எஸ்.ஆர்.மணியன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கிட்டத்தட்ட 28 கட்சிகள், பிரதமர் மோடியை எதிர்த்து கிச்சடி கூட்டணி அமைந்திருக்கிறதே, எதற்காக தெரியுமா?நம் நாட்டையோ, நாட்டு மக்களையோ முன்னேற்றவோ, எதிரி நாடுகளிடமிருந்து நம்மை காப்பாற்றவோ, வேலை வாய்ப்பை உருவாக்கிக் கொடுக்கவோ, விலைவாசியை குறைப்பதற்காகவோ அல்ல... வழக்கு மேல் வழக்கில் சிக்கித் தவிக்கும் தாங்கள் ஒவ்வொருவரையும் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற தலையாய, 'கொள்கை'க்காக தான்!சமீபத்தில் துடைப்பக்கட்டை கட்சி... அதாங்க, ஆம் ஆத்மி கட்சி; அதன் சின்னம் துடைப்பக்கட்டை தானே... அந்தக் கட்சியின் தலைவர், மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் சிறை சென்று, ஜாமினில் வெளிவந்த உடனே பேசிய முதல் பேச்சு இது.இந்த, 28 கட்சிகளின் தலைவர்கள் தலையில் கத்தி தொங்கிக் கொண்டிருக்கிறது, அதாவது, வழக்கு எனும் கத்தி; அதிலிருந்து தம்மைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்றால், எதிரியான மோடியை வீட்டுக்கு அனுப்பினால் தான் முடியும் என்பதை பட்டவர்த்தனமாக பேசியுள்ளார்.'ஒவ்வொருவரையும் காப்பாற்றிக் கொள்ளவாவது ஒன்றுபட வேண்டும்; இதை நீங்கள் எல்லாரிடமும் எடுத்துச் சொல்லுங்கள்' என, பொதுவெளியில் பேட்டி அளித்துள்ளார்.ஆக, 28 கிரகங்களை ஒன்றாக திரட்டி கிச்சடி கிளற, துடைப்பம் தயாராகி விட்டது. என்று தான் தீருமோ நாய்த்தொல்லை?
கு.அருண்,
கடலுாரில்இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தெரு நாய்களால் பாதிப்பு
ஏற்படும் சிக்கல் அதிகரித்து வருகிறது. உயிரிழப்பு, ஊனம் ஏற்படுவது, பல
மாதங்கள் காயத்தால் அவதிப்படுவது அதிகரித்து உள்ளது.நம் அரசியல்
அமைப்புச் சட்டத்தில் பிரிவு 51 ஏ(ஜி)யின் படி, வனவிலங்குகளைப்
பாதுகாப்பதும், அனைத்து உயிரினங்கள் மீதும் கருணை காட்டுவதும் ஒவ்வொரு
குடிமகனுக்கும் அடிப்படை கடமை. இதனால் தான் கொடிய பாம்புகள் கூட, வீடுகளில்
பிடிபட்டால் அவற்றை வனப்பகுதியில் கொண்டு விட மட்டும் உரிமை உண்டே தவிர,
கொல்ல முடியாது.அது போல், கண்மூடித் திறப்பதற்குள் நம் மீது பாய்ந்து கடித்துக் குதறும் தெரு நாய்களுக்கு, கருத்தடை செய்யலாமே தவிர, கொல்ல முடியாது.தெரு
நாய்க்கடி ஒருபுறம் என்றால், வளர்ப்பு நாய்களால் கடிபடும் அபாயமும்
அதிகரித்து வருகிறது. வளர்ப்பு நாய் கடித்தால், அதற்கு காரணமாக உள்ள அதன்
உரிமையாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டாலும், அவர்களுக்கு
அதிகபட்சமாக ஆறு மாதங்கள் தான் சிறை தண்டனை என்று சட்டம் உள்ளது. அபராத
தொகையும், சில ஆயிரங்கள் மட்டுமே.உ.பி., மாநிலத்தில் மட்டும், 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. சமீபத்தில்,
சென்னை நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள மாநகராட்சி பூங்காவில்,
காவலாளியாக பணிபுரியும் ரகுவின் பெண் குழந்தை சுரக் ஷா வையும், ரகுவின்
மனைவி சோனியாவையும், புகழேந்தி என்பவரின் வளர்ப்பு நாய், 'ராட்வைலர்'
கடித்துக் குதறியதில், சுரக் ஷாவுக்கு படுகாயம் ஏற்பட்டு விட்டது.உரிமையாளர்
மீது, இந்திய தண்டனைச் சட்டம் 289 மற்றும் 336 கீழ் வழக்குகள்
பதியப்பட்டாலும், அவர் சிறைக்கு அனுப்பப்படவில்லை. காவல் நிலைய ஜாமினில்
வெளியே வந்து விட்டார்.தமிழகம் முழுதும் வீடுகளில் வளர்க்கப்படும்
நாய்களுக்கு, முறையாக தடுப்பூசி போடப்படுகிறதா, கருத்தடை செய்யப்படுகிறதா
என்று உள்ளாட்சித் துறை அதிகாரிகளால், முறையாக விசாரணை செய்யப்பட்டு,
அவற்றை வளர்க்க உரிமம் வைத்துக் கொள்ளும் நடைமுறையை கடுமையாக்க வேண்டும். மற்றவர்களுக்கு தீங்கு ஏற்படாத வகையில், பாதுகாப்பு நடவடிக்கைகளை உரிமையாளர்கள் மேற்கொள்கின்றனர் என்பதை உறுதி செய்ய வேண்டும்.-- யாரோ சம்பாதிக்க நம் உயிர் பணயமா?
