வானங்களும் வானவர்களும்
நுாரே முஹம்மதீ ஒளியிலிருந்துதான் இறைவன் சந்திரன், சூரியன், நட்சத்திரங்கள், பகல், இரவு, எட்டு சுவர்க்கங்களைப் படைத்தான். இவை எட்டும் ஆறாம் அல்லது ஏழாம் வானத்திலுள்ளன. வானங்கள் மொத்தம் ஏழாகும். முதல் வானம் பச்சை நிறத்திலும் இதில் உள்ள வானவர்கள் பசுவின் முகத்தோடு உள்ளனர். இரண்டாம் வானம் சிவப்பு மரகத நிறத்திலும் வானவர்கள் புறா முகத்தோடு உள்ளனர். மூன்றாம் வானம் நீல மரகத நிறத்திலும் வானவர்கள் கழுதை முகத்தோடு உள்ளனர். நான்காம் வானம் வெள்ளி நிறமாகவும் வானவர்கள் குதிரை முகத்தோடு உள்ளனர். ஐந்தாம் வானம் தங்க நிறத்திலும் வானவர்கள் கண்ணழகிகள் (ஹூருல்ஈன்) முகத்தோடு உள்ளனர். ஆறாம் வானம் வெண்ணிற முத்து நிறத்திலுள்ளது. வானவர்கள் சிறு குழந்தைகளின் உருவம் கொண்டுள்ளனர். ஏழாம் வானம் பிரகாசமான ஒளிமயமாயுள்ளது. வானவர்கள் மனித முகத்தினராய் உள்ளனர். இந்த வானவர்களில் சிலர் தொழுகையில் நிற்பவர்களாகவும், சிலர் 'ருகூஉ' செய்தவர்களாகவும், சிலர் 'ஸஜ்தா' செய்தவர்களாகவும், சிலர் 'கஃதா'வில் உட்கார்ந்தவர்களாகவும் உள்ளனர். இவர்கள் அனைவரும் உலக இறுதி நாள் வரையிலும் இதே நிலையில்தான் இருந்து வருவர்.