நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலர் புஸ்ஸி ஆனந்த்: திருமண மண்டபங்களில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு, 1,000 முதல் 1,500 பேர் வரைக்கும் உணவு தயாரிக்கப்படுகிறது. சில நேரங்களில், 700 பேர் மட்டுமே சாப்பிடுகின்றனர்; உணவு மீதமாகிறது. இரவு 11:00 மணிக்கு அதை குப்பையில் கொட்டுகின்றனர். அதுபோன்று மீதமாகும் உணவுகளை, எங்கள் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பெற்று, 'பார்சல்' செய்து ஆதரவற்றோர், முதியோர், ஏழைகளுக்கு வழங்குவர். டவுட் தனபாலு: பாராட்டப்பட வேண்டிய விஷயம் தான்... ஆனா, ஒரு படத்துக்கு 100 - 150 கோடி ரூபாய் வரை சம்பளம்வாங்குற விஜய் தரப்பே, ஆதரவற்றோர், முதியோருக்கு உணவு வழங்க சிறப்பு ஏற்பாடு செய்தால், அவரது கட்சிக்கு தமிழக மக்கள் மத்தியில் ஆதரவு அதிகரிக்கும் என்பதில், 'டவுட்'டே இல்லை!அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன்: இந்தியாவில் உள்ள பெரும்பாலான பல்கலைகளில், பேராசிரியர் காலி பணியிடங்கள் காரணமாக, தமிழ் துறைகள் மூடப்படுவது, தமிழறிஞர்கள் மற்றும் தமிழ் உணர்வாளர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. அண்டை மாநில பல்கலைகளில் செயல்படும், தமிழ் துறைகளுக்கு தேவையான பேராசிரியர்களை நியமித்து, அத்துறைகள் தடையின்றி செயல்படுவதற்கு தேவையான நடவடிக்கைகளை, தமிழக அரசு உடனடியாக எடுக்க வேண்டும்.டவுட் தனபாலு: சரியா போச்சு போங்க... தமிழக பல்கலைகள், கல்லுாரிகள்லயே எத்தனை பேராசிரியர் பணியிடங்கள் காலியா கிடக்குது தெரியுமா...? கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவங்க, வானம் ஏறி வைகுண்டம் போவாங்களா என்ற, 'டவுட்' உங்களுக்கு வரலையா?அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி: நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே, சமீபத்தில் நடந்த கோவில் திருவிழாவில், போதை ஆசாமிகள், காவலர்களை தாக்கிய சம்பவம், மக்கள் இடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் போதை பொருள் கலாசாரம் அதிகரித்ததால், பொதுமக்கள், வியாபாரிகள் தாக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது போதை ஆசாமிகள், காவல் துறையினரை, பொதுவெளியில் தாக்கும் சம்பவம் கவலை அளிக்கிறது.டவுட் தனபாலு: ஆட்டை கடிச்சு, மாட்டை கடிச்சு, கடைசியில மனுஷனை கடிச்ச கதையா போயிடுச்சே... பீஹார் மாதிரி இங்கயும் பூரண மதுவிலக்கு அமலுக்கு வந்தால் தான், இதுபோன்ற சீரழிவுகளுக்கு விடிவுகாலம் பிறக்கும் என்பதில், 'டவுட்'டே இல்லை!