எஸ்.ஆர்.மணியன், சென்னையில்
இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ஆட்சிக் கட்டிலில் படுத்து
உறங்க வேண்டும் என்ற பேராசையில், காங்., கட்சி, அவதுாறுகளை அள்ளி வீசுவது
ஒன்றையே, முக்கிய ஆயுதமாக எடுத்து கையாண்டு கொண்டிருக்கிறது.கர்நாடகாவின்,
ஹாசன் தொகுதி, ம.ஜ.த., -- எம்.பி.,யாக இருப்பவர், பிரஜ்வல் ரேவண்ணா, 33.
முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன். ஆபாச வீடியோ வழக்கில் சிக்கி
உள்ளார். இந்த வழக்கை சிறப்பு விசாரணை குழு விசாரித்துக் கொண்டிருக்கிறது.பிரஜ்வல்
இப்போது, ஜெர்மனியில் உள்ளார். வழக்கிற்கு பயந்து தப்பி சென்றதாக,
காங்கிரசார் குற்றம் சாட்டுகின்றனர். 'மத்திய அரசு உதவியுடன், பிரஜ்வல்
ஜெர்மன் சென்றார்' என்று, முதல்வர் சித்தராமையாவும் கூறி உள்ளார். 'ஆபாச
வீடியோ வழக்கில் சிக்கியுள்ள, எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணா பாஸ்போர்ட்டை
முடக்க வேண்டும்' என்று, பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்வர் சித்தராமையா
கடிதம் எழுதி உள்ளார். 'சர்வதேச போலீசார் உதவியுடன், ஜெர்மனியில் இருந்து
பிரஜ்வலை, இந்தியா அழைத்து வர வேண்டும்' என்றும் கோரிக்கை வைத்து உள்ளார்.
அதாவது, பாலியல் குற்ற வழக்கில் தொடர்புடைய, தேவகவுடாவின் பேரன்
பிரஜ்வலை, பிரதமர் மோடி, கையை பிடித்து அழைத்து சென்று, ஜெர்மென் செல்லும்
விமானத்தில் ஏற்றி, அமர வைத்து வழியனுப்பி வைத்ததாக, ஒரு புது கதையை,
காங்., அரங்கேற்றி உள்ளது.திரும்பிப் பார்ப்போம்...கடந்த,
1984, டிசம்பர் 2ம் தேதி இரவு, ம.பி., மாநிலம், போபாலில் உள்ள யூனியன்
கார்பைடு இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் பூச்சிக்கொல்லி ஆலையில் ஏற்பட்ட
வாயு கசிவு, கிட்டத்தட்ட 4,000 பேரின் மரணத்திற்கு வழிவகுத்தது;
லட்சக்கணக்கான மக்களின் ஆரோக்கியத்தை மோசமாக பாதித்தது; பேரழிவின் பின்
விளைவுகள் இன்றுவரை தொடர்கின்றன.அந்த யூனியன் கார்பைடு கம்பெனியின் தலைவர் ஆண்டர்சனை, விமானமேற்றி தப்பிக்க விட்ட அரசியல் கட்சி, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி.இன்றைக்கு,
புளுகுவது ஒன்றையே, முழு மூச்சாக கொண்டு செயல்பட்டுக் கொண்டிருக்கும்,
அந்த காங்கிரஸ் கட்சி, கொஞ்சம் கூட கூசாமல், வெட்கமோ, வேதனையோ படாமல்,
பாலியல் குற்றம் சாட்டப்பட்டுள்ள தேவகவுடாவின் பேரன் பிரஜ்வலை, மத்திய
அரசும், பிரதமர் மோடியும் ஜெர்மனிக்கு தப்பிக்க விட்டதாக புளுக ஆரம்பித்து
இருக்கிறது.அந்த பாலியல் குற்றம் சாட்டப்பட்ட, தேவகவுடாவின் பேரன்
பிரஜ்வல், பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து, ஜெர்மனிக்கு, விமானம் ஏறி
சென்றாரா அல்லது புதுடில்லி விமான நிலையத்தில் இருந்து, ஜெர்மனி சென்றாரா?குற்றவாளியை
உள்ளூரிலேயே சுலபமாக கைது செய்ய கிடைத்த வாய்ப்பை, நழுவ விட்டு, மத்திய
அரசு மீதும், பிரதமர் மோடி மீதும், புழுதி வாரி துாற்றுவது நியாயம் தானா
மிஸ்டர் சித்தராமையா? தேர்தல் ஆணையம் செய்யாமல் இருப்பது ஏன்?
