நேரம் பொன் போன்றது
இன்றைய அவசர உலகில் மக்கள் எங்கும் வேகமாக செல்கிறார்கள். சிக்னலில் ஒரு நிமிடம் நிற்பதற்குகூட பொறுமையில்லை. சரி.. அப்படி பறப்பவர்கள் சரியான நேரத்திற்கு ஒரு இடத்திற்கு செல்வார்களா.. என்றால் இல்லை. அமெரிக்காவின் முதல் ஜனாதிபதியாக இருந்த ஜார்ஜ் வாஷிங்டன், நேரம் தவறாமையை கண்ணும் கருத்துமாக கடைப்பிடித்தவர். எந்த ஒரு நிகழ்ச்சியாக இருந்தாலும் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே சென்று விடுவார். ஒருநாள் அவர் அலுவலகத்திற்கு வந்தார். அங்கே அவருடைய தனிச்செயலர் இல்லை. பதினைந்து நிமிடங்கள் சென்றபின், பரபரப்புடன் உள்ளே வந்த செயலரை பார்த்தார் வாஷிங்டன். ''என்னை மன்னிக்க வேண்டும் ஜனாதிபதி அவர்களே.. என் கடிகாரம் மெல்ல ஓடுவதை இப்போதுதான் கவனித்தேன். அதனால் வர தாமதமாகிவிட்டது'' என்றார் செயலர். ''இன்று உங்களுக்கு விடுமுறை அளிக்கிறேன். சரியான நேரத்தை காட்டும் புதிய கடிகாரத்துடன் உள்ளே வாருங்கள். இல்லை என்றால் இந்த மாதம் உங்களுக்கு சம்பளம் வராது'' என்றார். அதைக்கேட்ட செயலர் வெலவெலத்துப்போனார். பார்த்தீர்களா... நேரம் தவறாமையை அவர் எந்த அளவுக்கு கடைபிடித்தார் என்பதை. நேரம் பொன் போன்றது. இனியாவது நேரம் தவறாமையை பின்பற்றுங்கள்.