முனைவர் மீனாட்சி பட்டாபிராமன், மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கடந்த, 50 ஆண்டுகளுக்கும் மேலாக சேறும், சகதியும் மண்டிக் கிடக்கும் தமிழகத்தில் தாமரை எப்படியாவது மலர்ந்து விட வேண்டும் என்று குட்டிக்கரணம் போட்டுக் கொண்டிருக்கிறது; தலைகீழாக நின்னு தண்ணி குடிக்கிறது. ஆனால், அந்த சேற்றில் இத்தனை காலம் வேரூன்றி சுகம் கண்ட கருவேல மரங்களும், முட்செடிகளும், தாமரை மலர்ந்து விடக்கூடாது என்பதில் தீவிரமாக உள்ளன.ஆம்... லஞ்சம், ஊழல், வாரிசு அரசியல் நடத்தும் திராவிடக் கட்சிகளிடம் இருந்து தமிழகத்தை விடுவிக்க பா.ஜ., பல முயற்சிகளை செய்து வருகிறது. ஆயினும், திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி வைத்திருக்கும் கொள்கையில்லா பல கட்சிகள், தமிழகத்தில் தாமரை மலரக் கூடாது என்பதில் கவனமாக உள்ளன.ஆயினும், 'போதும்டா சாமி... இலவசங்களை காட்டி, எங்களை அடிமையாக்கி ஏழு தலைமுறைக்கு சொத்து சேர்த்திருக்கும் திராவிடக் கட்சிகளுக்கு விடை கொடுத்து, ஊழல் இல்லாத ஒரு நல்ல கட்சியை அரியாசனத்தில் அமர்த்துவோம்' என்று தமிழக மக்களில் பலரும் நினைக்க துவங்கி விட்டனர்.ஊழல் மலிந்த திராவிடக் கட்சிகளுக்கு நல்ல மாற்றாக பா.ஜ.,வை பார்க்கின்றனர். பிரதமர் மோடியின் திறமையான, நேர்மையான நிர்வாகம், மாநிலத் தலைவர் அண்ணாமலையின் தெளிவான சிந்தனை ஆகியவை, பா.ஜ., மீது தமிழக மக்களுக்கு ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தியிருப்பதை மறுக்க முடியாது.திராவிடக் கட்சிகளின் போலி வாக்குறுதி களையும், இட்டை வேடங்களையும் இனியும் நம்ப அவர்கள் தயாரில்லை. தங்கள் எல்லா தவறுகளையும், ஓட்டுக்கு பணம் என்ற மந்திரம் வாயிலாக சரிசெய்து விடலாம் என கனவு காணும் தி.மு.க., தங்களுக்கு என்று எந்த சிறப்பு அடையாளமும் இன்றி எம்.ஜி.ஆர்., - ஜெ.,யின் புகழ், இரட்டை இலை சின்னத்தை வைத்து சாதித்து விடலாம் என எண்ணும் அ.தி.மு.க., மாபெரும் தேசிய கட்சியாய் இருந்து கோஷ்டி சண்டைகளால் தேய்ந்து போன காங்கிரஸ் சில சீட்களுக்காக பொதுவுடைமை கொள்கையை அடகு வைத்துள்ள கம்யூனிஸ்ட்கள் ஒன்றிரண்டு சீட்களுக்காக, தி.மு.க., வாசலில் காத்து கிடக்கும் ம.தி.மு.க., - வி.சி.,க்கள் போன்ற குட்டி கட்சிகள்.இப்படி எல்லாவற்றையும் பார்த்து, தமிழக மக்களுக்கு அலுத்து போய் விட்டது. எனவே, வரும் லோக்சபா தேர்தலில் தமிழக வாக்காளர்கள், திராவிடக் கட்சிகள் எனும் சேற்றில், செந்தாமரையை மலர வைப்பர் என்பதில் சந்தேகமில்லை! விஜய் கட்சியினர் ஓட்டு யாருக்கு?
ஏ.அப்துல்
மாலிக், வேல்வார்கோட்டை, திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ -
மெயில்' கடிதம்: தமிழக வெற்றிக் கழகத்தை துவங்கியதும், நடிகர் விஜய்
வெளியிட்ட அறிக்கையில், 'வரும் லோக்சபா தேர்தலில், இந்த கட்சி
போட்டியிடாது. 2026 சட்டசபை தேர்தல் தான் எங்கள் இலக்கு' என, அதிரடியாக
அறிவித்தார்.தற்போது, இக்கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கை முடுக்கி
விடப்பட்டுள்ளது. இந்த உறுப்பினர்களுக்கு சட்டசபை தேர்தல் தான் குறிக்கோள்
என்றால், வரும் லோக்சபா தேர்தலில் யாருக்கு ஓட்டு போடுவர்? கஷ்டப்பட்டு
உறுப்பினர்களை சேர்த்து, யாருக்கும் ஓட்டு போடாமல் இருந்து, ஜனநாயக கடமையை
தவறவிட முடியுமா?மேலும், பண பலமும், படைபலமும் உடைய பெரிய பெரிய
கட்சிகள், தங்கள் கட்சிக்கு ஆதரவாக, த.வெ.க., உறுப்பினர்களை இழுத்து விட
மாட்டார்களா? எனவே, விஜய் கட்சி லோக்சபா தேர்தலில் போட்டியிட
வேண்டும் அல்லது தேர்தல் முடிந்த பின், அவரது கட்சியின் ஆக்கப்பூர்வமான
நடவடிக்கைகளை துவங்க வேண்டும்; அதுவரை எந்த செயல்பாடுகளையும் செய்யாமல்
மவுனமாக இருக்க வேண்டும்.இல்லையேல், லோக்சபா தேர்தலில்
போட்டியிடும் ஏதாவது ஒரு கட்சிக்குஆதரவு அளிக்க வேண்டும். எதையும்
செய்யாமல், மவுனமாக இருந்தால், லோக்சபா தேர்தலின்போதே, இவரது கட்சி
உறுப்பினர்களை மற்ற கட்சிகள் கொத்தி கொண்டு போய் விடும் என்பது மட்டும்
உறுதி. யோசிப்பாரா விஜய்? ஜெ., மரணத்துக்கு காரணமானோருக்கு தண்டனை!
கோ.தி.ஸ்ரீராம்
விஷ்ணு, சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழக
மக்களால், 'அம்மா' என்று பாசமுடன் அழைக்கப்பட்டவர், முன்னாள் முதல்வர்
ஜெயலலிதா. தன் திறமையான, துணிச்சலான நடவடிக்கைகளால் பெண்களுக்கு
முன்னுதாரணமாக திகழ்ந்தவர்.அவரது ஆட்சி காலத்தில், பல நல்ல
திட்டங்களை கொண்டு வந்து, மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். நல்ல
ஆரோக்கியமாக இருந்த அவர், திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டு, மரணமடைந்தார்.
ஆரோக்கியமாக இருந்த அவர் எப்படி இறந்தார் என்பது, இன்று வரை புரியாத
புதிராகவே உள்ளது.அவரது இறப்பு பற்றி அறிய அமைத்த, ஆறுமுக சாமி
கமிஷன் கூட சரியாக எதையும் கண்டுபிடிக்க முடியாமல், ஒரு அறிக்கையை
சமர்ப்பித்து விட்டு, 'கடமை'யை முடித்து கொண்டது. விசாரணை கமிஷன்
அமைக்க சொன்ன பன்னீர்செல்வம் கூட, துணை முதல்வர் பதவி கிடைத்ததும், தன்னை
பரதன் என்று பாராட்டிய ஜெயலலிதாவை மறந்து, கமிஷன் முன் ஆஜராகாமல் டிமிக்கி
கொடுத்தார்.கமிஷன் கிடுக்கிப்பிடி போடவே, ஒருவழியாக ஆஜராகி, கேட்ட
கேள்விகளுக்கு எல்லாம், 'தெரியாது' என்ற பதிலை கூறி, 'யாரையோ' காப்பாற்றி,
தன்னை அறிமுகம் செய்த ஜெ.,வுக்கு துரோகம் செய்து விட்டார்.ஜெ.,
மரணத்திற்கு யார் காரணம் என்று தமிழக மக்கள் நினைத்தனரோ, அவர்கள் இன்று
சர்வ சுதந்திரமாக, அரசியல் நடவடிக்கைகளில் பயமில்லாமல் ஈடுபடுகின்றனர்.ஜெயலலிதா,
ஒரு பெரும்பான்மை சமுதாயத்தை சேர்ந்தவராக இருந்திருந்தால், பல்லாயிரம்
பேர் குரல் கொடுத்து இருப்பர். நீதிபதி ஆறுமுகசாமி கூட அறிக்கையை தாக்கல்
செய்த பின், 'ஜெ.,விற்கு உறவினர் யாராவது இருந்திருந்தால், அவரை காப்பாற்றி
இருப்பர்' என்று கூறி இருந்தார். அதுதான் உண்மை.அவரிடம் இருந்த
வசதிக்கு உலகின் எந்த மூலைக்கும் சென்று ராஜ வைத்தியம் செய்து காப்பாற்றி
இருக்கலாம். ஆனால், யாரும் அதற்காக முயற்சி செய்யவில்லை; சொல்ல போனால்,
தடுத்து விட்டனர் என்றே சொல்லலாம்.தி.மு.க., போன்ற கட்சி யினர்,
'வெறும் 3 சதவீதமே உள்ள ஜெயலலிதா சமுதாயத்தை சேர்ந்தவர்கள் தான், உயர்
பதவிகளில் இருந்தபடி இந்தியாவை ஆட்சி செய்கின்றனர்' என்று கூறி
வருகின்றனர்.அது உண்மையாக இருந்தால், ஜெ.,வின் சமூகத்தினராவது
இறப்புக்கான காரணம் யார் என்பதை கண்டுபிடித்து, அந்த கயவர்களுக்கு தண்டனை
வாங்கித் தர வேண்டும். அப்போது தான், கோடிக் கணக்கான மக்களால்,
அம்மா என்று அழைக்கப்பட்ட ஜெ.,யின் ஆன்மா சாந்தி அடைவதுடன், உண்மையான
அ.தி.மு.க., தொண்டர்களுக்கும் நிம்மதியை தரும்.