பச்சைப்புடவைக்காரி - 16
பாடகரின் பொல்லாத ஆசைஎன் முன் இருந்த பாடகர் நாராயணனுக்கு 55 வயது. நல்ல நிறம். அழகூட்டும் ஒப்பனை. பாடகர் என் நீண்டகால நண்பர். “பாழாய்ப்போன மனசு அலைபாயுது. நான் செய்யறது சரியான்னு தெரியல”புகைப்படம் ஒன்றை நீட்டினார். ஒரு பேரழகி. “பேரு சந்தியா. வயது 28. ஏழைக் குடும்பம். அப்பா இல்ல. இரு தங்கை. இதுவரைக்கும் ஒழுக்கமா வாழ்ந்துட்டேங்க. இனியும் அப்படி வாழணும்னு நினைக்கறேன்.“என் மனைவி இறந்து அஞ்சு வருஷமாச்சு. மகன், மகள் வெளிநாட்டுல இருக்காங்க. என்னால தனியா வாழ முடியல. சந்தியாகிட்ட, 'கல்யாணம் பண்ணிக்கிறியா?'ன்னு கேட்டேன். சரின்னு சொல்லிட்டா. எளிமையா வீட்டோட கல்யாணத்த வச்சிக்கப் போறேன்.“பொண்ணோட சம்மதத்துடன் இந்தக் கல்யாணம் நடக்குது. இருந்தாலும் மனசில ஒரு உறுத்தல்''எனக்குப் பேச்சு வரவில்லை.“வெள்ளிக் கிழமை உங்களப் பாக்க வரேன். செய்யறது தப்புன்னா கல்யாணத்த நிறுத்திடலாம்”என் பதிலுக்கு காத்திருக்காமல் பாடகர் சென்று விட்டார்.வியாழன் அன்று மாலை ஒரு திருமண வரவேற்பில் மணமக்களுக்கு பரிசு கொடுக்க நின்ற போது யாரோ தோளைத் தொட திடுக்கிட்டேன்.கம்பீரமான நடுத்தர வயதுப் பெண் நின்றிருந்தாள்..“பாடகனுக்கு பதில் சொல்ல வேண்டாமா... உதவ வந்தால் முறைக்கிறாயே” வணங்கப் போன என்னைத் தடுத்தாள். “நான் சொல்வதுபோல் அவனிடம் சொல்”திடுக்கிட்டேன். “என்ன செய்வது, சில நோய்க்கு அதிர்ச்சி வைத்தியம்தான்”“இதற்கு பாடகர் ஒப்புக் கொள்வாரா?”“மாட்டான். ஒப்புக்கொள்ள வைப்பேன். உன் வேலையை மட்டும் பார்”மறுநாள் பாடகர் மீது ஒரு குண்டைப் போட்டேன்.“அந்த பொண்ணு முழு மனசா சம்மதிப்பான்னு தோணல”“என்ன உளறுறீங்க? நான் பேசினேன். எங்க அக்கா பேசினாங்க. அந்தப் பொண்ணோட அம்மா பேசினாங்க...''“அந்தக் குடும்பம் வறுமையில இருக்கு. அதனாலதான் சரின்னுட்டாங்க... வசதியான எந்தப் பொண்ணாவது முப்பது வயசு மூத்தவரக் கல்யாணம் செய்வாளா?''“இதுக்கும் வசதிக்கும் என்ன சம்பந்தம்? சந்தியாவுக்கு என்னோட பாட்டு பிடிச்சிருக்கு. கல்யாணம் பண்ணலாமான்னு கேட்டதும் சரின்னுட்டா”“பாட்டுப் பிடிச்சதால சொல்லல, பணம் இல்லாததால சொல்லிட்டா”“அதுக்கு என்ன செய்யறது?”“உங்ககிட்ட நெறைய சொத்து இருக்கு. பரம்பரைச் சொத்துபோக பாட்டால சம்பாதிச்சதே கோடி கோடியா இருக்கு”பாடகர் முகம் மலர்ந்தது. “உங்க சொத்துல ஒரு கோடி ரூபாய் பெறுமானம் உள்ள ஒரு வீட்ட... சந்தியா பேருக்கு எழுதி வச்சிருங்க. அதுக்கப்பறமும் கல்யாணத்துக்கு சம்மதிக்கறாளான்னு பாப்போம்”“சொத்துல பாதிய அவளுக்குத்தான் எழுதி வைக்கப் போறேன். சொத்தை கொடுக்காதப்பவே சரின்னு சொன்னவ சொத்து கொடுத்தா டபுள் ஓகேன்னு சொல்லிருவா”“அங்கதான் விஷயம் இருக்கு. உங்க சொத்த தானமாக தரக் கூடாது. அந்தக் காலத்துல சந்தியாவோட அப்பாகிட்ட கடன் வாங்கியதாகவும் கடனத் திருப்பிக் கட்டறதுக்குள்ள அவரு இறந்ததாகவும் அந்தக் கடன்ல வாங்கின சொத்துத்தான் இதுன்னு பொய் சொல்லி உங்க சொத்து ஒண்ண அவ பேர்ல எழுதணும். சந்தியாவுக்கு அது தனக்குச் சொந்தமானதுங்கற எண்ணம் வரணும். அப்போ நீங்களும், சந்தியாவும் ஒரு மாதிரி சம தளத்துல இருப்பீங்க. அதுக்கப்பறமும் சம்மதிச்சான்னா கல்யாணம் பண்ணுங்க”“என்ன சார் விளையாடறீங்களா? சொத்த வாங்கிட்டு கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொன்னா...''