உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இது உங்கள் இடம் / மனசாட்சிப்படி ஓட்டு போடுவோம்!

மனசாட்சிப்படி ஓட்டு போடுவோம்!

சு.ஸ்ரீனிவாசன், கோவையில் இருந்து எழுதுகிறார்:

தற்போதைய ஊழலில் நம் நாட்டில் எப்போது தேர்தல்கள் வந்தாலும், வாக்காளர்களுக்கு பல்வேறு விதங்களில் லஞ்சம் கொடுத்து அவர்களது ஓட்டுகளை பெறும் போக்கு தான் நடைமுறை என்றாகி விட்டது.லஞ்சம் கொடுப்பது, சட்டப்பூர்வமாகி விட்டதோ என்றளவு, அது சகஜமாகி விட்டது.அரசு தன் இலவசமான அன்பளிப்புகள் வாயிலாகவும், கவர்ச்சிகரமான சலுகைகள் வாயிலாகவும் ஆளுங்கட்சி என்ற வகையில் சட்டப்பூர்வமாகவும், லஞ்சத்தை கொடுக்கையில், எதிர்க்கட்சியினரும், ஆளுங்கட்சியினரும் போட்டி போட்டு, தம் மாயாவி வழிகள் வாயிலாக சட்டத்துக்கு புறம்பாக லஞ்சம் கொடுக்கின்றனர். யார் அதிகமாக லஞ்சம் கொடுக்கின்றனரோ, அவர்களுக்கு வாக்காளர்கள் ஓட்டு போட்டு, வெற்றி பெற செய்து விடுகின்றனர்.இவ்வாறு லஞ்சம் கொடுத்து ஆட்சிக்கு வருபவர்களிடம் நாம் எந்த விதமான நேர்மையை அல்லது நியாயத்தை எதிர்பார்க்க இயலும்? வாக்காளர்கள் சிந்திக்க வேண்டும். ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் தேர்தலில், லஞ்சத்துக்காக ஓட்டளித்து விட்டு அடுத்து வரும் ஐந்து ஆண்டுகளும் துன்பச்சூழலில் ஏன் உழல வேண்டும்? இப்படியே இது தொடர்ந்தால், நம் நாட்டின் எதிர்காலம் மிகவும் கேவலமான நிலையை எட்டிவிடும் என்பது நிச்சயம். ஆகவே யார் லஞ்சம் கொடுத்தாலும் அதை வாங்கிக் கொண்டு, வாக்காளப் பெருமக்கள் தங்களின் மனசாட்சி சொல்லும் நல்ல வேட்பாளர்களுக்கே வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும். அதுவே நல்லாட்சிக்கு வழி வகுக்கும். வேட்பாளர்கள் தரும் லஞ்சத்தை வாங்க மறுத்தால், பலவீனப்பட்ட வாக்காளர்கள் விரும்பத்தகாத விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும். ஆகையால், லஞ்சத்தை வாங்கிக் கொண்டு, அவரவர் தத்தம் இஷ்டப்படியான வேட்பாளர்களுக்கு வாக்களித்தால் தான், நம் நாடு உருப்படும். -----

படிக்கட்டு பயணத்தை தடுக்கவே முடியாதா ?

ஏ.வி.ராமநாதன், சென்னை யில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சென்னையை அடுத்த மதுராந்தகத்தில், பஸ் படிக்கட்டுகளில் பயணித்த நான்கு மாணவர்கள், கன்டெய்னர் லாரி மோதி இறந்த சம்பவத்தை, பழைய சம்பவம் என ஒதுக்கி விட முடியாது.இது போன்ற விபத்துக்களை தடுக்க முடியாதா என்ற ஆதங்கத்துடன்,வேதனையுடன் சில கேள்விகளை இங்கு உங்கள் முன் வைக்கிறேன்: பள்ளிகள், கல்லுாரிகள் மற்றும் அலுவலகங்கள் துவங்கும் நேரத்திலும், முடியும் நேரத்திலும், அவற்றின் வழியாகச் செல்லும் தடங்களில், கூடுதலான பேருந்துகள் இயக்குவது, அப்படியென்ன கடினமான காரியமா? வேண்டுமானால் தேவையான அளவுக்கு, தனியார் பேருந்துகளுக்கும் உரிமம் கொடுத்து அந்தத் தடங்களில், 'பீக் ஹவர்'களில் அவற்றையும் இயங்கச் செய்யலாமே! நெரிசல் மிகுந்த ஊர்களில் உள்ள பள்ளிகள், கல்லுாரிகள் மற்றும் அலுவலகங்களை, 'ஷிப்ட்' முறையில் இயக்கியோ, அவற்றில் பணி துவங்கும், முடியும் நேரத்தை முன்னே, பின்னே சற்று மாற்றி வைத்தோ, பேருந்து நிறுத்தங்களில் நெரிசலைக் குறைத்து, இளைஞர்களின் படிக்கட்டுப் பயணத்தைத் தவிர்க்க முடியாதா?போக்குவரத்துக் காவல் துறையினர், தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி, மாணவர்கள் பேருந்து படிக்கட்டில் தொங்கிப் பயணிப்பதை முற்றிலும் தடுக்கவே முடியாதா? தவறு செய்யும் மாணவர்களுக்கு, அவர்களது பெற்றோர், ஆசிரியர்கள் உதவியோடு தக்க ஆலோசனை கொடுத்தும், சின்னச் சின்ன தண்டனைகள் கொடுத்தும், அவர்களைத் திருத்தவே முடியாதா? பேருந்தில் ஒரே ஒரு மாணவன், உள்ளே வராமல் அதன் படிக்கட்டில் நின்றால் கூட, 'பேருந்தை இயக்க மாட்டோம்' என ஓட்டுநனரும், நடத்துனரும் கண்டிப்பாகச் சொல்லி, ஏன் பேருந்து இயக்கத்தை, அந்த சமயங்களில் நிறுத்தக் கூடாது?நாள்தோறும் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் அபாயகரமாக பயணிப்பது, பேருந்து படிக்கட்டுகளில் மட்டுமல்ல, மாநகரங்களில் புறநகர் ரயில்களின் நுழை வாசலிலும், அதன் படிகளிலும்தான்!எனவே மேலே எழுப்பிய கேள்விகள், ரயில்வே துறைக்கும் பொருந்துமானால், அவர்களும் இக்கேள்விகளுக்கான விடைகளைத் தேட வேண்டும்!------------

