உள்ளூர் செய்திகள்

தயக்கம் வேண்டாம்

காஞ்சி மஹாபெரியவர் திருச்சியில் முகாமிட்டிருந்தார். அவரைத் தரிசிக்க விரும்பிய தொழிலதிபர் ஜம்னாலால் பஜாஜ், 'சுவாமிகளுக்கு அறிமுகமான ஒருவருடன் சென்றால் நன்றாக இருக்கும்' எனக் கருதி மூதறிஞர் ராஜாஜியுடன் சென்றார். ஜம்னாலாலை அறிமுகப்படுத்தி விட்டு ராஜாஜி, சுவாமிகள் தங்கிய குடிலுக்கு வெளியே நின்று கொண்டார். சிவபெருமானைப் போல கம்பீரமாக காட்சியளித்தார் மஹாபெரியவர். ஜம்னாலால் கைகளை உயர்த்தி வணங்கினார். ' உங்களுடன் துணைக்கு வந்தவர் யார்?' எனக் கேட்டார் மஹாபெரியவர்.'ராஜாஜி' 'அப்படியா... அவர் எங்கே?''வெளியே நிற்கிறார்' என்றார் ஜம்னாலால்.அருகில் நின்ற சிப்பந்தியிடம், 'ராஜாஜியை கூப்பிடு' என்றதும் அவர் ஓடி வந்தார். ஆனால் தயங்கியபடி தள்ளி நின்றார். புன்னகைத்த மஹாபெரியவர், 'அதிகாலையில் சீக்கிரமா எழுந்து சுதந்திரப் போராட்டம் தொடர்பான பணிகளைச் செய்திருப்பாய். பலருக்கும் கடிதம் எழுதியிருப்பாய். உனக்கு வேலைப்பளு அதிகம். அதனால் உன்னால் குளிக்க முடியவில்லை. இந்த நேரத்துல உன்னை அழைத்ததும் அப்படியே இங்கு வந்து விட்டாய். குளிக்காமல் எப்படித் தரிசிப்பதுன்னு கேள்வி மனதில் உண்டானதால் அப்படியே நின்னுட்டே... அதுதானே?' என்றார். தயக்கமுடன் தலையசைத்தார் ராஜாஜி.'வாழ்க்கையை பிறந்த நாட்டுக்காக அர்ப்பணம் பண்ணியவர்களுக்கு நாடு வேறு; தெய்வம் வேறல்ல. இரண்டும் ஒன்றே. தேசபக்தனான நீ ஆசாரம் பற்றி கவலைப்பட வேண்டாம். தேசத்தின் மீதுள்ள பக்தியால் உன் உடல், மனம் எல்லாம் சுத்தமாகி விட்டது' என்றார் மஹாபெரியவர். பரவசத்தில் ராஜாஜியின் கண்கள் கலங்கின. மேலும் மஹாபெரியவர், 'எந்த சூழலிலும் தரிசனம் பண்ண நீ வரலாம். தயக்கம் வேண்டாம். உன்னைப் போன்ற தியாகிகள் அனைவருக்கும் இது பொருந்தும்'கண்ணீருடன் நா தழுதழுக்க நடமாடும் தெய்வத்தின் முன் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தார் ராஜாஜி. பிரசாதம் கொடுத்து வழியனுப்பினார் காஞ்சி மஹாபெரியவர்.காஞ்சி மஹாபெரியவரின் உபதேசம்* எல்லோரும் நலமுடன் வாழ கடவுளை வேண்டுங்கள்.* மதத்தை மதிப்பவருக்கு ஓட்டளியுங்கள்.* தாய் மதத்தை பழிப்பது தாயை பழிப்பதற்கு சமம்.* குலதெய்வத்தை ஆண்டுக்கு இரண்டு முறையாவது தரிசியுங்கள்.* தேய்பிறையில் செய்யும் வழிபாடு பிரச்னையை போக்கும்.* வளர்பிறையில் செய்யும் வழிபாடு வளர்ச்சியை தரும்.* ஈர ஆடையுடன் வழிபாடு செய்யக்கூடாது.* மனதை கெடுக்கும் எந்த நிகழ்ச்சிகளையும் பார்க்காதீர்கள்.உடல்நலம் பெற... காஞ்சி மஹாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்அஸ்மிந் பராத்மன் நநு பாத்மகல்பேத்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!அநந்த பூமா மமரோக ராஸிம்நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவரே! நீயே நோய்களைப் போக்கி நலம் தர வேண்டும்.பி.சுவாமிநாதன்swami1964@gmail.com