“அவ முழு சம்மதம் இல்லேன்னு அர்த்தம்”“இந்த ஆட்டத்துக்கு நான் வரல. பச்சைப்புடவைக்காரி பக்தராச்சேன்னு கருத்து கேட்க வந்தா இப்படி குதர்க்கமா பேசுறீங்க?”விடுவிடுவென வெளியேறினார் பாடகர்.அன்று மாலை நடைப்பயிற்சி சென்றபோது தெருமுனையில் ஒரு பெண்ணை பார்த்தேன். அவள் என்னை அழைத்தாள்.“பாடகன் கோபித்துக் கொண்டானாக்கும்”“எதிர்பார்த்ததுதானே! யார்தான் சொத்தைத் தர சம்மதிப்பார்கள்”“பாடகனின் கர்மக் கணக்கு சொதப்பலாக உள்ளது. உண்மையிலேயே சொத்தை தராவிட்டால் பெரிய இழப்பைச் சந்திப்பான். எச்சரிக்க முடியுமா என பார்க்கிறேன்”தாய் மறைந்துவிட்டாள். நான்கு நாள் கழித்து அலுவலகத்தில் எனக்காக பாடகர் காத்திருந்தார். தலை கலைந்திருந்தது. முகத்தில் அசாத்திய சோகம்.“என்னாச்சு கல்யாணத்துக்கு நாள் குறிச்சாச்சா?”“அந்தக் கொடுமைய ஏன் கேட்கிறீங்க? நேத்து அமெரிக்காவுல மகள்கிட்டருந்து போன். மாப்பிள்ளைக்கு ஹார்ட் அட்டாக். ஆஸ்பத்திரில சேர்த்திருக்காங்க. ஒருநாள் கழிச்சித்தான் பிழைப்பாரான்னு சொல்ல முடியும். என் பொண்ணுக்கு முப்பது வயசுகூட ஆகல. அதுக்குள்ள இப்படி...''பச்சைப்புடவைக்காரி வேலையைக் காட்டத் தொடங்கிவிட்டாள்.“அதற்காக கல்யாணத்தத் தள்ளிப் போடப்போறீங்களா என்ன?”“இந்த நேரத்துல கல்யாணத்தப் பத்தி நினைக்கத் தோணுமா சார்? மாப்பிள்ளையக் காப்பாத்த என்ன வழின்னு சொல்லுங்க”“ஏற்கனவே சொன்னது தான். அந்தப் பொண்ணுக்கு சொத்து கொடுங்க. அது நல்லா வாழ்ந்த குடும்பம். இப்போ ஏதோ மோசமான நிலைக்கு வந்திருச்சி. கல்யாணத்தப் பத்தி பேசாதீங்க. அவங்கப்பாகிட்ட வாங்கின கடனுக்காகன்னு சொல்லுங்க. அந்தக் குடும்பமே வாழ்த்தும். அதுல உங்க மாப்பிள்ளை குணமாக வாய்ப்பு இருக்கு”“அப்பக்கூட நிச்சயமா சொல்ல மாட்டேங்கிறீங்களே?”“அது பச்சைப்புடவைக்காரி கையில இருக்கு. அவ கைவிட மாட்டா”கைகூப்பி விட்டுச் சென்றுவிட்டார் பாடகர். “டாக்டர் சிவகாமியாம். உங்கள உடனே பாக்கணுமாம்”உதவியாளர் சொல்லி முடிப்பதற்குள் அறையில் நுழைந்தவளைப் பார்த்ததும் அடையாளம் தெரிந்தது. வணங்கினேன்.“அந்தப் பெண்ணை காப்பாற்றி விட்டீர்கள் தாயே”“பாடகனையும் காப்பாற்றி விட்டேன். கர்மக்கணக்குப்படி அவனுக்கு நெருக்கமானவர் இறக்கவேண்டும். அவன் சொத்தைக் கொடுக்க முன் வந்ததால் அவன் மாப்பிள்ளையைக் காப்பாற்றி விட்டேன். அவனை விடு. உனக்கு என்ன வேண்டும் எனச் சொல்”“பாடகர் சபலப்பட்டது மனித இயல்பு. அந்தச் சூழலில் நானும் அப்படித்தான் இருந்திருப்பேன். நான் எந்தச் சூழ்நிலையிலும் சபலப்படக் கூடாது என்ற வரத்தைக் கொடுங்கள்”“முடியாது. வேறு ஏதாவது கேள்”“என் மனதை விட்டு நீங்கள் ஒரு கணம்கூட அகலாமல் இருக்கும் வரத்தைக் கொடுங்கள்”“ஆசையைப் பாரேன்! அதே வரத்தை வேறு வார்த்தைகளில் கேட்கிறாயே”அடுத்த கணம் அம்பிகை மறைந்தாள். -தொடரும்வரலொட்டி ரெங்கசாமிvaralotti@gmail.com