உள்ளூர் செய்திகள்

ஈசான்ய ஞான தேசிகர்

வேலுார் மாவட்டத்தை சேர்ந்த திருநீலகண்ட தேசிகர், உமாபார்வதி தம்பதிக்கு 1750ல் ஈசான்ய ஞானதேசிகர் பிறந்தார். இவரது பெயர் கந்தப்பன். ஆன்மிக நாட்டம் கொண்ட இவர் தன் தந்தையிடம் கல்வி கற்றார். ஏழு வயதில் குடும்ப வழக்கப்படி 'ஆசார்ய அபிஷேகம்' என்னும் சடங்கை நடத்தி 'கந்தப்ப தேசிகர்' என அவரது பெயரை மாற்றினர். திருமணத்தை விரும்பாத இவர் ஆன்மிக யாத்திரை மேற்கொண்டார். சிதம்பரத்தில் தங்கிய இருந்த போது 'மவுனயோகி' என்பவரின் அறிமுகம் கிடைத்தது. அவரிடம் தீட்சை பெற எண்ணி அவருக்கு தொண்டு செய்து வந்தார். குருநாதர் அருளால் கந்தப்ப தேசிகருக்கு ஞானம் ஏற்பட்டது. பின்னர் குருநாதரின் ஆயுள் வரை அவருடன் இருந்தார். பின்னர் திருவண்ணாமலை அருகிலுள்ள வேட்டவலம் குகையில் தங்கி தவத்தில் ஈடுபட்டார். அங்கு முத்துசாமி உடையார் என்னும் பக்தர் அவ்வப்போது பணிவிடை செய்தார். ஒருநாள் பக்தரான உடையார் தன் வயலில் உழுத போது புதையல் கிடைக்க அதில் ஏராளமான பொற்காசுகள் இருந்தன. விஷயம் அறிந்த மக்கள் தாங்களும் செல்வந்தராக உதவி செய்யுமாறு அவரை மொய்த்தனர். அவரோ பணத்தாசை கூடாது என சொல்லியும் யாரும் கேட்கத் தயாராக இல்லை. வேறு வழியின்றி தேசிகர் திருவண்ணாமலைக்கு அருகிலுள்ள கோரக்கநாதர் குளத்திற்கு சென்றார். அங்கு அருணாசல செட்டியார் என்பவர் தேசிகருக்கு பணிவிடை செய்ய வந்தார். குழந்தை இல்லாத அருணாசலத்திற்கு குருவருளால் குழந்தை பிறந்தது. இந்நிலையில் முன்னாள் பக்தரான உடையாரின் கனவில் சிவபெருமான் தோன்றி தேசிகரின் இருப்பிடத்தை தெரிவிக்கவே மீண்டும் பணிவிடை செய்ய வந்தார் உடையார். ஒருமுறை திருவண்ணாமலை கலெக்டரான ஐடன் சந்திக்க வந்த போது அவரைச் சுற்றி புலிகள் இருந்தன. ''நண்பர்களே.. இங்கிருந்து நகருங்கள். விருந்தாளி காத்திருக்கிறார் ” என்று சொல்ல புலிகளும் சென்றன. பின்னர் இருவரும் உரையாடினர். தேசிகரின் அருளால் ஐடனுக்கு காச நோய் தீர்ந்தது. இதன்பின் திருவண்ணாமலை கோயிலுக்கு திருப்பணியுடன் தேரோட்டத்தையும் நடத்தி வைத்தார் ஐடன். திருவண்ணாமலையின் வடகிழக்கு மூலையில் மடம் இருந்ததால் 'ஈசான்ய (வடகிழக்கு) ஞான தேசிகர்' என அழைக்கின்றனர்.