கேளுங்க சொல்கிறோம்!
* பூஜையின் முடிவில் 'ஓம் சாந்தி' என்று மூன்றுமுறை சொல்கிறார்களே! ஏன்?எஸ்.சித்ரா, சிட்லபாக்கம்.சாந்தி என்றால் அமைதி. அமைதி இல்லாத வாழ்க்கை உபயோகமற்றதாகிறது. தனி மனிதனின் அமைதியின்மை பலரைப் பாதிக்கும். இதனால் வீடு, அலுவலகம், நாட்டு நிர்வாகம் சீர்குலையும். எனவே அனைவரும் அமைதியும் மகிழ்ச்சியும் பெற மூன்று முறை சாந்தி சொல்லப்படுகிறது.சுவாமிக்கு சூட்டி அர்ச்சனை செய்த மலரைத் தலையில் வைத்துக் கொள்ளலாமா?ச.தேவிகா, சிதம்பரம்.சுவாமி பிரசாதமான மலர்களைத் தலையில் சூட்டி வணங்கும் வழக்கம் காலங்காலமாக வழக்கில் உள்ளது. கார்களில் போட்டு சாலையில் சிதறச்செய்து, காலில்மிதி படுமாறு போடுவது தான் தவிர்க்கப்பட வேண்டும்.* ராகு காலத்தில் துர்க்கையை வீட்டிலேயே வழிபடலாமா. அல்லது கோவிலுக்குத்தான் செல்ல வேண்டுமா?ந.குருமூர்த்தி, திருவள்ளூர்.வீட்டில் செய்யும் வழிபாடு என்பதை சிலவற்றோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். ராகுகால வழிபாடு போன்றவை கோவிலுக்குச் சென்று செய்வதுதான் நல்லது. எல்லா நோய்க்கும் வீட்டிலேயே மருத்துவம் செய்து கொள்ள முடியாதல்லவா?** கோவிலில் சுவாமிக்கு காணிக்கை செலுத்துவது கட்டாயமா?கே.கீதா, விழுப்புரம்.கட்டாயம் என்பதில்லை. ஆனால் நாம் செலுத்தும் காணிக்கையைக் கொண்டுதான் கோவில்களைப் பராமரிக்கப்பட வேண்டிய சூழல் உருவாகி விட்டது. மக்கள் நலம்பெற ஊர்தோறும் கோவில்களை நிர்மாணித்து, அதன் பராமரிப்புக்காக அரசர்கள் பெரும் பொருளை ஒதுக்கினார்கள். நிலங்கள் மற்றும் பிற சொத்து மூலம் கோவில்களுக்கு வருமானம் குறைவின்றி கிடைத்தது. அப்போது பக்தர்களின் காணிக்கை வேண்டப்படாமல் இருந்தது. ஆனால் இன்று அந்த நிலங்களெல்லாம் என்னவாயிற்று என்றே தெரியவில்லை. கோவில்களின் பராமரிப்பு பக்தர்களின் காணிக்கையை நம்பியிருக்க வேண்டிய சூழலும் உருவாகிவிட்டது. நாம் நலம் பெறவேண்டி நிர்மாணிக்கப்பட்ட கோவில்கள் வருமானம் இல்லாமல் பூஜைகள் நின்றும் பழுதடைந்தும் உருமாறி வருவதைப் பார்த்தாவது எல்லாரும் காணிக்கை செலுத்த வேண்டும் என்பதைக் கட்டாயமாக்கிக் கொள்ளுங்கள். அரசாங்கமும் கோவில் குத்தகைதாரர்களிடம் கடும் நடவடிக்கை எடுத்து வசூல் செய்ய வேண்டும். கோவிலில் பூஜை நின்றால் சரியான அரசாட்சியிருக்காது, மழை பெய்யாது, கள்ளர் பயம் மிகும் என பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திருமூலர் பாடியுள்ளார். இன்று நம்மைச் சுற்றி நிகழும் நிகழ்வுகளும் அப்படித்தான் இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டு பூஜைகள் தொடர உதவுங்கள்.நித்ய பிரதோஷம் என்பதன் பொருள் என்ன? அப்போது என்ன செய்ய வேண்டும்?பா.கார்த்திகேயன், உளுந்தூர்பேட்டை.பிரதோஷம் ஐந்து வகைப்படும் என்பதை முன்பே கூறியுள்ளோம். நித்ய பிரதோஷம், பட்ச பிரதோஷம், மாத பிரதோஷம், மகா பிரதோஷம், பிரளய பிரதோஷம் என்பவை அவை. தினமும் மாலை 4:30 முதல் 6:00 மணி வரையிலான பொழுதுக்கு நித்ய பிரதோஷம் என்று பெயர். இந்த வேளையில் சிவபெருமானுக்கு நடக்கும் சாயரட்சை பூஜையைத் தரிசித்தால் நோய் நொடி இல்லாமல் வாழலாம்.