உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இது உங்கள் இடம் / அதிக உயரங்களுக்கு இந்தியா செல்லும்!

அதிக உயரங்களுக்கு இந்தியா செல்லும்!

ஆர்.பாலமுருகன், மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவரும், மஹாராஷ்டிரா துணை முதல்வருமான அஜித் பவார், சமீபத்தில் அளித்த பேட்டியில், 'மோடிக்கு மாற்று இல்லை' என்ற உண்மையை உரக்கச் சொல்லி இருக்கிறார். இது, காங்கிரசார் காதில் விழுந்திருக்கும்.மோடி என்ற ஆளுமைக்கு இணையான தலைவர், இந்தியாவில் இன்று இல்லை. நிதீஷ் குமார், தன்னை பிரதமர் வேட்பாளராக, 'இண்டியா' கூட்டணி முன்மொழியும் என எதிர்பார்த்தது நியாயம் தான். ஆனால், பிரதமராகும் தகுதிகள் அவரிடம் எந்தளவு இருக்கின்றன?பிரதமர் மோடி பதவி வகித்த ஒன்பதரை ஆண்டுகளில், நாட்டின் வளர்ச்சி மிகவும் அசுரத்தனமானது. சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளை கண்டு பம்மியிருந்தோம். இன்று நம் வளர்ச்சியை கண்டு அவர்கள் பம்மி, பதுங்கியதை கண்கூடாக காண்கிறோம். அதற்கு காரணமான மோடி, வெளிநாட்டிலும், உள்நாட்டிலும் நம் மதிப்பை உயர்த்தியவர்.இது, காங்கிரசாருக்கும் நன்றாக தெரிந்தாலும், ஏதாவது ஒரு குற்றம், குறை சொல்லி, பா.ஜ., ஆட்சியை வீழ்த்த, இவர்கள் எடுக்கும் முயற்சிகள் கடலில் கரைத்த பெருங்காயம் போல தான் ஆகும்.மோடி, சீன பெருஞ்சுவர் போல கம்பீரமாக காட்சியளிக்கிறார்; ராகுல், சிறு சுத்தியலை வைத்து அதை உடைக்க முயற்சிக்கிறார்; இதில், தனித்தனி கொள்கைகளை கொண்ட 'இண்டியா' கூட்டணி தலைவர்கள், சேர்ந்து நின்றால் எப்படி ஒத்துப்போகும்?இது சுயநல கூட்டணியே தவிர, மக்களுக்கு நன்மை செய்யும் கூட்டணியாக தெரியவில்லை. யார் பிரதமர் வேட்பாளர் என்பதில் போட்டியிடும் இவர்கள், நாட்டு மக்களுக்கு செய்வதை சொல்ல தயாராக இல்லை.எனவே, வரும் லோக்சபா தேர்தலிலும் பா.ஜ.,வே வெற்றி வாகை சூடி, மோடியே மீண்டும் பிரதமராவார். உலக அரங்கில், இந்தியா இன்னும் அதிக உயரங்களை எட்டிப் பிடிக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

விஜயகாந்த் புகழ் என்றும் நிலைத்திருக்கும்!

வ.ப.நாராயணன், ஊரப்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ- - மெயில்' கடிதம்: எல்லாரையும் கவர்ந்த சில நடிகர்களில் விஜயகாந்தும் ஒருவர். திரைத் துறையினர் மட்டுமின்றி அனைத்து அரசியல் கட்சி தலைவர்களின் அன்பையும் பெற்றவர். அரசியலுக்கு அப்பாற்பட்ட பொது மக்களின் அன்பையும், நன் மதிப்பையும் பெற்றவர்.தன்னை பார்க்க வரும் சாதாரண தொண்டனையும் மதிப்பவர். வீண் பந்தா காட்டாதவர். வெளியூர்களில் இருந்து தொண்டர்கள், பொது மக்கள் என யார் வந்தாலும், அவர்களை சாப்பிட வைத்த பிறகே திருப்பி அனுப்புவார்.தன் பிறந்த நாளில், விளம்பரம் இல்லாமல் ஏழைகளுக்கு நிறைய நலத்திட்ட உதவிகளை செய்தவர்; தன் கல்லுாரி யில், ஏழை மாணவர்களுக்கு குறைந்த கட்டணம் மற்றும் சலுகைகள் வழங்கி யவர்; அரசியலில், பதவிக்காக எதையும் விட்டு கொடுக்கவோ, சமரசம் செய்யவோ, நியாயத்திற்கு புறம்பாக நடக்கவோ, பணிந்து போகவோ அவருக்கு அறவே பிடிக்காது.துணிச்சலுக்கு பெயர் போன விஜயகாந்த், தன் எதிர்க்கட்சி தலைவர் பதவி போனாலும் பரவாயில்லை என்று, அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவையே சட்டசபையில் நேருக்கு நேர் எதிர்த்து, காரசாரமாக விவாதம் செய்தவர்.ஆனால், என்ன தான் விஜயகாந்தின் செயல்பாடுகள் நியாயமாகவும், நேர்மையாகவும் இருந்தாலும், அவரது முன்கோபமே அவருக்கு எதிரியாகி, வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட்டது. பொது வாழ்விற்கு வந்தால் சகிப்புத் தன்மை, பொறுமை, நிதானம் இருந்தால் தான் வளர்ச்சி காண முடியும்.ஆனால், விஜயகாந்திடம் இந்த குறைபாடுகள் இருந்ததால், வளர்ந்த வேகத்தில் சரிவையும் கண்டார். இதனிடையே துரதிர்ஷ்டவசமாக அவரது உடல்நிலையும் பாதிக்கப்பட்டதால், அரசியல் களத்தில் அவரது செயல்பாடுகள் முற்றிலுமாக நின்று போனது.'கருப்பு எம்.ஜி.ஆர்., கேப்டன்' என்று அன்புடன் அழைக்கப்பட்ட விஜயகாந்த், இயல்பாகவே நல்ல மனம் கொண்டவர். அதனால் தான் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த, கட்சி பேதமின்றி, அனைத்து கட்சி தலைவர்களும் அணிவகுத்து வந்தனர். தமிழக கவர்னரும், மத்திய அமைச்சரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். எம்.ஜி.ஆரின் புகழ் போல, விஜயகாந்தின் புகழும் தமிழகத்தில் என்றும் நிலைத்திருக்கும்!

