உங்களை எச்சரிக்கிறேன்
இம்மை, மறுமை குறித்த கீழ்க்கண்டவைகளை நபிகள் நாயகம் சொல்கிறார். கடந்த வயது, எஞ்சியிருக்கும் வாழ்நாள் என இரண்டிற்கும் இடையில் மனிதன் அகப்பட்டுக்கொண்டிருக்கிறான். அதாவது தனது வாழ்நாளில் ஒரு பகுதியை வீணாகக் கழித்துவிட்டான். இவற்றை இறைவன் மன்னித்துவிடுவானா? ஒருவேளை மன்னிக்கலாம். ஆனால் மன்னிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அதே சமயத்தில் 'தண்டனை கொடுப்பவன்' என்ற பெயரும் அவனுக்கு உள்ளது. மன்னிப்பு கிடைத்தால் சரி. கிடைக்காவிட்டால் என்ன செய்வது என தெரியாமல் தடுமாறுகிறான். அடுத்தபடியாக எதிர்காலம் பயமுறுத்துகிறது. அப்போது எத்தனை தவறு செய்வான் என்றே தெரியவில்லை. எனவே உங்களை எச்சரிக்கிறேன். ஒவ்வொரு மூச்சையும் நல்ல முறையில் செலவிட வேண்டும். இம்மையை மறுமைக்குப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். மரணத்திற்குப் பிறகு வரப்போகும் இன்னல்களைச் சமாளிப்பதற்காக வாழ்நாள் முழுவதும் முயலுங்கள். இளமையாக இருக்கும்போது செயலில் இறங்குங்கள். வயோதிகத்தில் செயலாற்ற முடியாது. பரந்து விரிந்த இந்த மண்ணுலகமும் இதில் உள்ள இன்பங்களும் உங்களுக்காகவே படைக்கப்பட்டிருக்கின்றன. மரணத்திற்குப் பிறகு மனிதனின் நிலை என்ன? ஒன்று நிரந்தர இன்பத்துக்கு உரிமையாளனாவான் அல்லது நீங்காத வேதனையில் புழுங்கித் தத்தளிப்பான். இந்த இரண்டில் ஒன்று நிச்சயம் உண்டு.