழுதி குவித்தவர்தான் பாமா கோபாலன்.
நீண்ட காலம் குமுதம் பத்திரிகையில் பணியாற்றிய இவர் தன் அனுபவத்தை ‛நானும் குமுதமும்' என்ற தலைப்பில் நகைச்சுவையாக பேசினார் அதன் சுருக்கமாவது...
எப்ப பார்த்தாலும் பிரபலத்தை பேட்டி எடுக்கணுமா? என்னா? சாதாரண பாமர ஜனங்கள் என்ன சொல்றாங்கன்னு பேட்டி எடுத்துட்டு வாங்களேன் என்று ஒரு முறை ஆசிரியர் சொன்னார்.வீடு இருக்கும் தெருவின் வாசலில் ஒரு பூக்காரி இருந்தார் ரெகுலராக அவரிடம் பூ வாங்குவது வழக்கம் ஆசிரியர் சொல்லிவிட்டாரே என்பதற்காக என்னம்மா எப்படி போகுது வியாபாரம் என்று பேச்சு கொடுக்க ஆரம்பித்து அவர் குடும்பம் குழந்தை வாழ்க்கை என்றெல்லாம் சுற்றி வந்து பேட்டி முடிந்தது.பூ விற்று வரும் வருமானத்தால்தான் குடும்பத்தை நடத்துகிறேன் பிள்ளைகளை படிக்கவைக்கிறேன் புருஷன் ஒரு குடிகாரன் பைசா பிரோயோசனமில்லை பத்தாதிற்கு வியாபாரத்திற்கு வைத்திருக்கும் காசைக்கூட திருடிட்டு போயி குடிச்சுட்டு வந்திடுவாரு என்று தன் ஆதங்கத்தை சொல்லியிருந்தார், பேட்டியும் அவரின் கவலை மற்றும் ஆதங்கத்துடன் வெளியானது.பேட்டி வெளிவந்து இரண்டு நாள் கழித்து ,வீட்டில் நான் இல்லாத போது பூக்காரம்மா வந்து கன்னாபின்னா என்று திட்டியிருக்கிறார் ஒரு பெரிய மனுஷன்னு நினைச்சு பேசினதை எல்லாம் புத்தகத்தில் போட்டுட்டாரே? என் புருஷன் மானம்! மரியாதை! எல்லாம் போயிருச்சு, புத்தகத்தை படிச்சுட்டு மேற்கொண்டு குடிச்சுட்டு வந்து அடிச்சாரு எங்கே அந்த நிருபர்? அவர நான் இரண்டுல ஒண்ணு பார்க்கணும்னு சொல்லியிருக்காரு.ராத்திரி வீடு வந்த பிறகு நடந்த விஷயத்தைக் கேள்விப்பட்டு வருத்தமாப் போச்சு எங்கே நடுரோட்டில வச்சு நம்மை திட்டுவாரோன்னு நினைச்சு வேற பாதையில போய் வந்தேன்.இந்த சூழ்நிலையில் பேட்டிய படிச்சுட்டு வாசகர்கள் நிறைய பேர் பூக்காரியின் வாழ்வு வளம் பெறட்டும் என்று வாழ்த்தி பணம் புடவை என்று நிறைய பேர் அலுவலகத்திற்கு அனுப்பியிருந்தனர் வந்த பணம் அந்த காலத்தில் அதிகம்.ஆசிரியர், எல்லாவற்றையும் கொண்டு போய் பூக்காரியிடம் கொடுத்துவிட்டு வரச்சொன்னார். ஏற்கனவே அந்த அம்மா கோபத்தில் இருக்காங்க இப்ப புடவை எல்லாம் கொடுத்தா என்னாகுமோன்னு நினைச்சு ஒரு பக்கம் பயம் ஆனா ஆசிரியர் சொல்லிட்டாரே என்று மனைவி வேதா கோபாலனை துணைக்கு அழைத்துக்கொண்டு வீட்டிற்கு போய் பணம் புடவை எல்லாம் கொடுத்ததும், அந்தம்மாவிற்கு அப்படி ஒரு மகிழ்ச்சி ‛நீ என்னா செய்வே நான் சொன்னதைதானே எழுதினே மனசில வச்சுக்காதய்யா இந்த என்னால முடிஞ்சதுன்னு' சொல்லி ஒரு முழம் பூவ கொடுத்து சம்சாரம் தலையில வச்சுக்க சொன்னாங்க அது ஒரு மறக்கமுடியாத அனுபவம்.