வே.பழனியப்பன், கோவையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில் கடிதம்: தேர்தல் ஆணையத்தின் சாப்ட்வேர் சிஸ்டத்தில் தான், வாக்காளர்களின் விபரங்கள் அனைத்தும் சேகரிக்கப்பட்டு வைக்கப்பட்டு உள்ளன. இந்த சிஸ்டத்தில் புதிதாக சேர்க்கவோ, மாற்றம் செய்யவோ அல்லது நீக்கம் செய்யவோ, குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே சிஸ்டம் உரிமை கொடுக்கப்பட்டிருக்கும். அவர்களால் மட்டுமே இந்த செயல்களை மேற்கொள்ள முடியும்.ஒவ்வொரு முறையும் மேற்கண்ட செயல்களை செய்யும்போது, யார் செய்வது, என்ன செய்கிறார் என்ற விபரங்கள் சிஸ்டத்தில் பதிவாகி விடும். இந்த விபரங்களை ரிப்போர்ட் முறையில் பதிவிறக்கம் செய்ய முடியும்.தற்போது கோவையில் நிகழும் குழப்பத்திற்கு தேவையான விபரங்களை கண்டறிய, சிஸ்டத்தில் இருந்து கீழ் கண்ட ரிப்போர்ட்டை பதிவிறக்கம் செய்யலாமே?கடந்த ஓர் ஆண்டிற்குள் கோவையின் குறிப்பிட்ட பகுதியில் இருந்து எத்தனை வாக்காளர்களின் விபரங்கள் நீக்கப்பட்டுள்ளன, நீக்கபட்டதற்கான காரணம் என்ன, எந்த சிஸ்டம் பயனாளர் நீக்கினார், எப்போது நீக்கப்பட்டது, விபரங்கள் தனித்தனியாக நீக்கப்பட்டனவா அல்லது ஏதாவது புரோகிராம் உபயோகித்து மொத்தமாக நீக்கப்பட்டனவா என, அனைத்து விபரங்களும் கிடைத்து விடும்.மேற்கண்ட விபரங்கள் அனைத்தையும், ஒரு ரிப்போர்ட் மூலம் பதிவிறக்கம் செய்தால், இந்த குழப்பத்திற்கு விடை கிடைத்தது விடும். தேர்தல் ஆணையம் இதை செய்யாமல் இருப்பது ஏன்? ஆச்சரியமில்லை ராகுல்!
என். வைகை வளவன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ஹிந்து மன்னர்களையும், சக்கரவர்த்திகளையும், 'இரக்கமற்றவர்கள், ஏழைகளின் சொத்துக்களை பறித்துக் கொண்ட பாவிகள்' என்று கடுமையாக விமர்சனம் செய்த ராகுலுக்கு, பிரதமர் மோடி தக்க பதிலடி கொடுத்துள்ளார்.ராகுல், முகலாய பேரரசர்களான பாபர், அக்பர், அவுரங்கசீப் போன்றவர்கள் செய்த அட்டூழியங்கள் பற்றி, மறந்தும் ஒரு வார்த்தை பேச மாட்டார். தன் அருமை மகன் சலீம், நாட்டியக்காரியான அனார்கலியைக் காதலிப்பதை தெரிந்தவுடன், அந்த அப்பாவி மங்கையை, உயிரோடு சமாதி கட்டியவர் அக்பர்.வாள் முனையில், அப்பாவி ஹிந்துக்களை, முஸ்லிம்களாக மதம் மாறச் செய்த கொடுங்கோலன் அவுரங்கசீப்.குஜராத்தில் ஹிந்துக்களின் சோமநாதர் கோவில் மீது பதினாறு முறை படை எடுத்துச் சென்று, அந்தக் கோவிலிலிருந்த விலை உயர்ந்த ஆபரணங்களைக் கொள்ளை அடித்தவன், கஜினி முகம்மது என்ற கொள்ளைக்காரன். மாலிக்காபூர் என்ற முஸ்லிம் படைத் தளபதி, தெற்கே படையெடுத்து, அங்கிருந்த கோவில் சிலைகளை எல்லாம் உடைத்தான்.இவ்வளவு அட்டூழியங்கள் செய்த முஸ்லிம் மன்னர்களின் கொடிய செயல்களை, பிரதமர் மோடி அடுக்கடுக்காக விளக்கி இருக்கிறார்.ராகுலுக்கு, ஹிந்து மன்னனான சத்ரபதி சிவாஜியைப் பாராட்ட மனம் ஒப்பாது. டில்லியில் ஆட்சி செய்த கடைசி ஹிந்து மன்னனான ப்ருதவிராஜின் அரிய சாதனைகள் பற்றி பேசப் பிடிக்காது.ஹிந்துக்களின் சாஸ்திர சம்பிரதாயங்களில் நம்பிக்கை இல்லாத பரம நாத்திகரான நேருவின் பேரனான ராகுலுக்கு, ஹிந்து மன்னர்களின் அருமை பெருமை தெரியாமல் போனதில், ஆச்சரியம் என்ன இருக்கிறது!