மீனவர் ஓட்டு யாருக்கு?

என்.வைகைவளவன், மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'தி.மு.க., முன்னாள் தலைவர் கருணாநிதி காட்டிய கடும் எதிர்ப்பையும் மீறி தான், இந்திரா, கச்சத்தீவை இலங்கைக்குக் கொடுத்தார்' என, சில மாதங்களுக்கு முன் சொன்னார் முதல்வர் ஸ்டாலின்.இந்திராவுக்குப் பின், மத்தியில் ஆட்சிக்கு வந்த ராஜிவ், கச்சத்தீவை மீட்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தி.மு.க.,வும் அதற்கு அழுத்தம் கொடுக்கவில்லை.சமீபத்தில், இந்திய எல்லை தாண்டி மீன் பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் 277 பேருக்கு, இந்திய கடற்படை அபராதம் விதித்தது. இதற்கு தமிழக முதல்வர் என்ன சமாதானம் சொல்வார்?கச்சத்தீவை இலங்கையிடம் தாரை வார்த்துக் கொடுத்த விஷயத்தில் தன் தந்தையை நல்லவராகக் காட்ட, ஸ்டாலின் கடும் முயற்சி மேற்கொள்கிறார். அதை எண்ணி, வருத்தம் அடைவதைத் தவிர வேறு வழியில்லை.ஆனால், கைதாகும் நம் மீனவர்களை, இலங்கையுடன் பேசி, அவர்களுக்கு அதிக சேதம் ஆகாமல்,நாட்டிற்குத் திருப்பி அழைக்கும் பணியை பிரதமர் மோடி செய்து வருகிறார்.வந்தாச்சு தேர்தல்... மீனவர்கள் யாருக்கு ஓட்டு போடப் போகின்றனர் என்று பார்ப்போம்!------

நாம் எப்படி நலமாக இருப்பது?

ரா.குமார், அம்மாபாளையம், திருப்பூர் மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சமீப காலமாக, லஞ்சம் ஒழிப்பு துறையால், அரசு அலுவலர்கள் கைது செய்யப்படுவதை காண்கிறோம்.நம்மை ஆண்ட இரண்டு திராவிட கட்சிகளும், லஞ்சத்தை ஒழிக்க முற்படவே இல்லை; மாறாக, அதில் திளைத்து ஊறுகின்றன.'நீங்கள் நலமா, எல்லோ ருக்கும் எல்லாம், உங்களை தேடி...' என்றெல்லாம் சொல்கின்றனர். ஆனால், ஒரு கல் கூட நகரவில்லை.நான் சமீபத்தில், ஒரு சான்றிதழ் வாங்க, அரசு அலுவலகம் சென்று இருந்தேன். அதற்கான விண்ணப்பத்தை, 'ஆன்லைனில்' பதிவிறக்கம் செய்து, அதற்குரிய கட்டணத்துடன், சம்பந்தப்பட்ட அலுவலகம் சென்றிருந்தேன்.அங்கு, இப்பணியைச் செய்ய, என்னிடம் பணம் கேட்டனர். கொடுக்கவில்லை எனில், சான்றிதழ் கிடைக்காது என்றனர்.நேர விரயத்தைத் தவிர்க்க நினைப்பவர்கள், லஞ்சம் கொடுத்து சான்றிதழ் பெற்று சென்று விடுகின்றனர். ஆனால், லஞ்சம் கொடுக்கக் கூடாது என்று நினைப்பவர்கள், அலைக்கழிக்கப்படுகின்றனர்.இப்படி இருந்தால், நாம் எப்படி நலமாக இருப்பது?


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

veeramani
மார் 28, 2024 09:46

to aovid accidents on step transportation Immeditly change the working hours of schools, colleges School timingsMorning am to evening pm College timingsam to pm Regular office timing//am to pm By this running of school buses, college buses in road is minimal and traffic density is reduced/


D.Ambujavalli
மார் 28, 2024 04:05

The reason given by those get bribe is ' starting from CM everybody 'earns' from contracts, appointment/ transfers and in every dept then why expect us to,be 'clean'? If they get in crores,we get in thousands'


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை