ரா.கணேசன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' -கடிதம்: 'பா.ஜ.,வைச் சேர்ந்த நிர்மலா சீதாராமனோ, ஜெய்சங்கரோ, தமிழகத்தில் போட்டியிட்டு எம்.பி.,யாக முடியுமா?' என, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., முனுசாமி சவால் விட்டிருக்கிறார்; ஏதோ இவரால் அமோக வெற்றி பெற்று, அடுத்த எம்.பி.,யாகி விட முடியும் என்ற நினைப்பில்! இருப்பினும் இவர் கருத்து நியாயமானதே. எப்படியென்று பார்ப்போம்...பன்னீர்செல்வம் தர்மயுத்தம் துவங்கியபோது, முதலில் அவர் அணிக்கு வந்தவர் மைத்ரேயன்; பின், இந்த முனுசாமி. ஆனால் இணைப்புக்கு பின், பன்னீர்செல்வம் தரப்புக்கு வந்த துணைப் பொதுச் செயலர் பதவியையும், ஒரு ராஜ்யசபா எம்.பி., பதவியையும் தனதாக்கிக் கொண்டார்.ஆசை அப்போதும் அடங்கவில்லை. 'சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., வென்று விடும்; நாம் அமைச்சராகி விடலாம்' என்ற நப்பாசையில், எம்.பி., பதவியை ராஜினாமா செய்து, சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வென்றார்.ஆனால், தி.மு.க., அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது; இவரால் காலியான எம்.பி., பதவியையும், தி.மு.க.,வுக்கு தாரை வார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டது.கட்சியில், பழனிசாமி கை ஓங்குவது தெரிந்தவுடன், அந்தப் பக்கம் சென்று, பன்னீர்செல்வத்தை கட்சியிலிருந்து நீக்கும் தீர்மானத்தை கொண்டு வந்தார் முனுசாமி. அ.தி.மு.க.,வில் இவர் இருந்தாலும், வன்னியர் என்ற பாச அடிப்படையில், தி.மு.க.,வின் துரைமுருகனிடம், தன் மகனுக்கு கனிம வள டெண்டரை பெற்றுத் தந்தார்.இப்போது சொல்லுங்கள்... இப்படிப்பட்ட திறமைகள் கொண்ட இவரைப் போன்ற அரசியல்வாதியா நிர்மலா சீதாராமன்? பத்து ஆண்டுகள் மத்திய அமைச்சரவையில் முக்கிய அமைச்சராக இருந்தும், தன் மகளுக்கு ஒரு டெண்டரையாவது பெற்றுக் கொடுத்திருப்பாராஅல்லது குறைந்த பட்சம் ஒரு ஐந்து கோடியாவது சொத்து சேர்த்திருப்பாரா? பின் அவர் எப்படி, முனுசாமிகள் நிறைந்த இங்கே நின்று ஜெயிக்க முடியும்?ஆனால், முனுசாமி இரண்டு விஷயங்களை தெளிவுபடுத்த வேண்டும்.வரும் லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணி, பா.ஜ., கூட்டணியைக் காட்டிலும் குறைவாக ஓட்டு பெற்றால், அவர் நிலைப்பாடு என்னவாக இருக்கும்? சட்டசபை தேர்தலில் பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணி ஏற்பட்டால், அவர் நிலைப்பாடு என்னவாக இருக்கும்?எங்கே நாம் நலமாக இருப்பது?
பி.ஜோசப், திருச்சியில் இருந்து
அனுப்பிய,'இ - மெயில்' கடிதம்: 'அரசு மருத்துவமனைகளுக்கு வரும்
அனைவருக்கும் உயர்தர சிகிச்சை தரப்படுகிறது. அதனால், சென்னை ராஜிவ்காந்தி
அரசு மருத்துவமனைக்கு தினசரி, 15,000 புறநோயாளிகள் வருகின்றனர்' என, பெருமை
பேசுகிறார், மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன். பெருமைப்பட வேண்டிய விஷயமா இது? வெட்கப்பட வேண்டிய விஷயம்!தலைகுனிந்து கவலைப்பட வேண்டிய விஷயம்; வேதனைப்பட வேண்டிய விஷயம்; வருத்தப்பட வேண்டிய விஷயம்!மக்களாட்சி
நடைபெறும் ஒரு ஜனநாயக நாட்டில், ஈ அடிக்க வேண்டிய இடங்கள் என்று சில
இடங்களும், ஈ மொய்க்க வேண்டிய இடங்கள் என்று சில இடங்களும் உண்டு.மருத்துவமனைகள், காவல் நிலையங்கள் மற்றும் நீதிமன்றங்கள் ஆகியவை, ஈ அடிக்க வேண்டிய இடங்கள்.பள்ளிக்கூடங்கள், பல்கலைக்கழகங்கள், சர்வகலா சாலைகள் ஆகியவை ஈ மொய்க்க வேண்டிய இடங்கள்.துரதிருஷ்டவசமாக இந்த ஆட்சியில், ஈ அடிக்க வேண்டிய இடங்களில் ஈ மொய்க்கின்றன; ஈ மொய்க்க வேண்டிய இடங்களில் ஈ அடிக்கின்றன.மக்கள் உடல் நலத்தோடு, ஆரோக்கியமாக இருந்தால் மருத்துவமனைகள் பக்கம் தலை வைத்து படுப்பரா?மக்கள்
ஆரோக்கிய குறைவாக இருப்பதற்கு காரணம், அரசின் நிர்வாகச் சீர்கேடு.