ஒரு முறை அலுவலகத்தில் வேலை இல்லாததால் புத்தகம் படித்துக் கொண்டு இருந்தேன் பொழுது போகலையா பாமாஜி உமக்கு ஒரு அசைன்மென்ட் ‛பொழுது போகாத பொம்மு' என்ற தலைப்பில் கொஞ்சமும் யாரும் சிந்தித்திராத விஷயங்களைப்பற்றி சின்ன சின்னதாய் கட்டுரை எழுதிட்டு வாரும் என்று அனுப்பினார்.சென்ட்ரல் எதிரே சிக்னலை மதிக்காமல் எத்தனை பேர் செல்கின்றனர்,நுாலகத்தில் படிப்பவர்கள் எத்தனை பேர் துாங்குபவர்கள் எத்தனை பேர்,ஆழாக்கு அரிசியில் எத்தனை அரிசி இருக்கும்? என்பது போன்ற விஷயங்களை எழுதினேன் வழக்கமாக குமுதத்தில் எவ்வளவு நல்ல விஷயமாக இருந்தாலும் ஆறு வாரத்திற்கு மேல் வராதுஆனால் இந்த பொம்மு மேட்டர் 72 வாரத்திற்கு வந்து பெயர் கொடுத்தது.என் மனைவி வேதா கோபாலானும் எழுத்தாளர்தான் இருவருக்கும் திருமணம் நடக்க இருக்கும் நேரத்தில் ‛எழுத்தாளரும் எழுத்தாளரும் சந்தித்தால்' என்ற தலைப்பில் கட்டுரை எழுதுமாறு எங்களையே சொல்லிவிட்டார், கட்டுரையின் கடைசியில் இவர்களுக்கு இத்தானம் தேதி திருமணம் என்றும் போட்டுவிட்டனர், அப்புறமென்ன ஆறு லட்சம் அழைப்பிதழ் அடிச்சு நடந்த திருமணம் மாதிரி எங்கள் திருமணமாகிவிட்டது.குறைகளை சுட்டுக்காட்டுவது மட்டும்தான் உங்கள் வேலையா? அதைக்களைய முயற்சி எடுக்கக்கூடாதா? பீச்சில் உள்ள சிலைகள் பறவைகளின் எச்சம் காரணமாக அசிங்கமாக இருக்கிறதே போய் சுத்தம் செய்யுங்களேன் என்று ஒரு வாசகர் எழுதிவிட்டார் மாணவர்களை அழைத்துக் கொண்டு போய் சுத்தம் செய்து போட்டோ மேட்டருடன் வாருங்கள் என்று ஆசிரியர் சொல்லிவிட்டார்.ஏணி போட்டு மாணவர் ஏறி சிலையை சுத்தம் செய்கிறார் அந்த நேரம் அங்கு வந்து போலீஸ் யாரைக்கேட்டு சிலையை சுத்தம் செய்கிறீர்கள் என்று கேட்டு எங்களை பிடித்துக் கொண்டு போய் ஸ்டேஷனில் உட்காரவைத்துவிட்டார், பிறகு இன்ஸ்பெக்டர் வந்து பையன் கிழே விழுந்தால் யார் பதில் சொல்வது உங்க வேலைய மட்டும் செய்யுங்க என்று எச்சரிக்கை செய்து அனுப்பினார்.இப்படி போலீஸ் ஸ்டேஷனுக்கு போன கையோடு அடுத்த வாரமே கோர்ட்டிற்கு போகவேண்டி வந்தது ஒரு சினிமா டைரக்டர் போட்ட வழக்குதான் அதற்கு காரணம்.தயங்கிய போது இது ஒரு அனுபவம் போய்ட்டு வாருங்கள் என்று அனுப்பிவைத்தார் அங்குள்ள நடைமுறைகளை வைத்து ‛சைலன்ஸ் சைலன்ஸ்' என்று தொடரே எழுதினேன்.இப்படி நீண்ட நேரம் சுவைபட நகைச்சுவையாக பேசிய பாமா கோபாலனுக்கு அவரது மனைவி வேதா கோபாலன் உடனிருந்து உதவினார்.இவர் தன் அனுபவத்தை பகிர்ந்து கொண்ட இடம் சென்னை குவிகம் இலக்கிய வாசல் கூட்டமாகும்._எல்.முருகராஜ்dinamalar.in