உள்ளூர் செய்திகள்

அசுர வதம் - 6

காலயவனன் வதம்அந்தணரான கார்க்கியர் என்பவரை சாலுவன் என்பவன் ஆணும் அல்ல; பெண்ணும் அல்ல என்னும் பொருளில் (பேடி) எனக் கேலி செய்தான். அதைக் கேட்ட யாதவர்கள் அனைவரும் சிரித்தனர். அவமானம் அடைந்த கார்க்கியர் கேலி செய்தவனை விட, தன்னைப் பார்த்துச் சிரித்த யாதவர்கள் மீது கோபம் கொண்டார். பிரம்மச்சாரியான அவர் யாதவர்களைப் பழி வாங்க எண்ணி தவத்தின் மூலம் ஒரு மகனை அடைய முடிவு செய்து, விந்திய மலையில் சிவனை வேண்டி தவமிருந்தார். அதில் மகிழ்ந்த சிவன், பிரம்மச்சாரியான கார்க்கியருக்கு காட்சியளித்து, அவர் விரும்பும் தம்பதியருக்கு குழந்தை வரத்தை நீ தரலாம் என அருள்புரிந்தார். இந்நிலையில் குழந்தை இன்றி வருந்திய யவன நாட்டு அரசரும், அரசியும் குழந்தைப் பேறு வழங்கும்படி கார்க்கியரிடம் வேண்டினர். கார்க்கியரும் வரம் தர சம்மதிக்க, யவன நாட்டு அரசனுக்கு ஆண் குழந்தை பிறந்தது. 'காலயவனன்' என பெயர் சூட்டி அக்குழந்தையை வளர்த்தனர். யாதவர்களை பழி வாங்க வேண்டும் என்ற எண்ணத்துடன் கார்க்கியர் இருந்ததால் அக்குழந்தை அசுர குணத்துடன் வளர்ந்தது. பிற்காலத்தில் யவன நாட்டின் அரசன் ஆனான். அண்டை நாடுகளின் மீது படையெடுத்து மக்களை கொடுமைப்படுத்தத் தொடங்கினான். இந்நிலையில் காலயவனனை சந்தித்த நாரதர், ''யாதவர்களின் மன்னரான கிருஷ்ணனை தோற்கடித்தால் உனக்கு பெருமை'' எனத் தெரிவித்தார். காலயவனனுக்கும் இதன்பின் யாதவர்களைப் பழிவாங்கும் எண்ணம் மேலோங்கியது. இதையறிந்த கிருஷ்ணரோ எப்படி அதை முறியடிக்கலாம் என திட்டம் தீட்டினார். மதுரா நகரவாசிகளான யாதவர்களை பாதுகாப்பான இடத்திற்கு மாற்ற முடிவு செய்தார். கடலரசனான சமுத்திர ராஜனிடம் அதற்கான இடம் தர வேண்டினார். அவனும் கடலை உள்வாங்கச் செய்தான். அங்கு புதிதாக துவாரகை என்னும் நகரை உருவாக்கி யாதவர்களை குடியேற்றினார். அதன் பிறகு சிறிய அளவிலான யாதவ படையுடன் போருக்கு புறப்பட்டார். காலயவனன் தாக்குதலில் கிருஷ்ணரின் படை அழிந்தது. காலயவனன் தாக்குதலுக்கு பயந்து அருகிலுள்ள கிர்நார் மலைக்குகையில் ஒளிந்தார். விரட்டிச் சென்ற காலயவனன் பல இடங்களில் தேடி, கடைசியில் குகைக்குள் நுழைந்தான். அங்கு பேரரசரான முசுகுந்தன் உறங்கிக் கொண்டிருந்தார். யார் இந்த முசுகுந்தன்? என்பதைத் அறிய அவரது கதையை தெரிந்து கொள்வோம். பிரம்மாவின் சாபத்தால் விதுாமன் என்னும் கந்தர்வன், குரங்காக மாறினான். ஒருமுறை வில்வ மரத்தடியில் பார்வதியுடன் சிவன் இருந்த போது, அதன் மீதிருந்த அந்த குரங்கு இலைகளைப் பறிக்க அவை சிவன் மீது விழுந்தன. அதையே சிவபூஜையாக கருதிய சிவன், மறுபிறவியில் பேரரசராக வாழ வரமளித்தார். சிவபக்தனாக பிறக்க