தங்களுடைய நிர்வாக சீர்கேட்டினால் தான், நாட்டு மக்கள் சுகாதாரம்
இல்லாமல், ஆரோக்கியம் இழந்து நோயாளிகளாக உருமாறி உலவிக் கொண்டிருக்கின்றனர்
என்ற அடிப்படையைக் கூட, இந்த ஆட்சியாளர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை.சமீபத்தில்,
உயர் பொறுப்பில் இருந்த ஒரு காவல்துறை அதிகாரிக்கு, பாலியல்
குற்றத்திற்காக, மூன்று ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இப்படி
இருந்தால், நாட்டு மக்களுக்கு எங்கிருந்து பாதுகாப்பு கிடைக்கும்?படிப்பதற்கு
மாணவர்கள் வராமல், ஆயிரக்கணக்கான பள்ளிக்கூடங்களுக்கு மூடுவிழா
நடத்தப்பட்டிருக்கிறது. மூடுவிழா நடத்தாமல் இயங்கி கொண்டிருக்கும்
பள்ளிகளில் பயிலும் மாணவ -- மாணவியரோ, ஒதுங்க ஒரு இடம் இல்லாமலும்,
குடிக்க ஒரு வாய் தண்ணீர் இல்லாமலும் தவித்துக் கொண்டிருக்கின்றனர். அப்பாவி
பொதுமக்கள் நீதிக்காக, நீதிமன்றங்களை நாடுவதை காட்டிலும், நாட்டை
நிர்வகிக்கும் ஆட்சியாளர்களே நீதிமன்றங்களை அணுகுவது தான் ஆச்சர்யமாக
உள்ளது. அப்படி நீதிமன்றங்களை நாடுவதோடு, அவ்வப்போது கண்டனங்களையும்,
அபராதங்களையும் வேறு வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கின்றனர்.இத்தகைய நிலையில், எங்கே நாம் நலமாக இருப்பது? வடைக்கு அடிப்படை உளுந்து; தெரியுமா சீமான்?
என். மல்லிகை மன்னன், மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'நாங்க ரூல்ஸ்படி நடந்துக்க மாட்டோம்; ஆனால், எங்களுக்கு வர வேண்டியது வரணும்' என்ற கோட்பாடு கொண்டால், தமிழகம் எப்படி உருப்படும்?அரிசியை வேக வைத்தால் தான் சோறு கிடைக்கும். 'அரிசியை வேக வைக்க வேண்டிய பணி என்னுடையது கிடையாது; அது தானாக சோறாக வேண்டும்' என்று நினைத்தால் நடக்கிற காரியமா?எல்லாவற்றிலும் ஒழுங்குமுறை இருந்தால் தான், எந்த காரியத்தையும் செம்மையாகச் செய்ய முடியும்.தேர்தலை நடத்துவதென்றால் அதற்கு ஒரு ஒழுங்குமுறை, விதி இருந்தால் தானே, சீராக, சரியாக நடக்கும்? அதற்கான விதிமுறைகளை செவ்வனே பின்பற்றுவதால், நம் நாடு இன்று உலகளவில் மிகச் சிறந்த ஜனநாயக நாடு என்ற பெயர் பெற்றிருக்கிறது.இப்படிப்பட்ட பெருமை வாய்ந்த நாட்டின் குடிமகன், தேர்தலில் போட்டியிட ஆசைப்படுகிறார் என்றால், அதற்குரிய அடிப்படை விதிமுறையை அவர் பின்பற்றினால் தானே, போட்டியிட முடியும்?தன் கட்சிக்கு விவசாய சின்னம் ஒதுக்க வேண்டும் என்ற விண்ணப்பத்தை தேர்தல் ஆணையத்திடம் கொடுக்காமலேயே, தனக்கு சின்னம் ஒதுக்கவில்லை என்று, சீமான் என்பவர் குற்றம் சாட்டுகிறார்.வாயால் வடை சுட்டால் மட்டும் போதாது; உளுந்தை சரியாக அரைத்து, தேவையான உப்பைப் போட்டு, சரியான பதத்தில் அரைத்து, பக்குவமாக வெங்காயம், மிளகாய் அரிந்து கலந்து, ஆரோக்கியமான எண்ணெயில் பொரித்து எடுப்பது தான், சிறந்த வடை. இவ்வளவு பக்குவம் கொண்ட ஒரு பதார்த்தத்துக்கு, அடிப்படையானது உளுந்து என்பது கூட தெரியாமல் இருக்கும் சீமானை என்னவென்று சொல்வது?