உழைத்து வாழ வேண்டும்
நாம் சில குடும்பங்களை பார்த்திருப்போம். அவர்கள் பரம்பரை பரம்பரையாக செல்வந்தர்களாக இருந்திருப்பார்கள். அவர்களுடைய குழந்தைகளும் அடுத்த தலைமுறைக்காக சொத்து சேர்ப்பார்கள். ஆனால் அதில் சிலர், அந்த சொத்தை வைத்துக்கொண்டே காலம் கழிப்பார்கள். அவர்களிடம் கேட்டால், 'எனது அப்பா எனக்காக சொத்து சேர்த்திருக்கிறார். நான் ஏன் உழைக்க வேண்டும்' என அசராமல் பதில் சொல்வார்கள். உழைத்து வாழ வேண்டும் என்பதை அறியாதவர்களே இப்படி கூறுவார்கள்.பல நாடுகளை கைப்பற்றிய படைத்தளபதிக்கு, பரிசரிக்க விரும்பிய அரசர் அவருக்கு விருந்து வைத்தார். அப்போது, ''தளபதியாரே... தாங்கள் வெற்றி கொண்ட நாடுகளை நீங்களே ஆட்சி செய்யுங்கள். இதுநான் உங்களுக்கு தரும் பரிசு'' என்றார் அரசர்.''அரசரே... தங்களின் பெருந்தன்மைக்கு எனது நன்றிகள். தங்களின் பரிசை பெற்றுக்கொண்டால் எனது குழந்தைகளும், குடும்பமும் உழைப்பதை மறந்துவிடும். எனக்கு தங்களுடைய அன்பு இருந்தாலே போதுமானது'' என்றார் தளபதி.இதைக்கேட்ட அரசர் ஆச்சர்யத்தின் உச்சிக்கே சென்று விட்டார். 'உழைத்து வாழ வேண்டும். பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே' என்பதை நினைவில் கொள்ளுங்கள்.