அசுர வதம் - 24
சம்பராசுரன் வதம்மாயாசுரனிடம் இருந்து மாயஜால வித்தைகளைக் கற்றான் அசுரனான சம்பரன். அதனால் ஆணவத்துடன் செயல்படத் தொடங்கினான். தவம் செய்யும் முனிவர்களை எல்லாம் துன்புறுத்தினான். பாதிக்கப்பட்டவர்கள் கிருஷ்ணரிடம் முறையிட, “அசுரன் விரைவில் அழிக்கப்படுவான்” எனத் தெரிவித்தார். இந்நிலையில் ஒருநாள், “கிருஷ்ணர், ருக்மணி தம்பதிக்குப் பிறக்கும் மகனால் உனக்கு அழிவு நேரும்'' என அசுரனுக்கு அசரீரி கேட்டது. இதனால் கவலை கொண்டான் அவன் இதை எப்படியாவது தடுக்க வேண்டும் என எண்ணினான். இதனிடையே விதர்ப்ப தேச மன்னர் பீஷ்மகனின் மகளான ருக்மணியும், கிருஷ்ணரும் ஒருவரை ஒருவர் நேசித்தனர். ருக்மணியின் சகோதரனான ருக்மி இதற்கு எதிர்ப்பு தெரிவித்தான். அத்துடன் ருக்மணியைச் சேதி நாட்டு மன்னன் சிசுபாலனுக்குத் திருமணம் முடிக்க வேண்டும் என தந்தையின்(பீஷ்மகன்) அனுமதியைப் பெற்றான்.திருமணத்திற்கான ஏற்பாடு நடந்தது. அண்டை நாட்டு மன்னர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டது. இதையறிந்த கிருஷ்ணர், தன் காதலியான ருக்மணியைக் கவர்ந்து சென்றார். தங்கையைப் பின்தொடர்ந்தான் ருக்மி. ஆனால் கிருஷ்ணர் அவனது முயற்சியை முறியடித்தார். இதன்பின் துவாரகையில் கிருஷ்ணருக்கும், ருக்மணிக்கும் திருமணம் நடந்தது. அவர்களுக்கு 'பிரத்யும்னன்' என்னும் ஆண் குழந்தை பிறந்தது. இதைக் கேள்விப்பட்ட சம்பராசுரன் தன்னை பெண்ணாக மாற்றிக் கொண்டு புறப்பட்டான். பிறந்து இருபது நாளே ஆன குழந்தையை யாருக்கும் தெரியாமல் திருடிச் சென்று கடலில் வீசினான். அக்குழந்தையை மீன் ஒன்று விழுங்கியது. அது மீனவன் ஒருவனின் வலையில் சிக்க, அதை சம்பராசுரனின் வீட்டுப் பணியாளன் விலைக்கு வாங்கி வந்தான். சமையல்காரியான மாயாவதி அந்த மீனை நறுக்க எடுத்தாள். அப்போது அதன் வயிற்றில் அசைவு உண்டாகவே விழிப்புடன் நறுக்கினாள். அதன் வயிற்றில் அழகான குழந்தை ஒன்று இருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டாள். அப்போது அங்கு நாரதர் வந்தார், ''கிருஷ்ணர், ருக்மணி தம்பதிக்கு பிறந்த குழந்தை இது. சம்பராசுரனை அழிப்பதற்காக பிறந்த இவனது பெயர் பிரத்யும்னன்'' என நடந்ததை எல்லாம் விவரித்தார். 'குழந்தையை வளர்க்கத் தகுதியானவள் நீ தான்'' என்றும் தெரிவித்தார். “இந்தக் குழந்தையை நான் ஏன் வளர்க்க வேண்டும்” எனக் கேட்டாள் மாயாவதி. “சிவனின் கோபத்திற்கு ஆளாகி அவரது நெற்றிக் கண்களால் எரிக்கப்பட்டான் மன்மதன். கவலையடைந்த மன்மதனின் மனைவி ரதி, தன் கணவரை மீட்க தவமிருந்து சிவனிடம் வரம் பெற்றாள். அதன்படி கிருஷ்ணர், ருக்மணி தம்பதிக்கு மகனாக மன்மதன் பிறந்தான். அவனே இந்த பிரத்யும்னன். அசுரனான சம்பரனை வதம் செய்த பின், மீண்டும் ரதியை அடைவான்” என விவரித்தார். ஆச்சரியப்பட்ட மாயாவதியும் குழந்தையை வளர்க்க சம்மதித்ததோடு, “மன்மதன் பிரத்யும்னனாகப் பிறந்து இங்கிருக்கிறான். சரி... ரதி எப்போது பிறப்பாள்” எனக் கேட்டாள். அதனைக் கேட்ட நாரதர் சிரித்தார். இவனுக்கு முன்பாகவே ரதி பிறந்து விட்டாள். அவள் யார் என்பதை அறிய விரும்பினால் சிறிது நேரம் நீ கண்களை மூடி தியானம் செய்'' என்றார். அவளும் தியானத்தில் ஆழ்ந்தாள். மன்மதன் நெற்றிக் கண்களால் எரிக்கப்பட்டது முதல் ரதி தவமிருந்து வரம் கேட்டுப் பூமிக்கு வந்தது வரை அனைத்தும் காட்சியாகத் தெரிந்தது. தானே மன்மதனின் மனைவி ரதி என்பதும், தன்னிடம் குழந்தையாக இருப்பது மன்மதன் என்பதும் அவளுக்குப் புரிந்தது. அதன்பின் நாரதர் வைகுண்டத்திற்கு புறப்பட்டார். இளைஞனாக வளர்ந்த பிரத்யும்னனுக்கு கடந்த கால நிகழ்வுகள் எல்லாம் காட்சிகளாக தெரிந்தன. மாயாவதிதான் ரதி என்பதையும், சம்பராசுரனை அழிப்பதற்காகவே பிரத்யும்னனாக தான் பிறந்திருப்பதையும் உணர்ந்தான். போருக்கு அழைப்பு விடுக்க, இருவரும் பலமாக மோதிக் கொண்டனர். மாயக் கலைகளைப் பயன்படுத்திப் போக்குக் காட்டினான் அசுரன். மாயத்தில் வல்லவரான கிருஷ்ணரின் மகனான பிரத்யும்னனிடம், அசுரனின் மாயவித்தைகள் பயனற்றுப் போயின. இறுதியில் வாளால் அசுரனின் தலையை வெட்டினான். அசுரனின் முடிவை அறிந்த மாயாவதி அங்கு வந்தாள். அவளை அழைத்துக் கொண்டு பெற்றோரைக் காணும் ஆவலுடன் துவாரகைக்குச் சென்றான் பிரத்யும்னன். ராமாயணத்தில் சம்பராசுரன்சம்பராசுரன் போரிட்டு தேவலோகத்தைக் கைப்பற்றினான். இந்திரனை அங்கிருந்து துரத்தினான். பூமிக்கு வந்த இந்திரன், அயோத்தி மன்னரான தசரதரிடம் உதவி கேட்டான். அவரும் சம்மதித்தார். தேரோட்டியாக தன் இளைய மனைவியான கைகேயியை அழைத்துக் கொண்டு புறப்பட்டார். சம்பராசுரனோடு போர் புரிந்து தேவலோகத்தை மீட்டு இந்திரனிடம் ஒப்படைத்தார்.-தொடரும்தேனி மு.சுப்பிரமணி99407 85925