வேண்டும் என்றும், மறுபிறவியில் முகம் மட்டும் குரங்காக இருக்க வேண்டும் எனக் கேட்க அதையும் சிவன் ஏற்றார். அந்தக் குரங்கே இட்சுவாகு குலத்தில் மாந்தாதாவின் மகனாக முசுகுந்தன்(குரங்கு முகம் கொண்டவன்) என்னும் பெயரில் பிறந்தது. தேவர்கள், அசுரர்களுக்கு இடையே போர் நடந்த போது, தேவர்களுக்கு ஆதரவாக முசுகுந்தன் போரிட்டு இந்திரனின் வெற்றிக்கு உதவினார். அதற்கு நன்றிக்கடனாக விரும்பும் வரத்தை தருவதாக இந்திரன் கூறினான். முசுகுந்தன் உணவு, உறக்கம் இன்றி போரிட்டதால் ஓய்வெடுக்க விரும்புவதாகவும், அதற்காக நீண்ட காலம் துாக்கம் தருமாறும், இடையில் யாரும் எழுப்பக் கூடாது என்றும், மீறி எழுப்பியவர் எரிந்து சாம்பலாகட்டும் என்றும் கேட்டார். இந்திரனும் சம்மதிக்கவே, பூமியிலுள்ள கிர்நார் மலைக்குகையைத் தேர்வு செய்து அங்கு துாங்கினார் முசுகுந்தன். இந்நிலையில் கிருஷ்ணரை விரட்டிச் சென்ற காலயவனன் இருட்டான குகைக்குள் நுழைந்தான். அங்கு முசுகுந்தனைக் கண்டதும், கிருஷ்ணர் தான் படுத்திருக்கிறார் என நினைத்து காலால் உதைத்தான். கண் விழித்த முசுகுந்தன் பார்த்ததும் காலயவனன் எரிந்து சாம்பலானான். மறைந்திருந்த கிருஷ்ணர் அப்போது தான் வெளியில் வந்தார். அவரைக் கண்டதும் மகாவிஷ்ணுவின் அவதாரம் கிருஷ்ணர் என்பதும், அசுரன் காலயவனனை வதம் புரிய அங்கு வந்திருப்பதும் புரிந்தது. வணங்கிய முசுகுந்தன் வீடுபேற்றை தருமாறு வேண்டினார். கிருஷ்ணரின் வழிகாட்டுதல் மூலம் இமயமலையில் உள்ள பத்ரிநாத்தில் தவம் புரிந்து வீடுபேறு அடைந்தார். -தொடரும்சப்தவிடங்கத் தலம்தேவலோகத்தில் இந்திரன் பூஜித்த சிவன் சிலையைத் திருவாரூர் கோயில் வழிபாட்டுக்கு தருமாறு முசுகுந்தன் கேட்டார். ஆனால் இந்திரன் நிபந்தனை ஒன்றை விதித்தான். அதன்படி தான் பூஜித்த சிலையைப் போல ஆறு சிலைகளை உருவாக்கி ஏழையும் ஓரிடத்தில் வைத்து, இதில் சரியான சிலையை 'உன்னால் முடிந்தால் எடுத்துக் கொள்' என தெரிவித்தான். சிவபக்தனான முசுகுந்தனும் சரியான சிலையை கண்டுபிடித்து எடுத்துக் கொண்டார். வியந்த இந்திரன் ஏழையும் முசுகுந்தனுக்கே பரிசாக கொடுத்தான். அவற்றை திருவாரூர், திருநள்ளாறு, நாகப்பட்டினம், திருக்காராயில், திருக்குவளை, திருவாய்மூர், வேதாரண்யம் கோயில்களில் பிரதிஷ்டை செய்தார். இத்தலங்கள் 'சப்த விடங்க தலங்கள்' (ஏழு சிலைகளின் கோயில்கள்) எனப் பெயர் பெற்றன.தாமரை மலர்கிர்நார் மலைக் குகையில் கிருஷ்ணரைக் கண்டு வணங்கிய முசுகுந்தன், 'தான் எப்போதும் பகவான் கிருஷ்ணருடன் இருக்க வேண்டும்' என வேண்டுகோள் விடுத்தார். அதை ஏற்ற கிருஷ்ணரும் தாமரை மலராக உருமாற்றி முசுகுந்தனைக் தன் கையிலேயே தாங்கிக் கொண்டார். தேனி மு.சுப்பிரமணி99407 85925