கேளுங்க சொல்கிறோம்!
என் மனைவி கோபத்தில் தாலியைக் கழற்றி என்னிடமோஅல்லது சுவாமி படத்தின் முன்போ வைத்து விடுகிறாள். கோபம் தணிந்தபின் அணிந்து கொள்கிறாள். இதற்கு பரிகாரம் ஏதும் உண்டா?பெயர் வெளியிட விரும்பாத வாசகர்.காலம் இப்படி ஆகி விட்டது! தாம்பத்ய வாழ்க்கையின் மங்களமே தாலி தான். குடும்ப சுபிட்சத்தையும், சந்ததி அபிவிருத்தியையும் கணவனுக்கு ஆயுள் விருத்தியையும் தரும் தெய்வீகமானது மாங்கல்யம். இதை ஒரு பெண்ணின் கழுத்தில் அணிவிக்க அவர்களது பெற்றோர் எவ்வளவோ சிரமப்பட்டார்கள் என்பதை சகோதரிகள் நினைத்துப் பார்க்கட்டும். கோபத்தில் கழற்றும் சாதாரணப் பொருளல்ல தாலி என்பதை அந்த மாதரசி மட்டமல்ல...மற்றவர்களும் புரிந்து கொள்ள இறைவன் அருள்வாராக. மேலும் அவர்கள் கோபப்பட நீங்களும் காரணமாயிருந்தால் உங்களையும் மாற்றிக் கொள்ளுங்கள். பரிகாரமே இல்லாத விஷயம் இது.* குருவருள் திருவருள் குறித்து விளக்கம் அளிக்கவும்.முத்துக்குமர குருபரன், மஞ்சகுப்பம்.மாதா, பிதா, குரு, தெய்வம் என்னும் மரபு இந்து மதத்தின் உயர்ந்த கருத்தாகும். தாய் காட்டி தந்தையை அறிகிறோம். தந்தை காட்டி குருவை அறிகிறோம். தாயும், தந்தையும் ரத்த சம்பந்த உறவுகள். ஆனால் இதற்கு அப்பாற்பட்டு சீடனாக நம்மை ஏற்கும் குருநாதரே நமக்கு தெய்வத்தை உணர வைக்கிறார். போராட்டமான இந்த உலகில் மகிழ்ச்சியாக வாழ வழிகாட்டுகிறார். ஆன்மபலத்தை நம்முள் உருவாக்குகிறார். இறையருளை திருவருள் என்கிறோம். அதைப்பெற நம்மை செம்மைப்படுத்துபவர் குருநாதர். அவர் காட்டும் வழிமுறையே குருவருள். தங்கைக்கு குழந்தை பிறந்துள்ள நிலையில், உடன் பிறந்த அண்ணனுக்கு தீட்டு நேரிடுமா? எஸ்.சுப்பையா, சிவகாசி.அண்ணனுக்கு திருமணமாகியிருந்தால் தான் தீட்டு என்பதெல்லாம். திருமணமாகாத சகோதரர்களுக்கு கிடையாது. அதுவும் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தால் மூன்றுநாள் மட்டுமே தீட்டு உண்டு. பெண் குழந்தைகள் என்றால் தீட்டே கிடையாது. ** சாஸ்திரம் சம்பிரதாயம் இவற்றில் நாம் எதை பின்பற்றலாம்?ஏ.நாகராஜன், பம்மல்.சாஸ்திரம் என்பது வாழ வழி கூறும் நூல்கள். சம்பிரதாயம் என்பது சாஸ்திரம் கூறுவதை வாழ்வில் பின்பற்றுவது. இரண்டும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தது. இவை வேறு வேறு என நினைப்பது நமது தவறால் வருவது. மருத்துவப் படிப்பு என்பது சாஸ்திரம், வைத்தியம் செய்வது என்பது சம்பிரதாயம். இந்த உதாரணத்தை சாஸ்திர சம்பிரதாயத்துடன் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள். சரி தானா!* வீடுகளில் உள்ள பூஜையறை இரவில் சாத்தி தான் இருக்க வேண்டுமா?ஆர்.நாராயணசாமி, கோவை.ஆமாம். சுவாமியையும் நம்மில் ஒருவராக ஒரு குழந்தையாக எண்ணுங்கள். அவருக்கும் ஓய்வு கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் தானாகவே வரும். கோவில்களில் கூட பள்ளியறை மற்றும் நடையை அடைக்கிறார்கள் இல்லையா!