உர தொழிற்சாலையை மூடுவது சரியா?

என்.எஸ்.வெங்கட்ராமன், வேதியியல் பொறியாளர், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கடந்த 1963ல், சென்னை எண்ணுாரில் துவக்கப்பட்ட, கோரமண்டல் இன்டர்நேஷனல் நிறுவன உர தொழிற்சாலை, 60 ஆண்டுகளாக சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுத்தாமல் இயங்கி வந்தது. துரதிர்ஷ்டவசமாக, சில தினங்களுக்கு முன், தொழிற் சாலைக்கு அமோனியா வாயு வரும் குழாயில் கசிவு ஏற்பட்டு, அருகில் வசித்த, 50க்கும் மேற்பட்டோர் வாந்தி, மயக்கம், கண் எரிச்சல் போன்ற உபாதையால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.வாயு கசிவை உடனடியாக கண்டறிந்து நிறுத்தியதால், பிரச்னை மேலும் தீவிரமடையாமல் தடுக்கப்பட்டது.இந்நிலையில், 'உர தொழிற்சாலையை நிரந்தரமாக மூட வேண்டும்' என, சிலர் போராட துவங்கி உள்ளனர். வாயு கசிவு தொழிற்சாலை, வளாகத்திற்குள் ஏற்படவில்லை; அமோனியா வாயு, துபாயிலிருந்து கப்பலில் கொண்டு வரப்பட்டு, கடலில், 3 கி.மீ.,க்கு போடப்பட்ட குழாய் வழியாக, தொழிற்சாலை வளாகத்தில் உள்ள இரண்டடுக்கு தொட்டியில் சேமிக்கப்படுகிறது. 'மிக்ஜாம்' புயலால் குழாய் பாதிக்கப்பட்டு, வாயு கசிந்தது; எதிர்பாராத விபத்து இது. இதில், மனித தவறுகள் இல்லை.பல தருணங்களில், போக்குவரத்து விபத்துகள் நிகழ்வதால், உடனே அவற்றை முற்றிலும் நிறுத்த வேண்டும் என, யாரும் கூறுவதில்லை. போராட்டக்காரர்கள் கேட்பது போல் இந்த தொழிற்சாலையை மூடினால், நாட்டில் உர உற்பத்தி குறைந்து, பயிர் வளர்ச்சி பாதிப்படைந்து, விவசாயிகள் நஷ்ட மடைவர்; உணவு பற்றாக்குறையும் ஏற்படும். மேலும், நிரந்தர, தற்காலிக பணியாளர்கள் பலர் வேலை இழப்பர்.உதாரணமாக, துாத்துக்குடியில் ஸ்டெர்லைட் காப்பர் தொழிற்சாலையை மூடியதால், 10,000 பேர் வேலை இழந்து பாதிக்கப்பட்டனர். இதனால், அங்கு துறைமுகத்தின் வருமானம் பெருமளவு குறைந்து, தற்போது அதிகளவு காப்பர் இறக்குமதி செய்யும் நிலைக்கு நாடு தள்ளப்பட்டு உள்ளது.இந்நிலை, எண்ணுார் உர தொழிற்சாலைக்கும் ஏற்படக் கூடாது. மாறாக, விபத்துகள் ஏற்பட்டால் எப்படி கையாளுவது என, அரசு சில கொள்கை முடிவுகளை எடுத்து, பாதிக்கப்பட்டோருக்கு தொழிற்சாலையே தகுந்த நஷ்ட ஈடு கொடுப்பது போன்ற விதிமுறைகளை வகுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை