உன் கட்டளையே முக்கியம்
ஹஜ்ரத் ஜிப்ரீலை (அலை) பூமியில் இருந்து ஒரு பிடி மண்ணை எடுத்து வருமாறு ஆணையிட்டான் இறைவன். அதன்படி அவர் மண்ணை அள்ள முயன்றபோது, பூமி 'வேண்டாம் மண்ணை எடுக்காதே' என அழுதது. இதனால் அவர் திரும்பிச் சென்றார். பின் ஹஜ்ரத் மீகாயீல், ஹஜ்ரத் இஸ்ராபீல் என இருவர் அனுப்பப்பட்டனர். இவர்களும் பூமியின் வருத்தத்தைக் கண்டு திரும்பினர். கடைசியாக ஹஜ்ரத் இஜ்ராயீலிடம் அவசியம் மண்ணைக் கொண்டு வருமாறு ஆணை வந்தது. அவர் பூமியைப் பார்த்து, 'இறைவனின் கட்டளைப்படிச் செயல்பட விடாது நீ மூன்று வானவர்களைத் தடுத்துவிட்டாய். இதுவே நீ செய்துள்ள பெரிய குற்றம். இப்படி அவனது உத்தரவுக்கு அடிபணிய மறுக்கும் பொழுது உன்னில் இருந்து படைக்கப்படும் மனிதர்கள் எப்படி அடிபணியப் போகிறார்கள். அனாவசியமாக நீ துக்கப்பட்டு பிரயோஜனமில்லை' என்று கூறி மண்ணை எடுத்துச் சென்று சமர்ப்பித்தார். பின் இறைவன், ''பூமி இவ்வளவு துயரப்பட்டும். என்னிடம் பாதுகாப்புக் கோரியும் நீர் அதன்மீது ஏன் இரக்கப்படவில்லை'' என வினவினான். அதற்கு அவர், ''அதன் துயரை விட உன் கட்டளையே எனக்கு மிகவும் முக்கியம்'' என்றார்.