அ.அப்பர்சுந்தரம்,
மயிலாடு துறையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: மும்பையில்
ஏற்பட்ட புழுதிப் புயல், மிகப் பெரிய சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. வழக்கமாக
அரபு நாடுகளின் பாலைவனத்தில் ஏற்படும் புழுதிப் புயல், தற்பொழுது நம்
நாட்டு தலைநகர் டில்லியில் கடந்த வாரமும், அடுத்து மும்பையிலும் வீசி
அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.மும்பையில், மிகவும் பலமாக வீசியதால், அனுமதி இன்றி வைக்கப்பட்ட மிகப் பெரிய பேனர் விழுந்து, 14 பேரை பலி வாங்கிவிட்டது.இயற்கையின் கடும் சீற்றத்தை, யாரும் எதிர்கொள்ள முடியாது என்பதற்கு இந்த புயலும் ஒரு சான்று. மழையாக,
வெள்ளமாக, புயலாக, பெருங்காற்றாக, அவ்வப்பொழுது இயற்கை, தன் பலத்தை
நிரூபித்தபடியே இருக்கிறது. தமிழகமும் அதற்கு விதிவிலக்கல்ல.திடீர்
புயலால் பல்வேறு இடங்களில் ஆயிரக்கணக்கான வாழை மரங்கள், விவசாயத்
தோப்புகள், அவ்வப்பொழுது அழிகின்றன. நீரில்லாமல் வறட்சியும், வெப்பமும்,
கோடையும் தாக்கி வனவளமும் அழிகிறது. இப்படிப்பட்ட இயற்கை சூழல்களை தாக்குப் பிடிக்கும் வகையில், பேரிடர் மேலாண்மை குழுவின் பணிகள், மேலும் அதிகப்படுத்தப்பட வேண்டும். மும்பையில்,
வானுயர விளம்பர பதாகைகள் அமைக்கப்பட்டதால் தான், புழுதி புயலில் தாக்குப்
பிடிக்க முடியாமல் சாய்ந்து, அடியில் நின்றவர்கள் சிக்கி கண் இமைக்கும்
நேரத்தில் பலியாகி விட்டனர். தமிழ்நாட்டிலும் கூட, கடந்த
காலங்களில் பல்வேறு இடங்களில் அரசியல் கட்சிகளின் விளம்பர பேனர்கள்
விழுந்து உயிர் பலியும், விபத்துகளும், காயங்களும் ஏற்பட்டதை, நாம் மறந்து
விடக் கூடாது.உயர் நீதிமன்றமும் பல்வேறு விதிமுறைகளை அறிவித்தது; ஆனால் அதை நாம், சரியான முறையில் பின்பற்றுவது இல்லை.யாரோ சம்பாதிப்பதற்காக, அப்பாவி மக்களின் உயிர் பலியாவதை, யாரும் அனுமதிக்கக் கூடாது. கழுத்தை
நெறிக்கும் மின் மற்றும் கேபிள் ஒயர்கள், விளம்பர பதாகைகள், உயிரைப்
பறிக்கும் டிரெய்னேஜ்கள், பள்ளங்கள், குண்டும் குழியுமான சாலைகள் ஆகியவற்றை
நாம் அதிகம் கண்டுகொள்வதுஇல்லை. இவை ஆபத்தானவை என கண்ணுக்கும்,
அறிவுக்கும் சட்டென புலப்படாத இந்த அபாயங்களை, அரசு கவனித்து ஆவன
செய்யாவிட்டால், இயற்கைச் சீற்றங்களுக்கு நாம் பலியாவதை தவிர வேறு
வழியில்லை.