கேளுங்க சொல்கிறோம்!
* குரு பகவானுக்கு பூசணி, தேங்காய் தீபம் ஏற்றுவது சரியாகே.அகிலா, மதுரை.சாஸ்திரத்தில் நிறைந்த அறிவும் அனுபவமும் பெற்ற பெரியவர்கள் கூறாத மற்றும் வழக்கில் கொள்ளாத விஷயங்கள் எல்லாம் தற்போது வழக்கில் உள்ளன. இந்த மாதிரியான சந்தேகத்தை எங்களிடம் கேட்கும் போது, இதைத் தவறு என்றும், செய்யாதீர்கள் என்றும் சொல்லும் போது சிலர் புரிந்து கொள்கிறார்கள். ஆனால் பலர் குழப்பத்திற்கு ஆளாகிறார்கள். அவர்களைத் தெளிவடையச் செய்வதில் அதிக சிரமம் ஏற்படுகிறது. இது மூடநம்பிக்கை என்று சொன்னால் கோபம் வருகிறது. ஒரு அகல்விளக்கு ஏற்றினால் போதும். கடவுள் ஏற்றுக்கொள்வார்.* திருநீற்றை குங்குமத்திற்கு மேலே வைக்க வேண்டுமா, அல்லது கீழே வைக்க வேண்டுமா?எஸ்.தசாம்ருதம், திண்டுக்கல்.விபூதி, குங்குமம் இட்டுக் கொள்ளுதல் என்று சொல்லும் வழக்கத்தில் சொல்வதிலேயே இதைப் புரிந்து கொள்ளலாம். நெற்றியில் திருநீறை முதலிலும், அதன் பின் புருவ மத்தியில் குங்குமத்தையும் இட்டுக் கொள்ள வேண்டும்.* தவிர்க்க முடியாத சூழலில் நேர்த்திக் கடனை மற்றவர்கள் மூலம் நிறைவேற்றலாமா?ம.வாசுதேவன், பீடம்பள்ளி.அர்ச்சனை, அபிஷேகம், உண்டியல் காணிக்கை போன்ற சில விஷயங்களை பிறரைக் கொண்டு செய்வதில் தவறில்லை. முடி காணிக்கை, மாவிளக்கு போன்றவற்றை கால தாமதமானாலும் நாம் தான் செய்ய வேண்டும்.* குடும்பத்தில் சுபிட்சம் நிலவ என்ன வழிபாடு செய்ய வேண்டும்?எஸ்.சாந்தி, கடலூர்.சூரிய உதயத்தின் போதும், சூரிய அஸ்தமனத்தின் போதும் வீட்டில் யாரும் தூங்கிக் கொண்டிருக்கக் கூடாது. பூஜையறையில் தீபம் ஏற்ற வேண்டும். முக்கியமாக விளக்கேற்றும் வேளையில் வாசல் கதவு சாத்தி இருப்பது, வேண்டாத டிவி தொடர்களைப் பார்ப்பது, அழுவது, சண்டையிடுவது இவற்றையெல்லாம் தவிர்த்தாலே போதும். வீட்டில் எப்போதும் சுபிட்சம் நிலவும்.* வைதீக சடங்குகளில் கையில் பவித்ரம், தர்ப்பை அணிந்து கொள்வதன் நோக்கம் என்ன?பி.பாதராஜன், சென்னை.பவித்ரம் என்றால் புனிதம் என்பது பொருள். வைதீக சடங்குகளை செய்யும் கைகள் புனிதமானதாக இருக்க வேண்டும் என்பதற்காக தர்ப்பையால் ஆன பவித்ரம் (மோதிரம் போன்றது) விரலில் அணிவிக்கப்படுகிறது.* எங்கள் குடும்பத்திலுள்ள அனைவருக்கும் பெண்குழந்தை மட்டுமே பிறக்கிறது. இதற்குப் பரிகாரம் கூறுங்கள்.எம்.கவிதாஞ்சலி, பல்லடம்.பெண் குழந்தை வேண்டாம் என ஏதாவது தவறு செய்யாதீர்கள். அது மகா பாவம். இந்த காலத்தில் ஆணுக்கு நிகராக எல்லா சூழ்நிலையிலும் பெற்றோருக்கு பெண் குழந்தைகள் உதவி புரிவது கண்கூடான விஷயம். ஆண்குழந்தை பிறக்க சந்தான கோபால கிருஷ்ணரை வழிபட வேண்டும். தொட்டில் கட்டுதல், காணிக்கை செலுத்துதல், துலாபாரம் போன்ற நேர்த்திக்கடன் செய்வதாக வேண்டிக் கொள்ளலாம். ஜாதக ரீதியாக ஏதாவது தோஷம் இருக்கிறதா என்பதை அனுபவம் மிக்க ஜோதிடரிடம் கேட்டு பரிகாரம் செய்யலாம்.