உள்ளூர் செய்திகள்

இது உங்கள் இடம்

ஜெகன் மீது சி.பி.ஐ., சோதனை ஏன்?ஏ.ஆர்.பார்த்தசாரதி, வேளச்சேரி, சென்னையிலிருந்து எழுதுகிறார்: கடந்த சில தினங்களாக, ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி பற்றிய செய்திகள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன. அவரின் வீடுகளிலும், அவருக்கு சொந்தமான நிறுவனங்கள் மற்றும் அந்நிறுவனங்களுடன் தொடர்புடைய நிறுவனங்களிலும், சி.பி.ஐ., அதிகாரிகள் தொடர்ந்து மூன்று நாட்கள் சோதனை நடத்தினர். ஜெகன், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்து விட்டாராம்! அவர் திடீரென, இரவோடு இரவாகவா, சொத்து குவித்து விட்டார்? நேற்று வரை, அவர் காங்கிரசோடு இருந்தவர் தானே? அவரை முறையற்ற வழியில் சொத்து குவிப்பதற்கு ஏன் அனுமதித்தனர்? ஆந்திர முன்னாள் முதல்வரான, அவரது தந்தை ராஜசேகர ரெட்டியின் திடீர் மறைவுக்கு பின், தந்தை வகித்த முதல்வர் பதவி, தனக்கு வேண்டுமென கேட்டார்; மேலிடத்தின் அனுமதி கிடைக்கவில்லை. தனிக்கட்சி ஆரம்பித்து, தேர்தலில் நின்று, ஆந்திர மக்களின் பெருவாரியான ஆதரவால், மிகப்பெரிய வெற்றியைப் பெற்றார். அதை ஜீரணிக்க முடியாத காங்கிரசார், இப்போது சி.பி.ஐ.,யை ஏவி விட்டு, விளையாட்டு காட்டுகின்றனர். அரசியலைப் பற்றி, ஒன்றுமே அறியாதவர்கள் கூட, 'இது வெளிப்படையான பழிவாங்கும் முயற்சி' எனக் கூறி விடுவர். இந்த பழிவாங்கும் நடவடிக்கையை தொடர்ந்து, ராஜசேகர ரெட்டி முதல்வராக இருந்த போது, அமைச்சர்களாக பதவி வகித்தவர்களுக்கு எதிராகவும், சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும் என, காங்கிரஸ் கட்சியில் உள்ளவர்களே வலியுறுத்தியுள்ளனர். இதனால், தற்போது காங்கிரசில், முக்கிய பதவிகளில் இருப்பவர்களும், கலக்கம் அடைந்துள்ளனர். இதற்கெல்லாம் என்ன காரணம்? தங்களோடு சேர்ந்து இருக்கும் போது, ஊழல் செய்தால் கண்டு கொள்ளாமல் விடுவதும், விலகி நின்றால், நடவடிக்கை எடுப்பதும், மத்திய ஆட்சியாளர்களின் வாடிக்கையாகிவிட்டது. இதனால் தான், வலுவான ஜன் லோக்பால் மசோதா, பார்லிமென்டில் நிறைவேற்றப்பட வேண்டும் என, அன்னா ஹசாரே போன்ற சமூக ஆர்வலர்கள், தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.புதிய இன்ஜி., கல்லூரிகள் இனி வேண்டாம்!வ.பிச்சாமணி, அரகண்டநல்லூர், விழுப்புரத்திலிருந்து எழுதுகிறார்: 'கடந்த ஒன்றரை மாதங்களாக, சென்னை அண்ணா பல்கலை மூலம், நடந்தேறிய பொறியியல் கல்லூரி சேர்க்கை முடிந்ததும், 45 ஆயிரம் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் காலியாக உள்ளன' என, பல்கலை அறிவித்துள்ளது. அண்ணா பல்கலை, சென்னை, திருச்சி, கோவை, மதுரை, திருநெல்வேலி என, ஐந்து பகுதிகளாக பிரிக்கப்பட்டு, அவற்றுள், 500 கல்லூரிகள் இயங்கி வருகின்றன.பொறியியல் கல்லூரி சேர்க்கை முடியும் தறுவாயில், 167 கல்லூரிகளுக்கான தரவரிசைப் பட்டியலை மட்டும், சென்னை அண்ணா பல்கலை வெளியிட்டது. ஒட்டுமொத்த தமிழக பொறியியல் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியலையும், வெளியிட்டு இருக்க வேண்டும். ஏன் அவ்வாறு செய்யவில்லை? இன்னும், தமிழக தலைநகரையே பார்க்காத பலர் இருக்கின்றனர். இந்நிலையில், பொறியியல் கல்லூரிகளில் சேர விரும்புவோர், தமிழகம் முழுவதும் உள்ள, 500 கல்லூரிகளுக்கும், நிலைமையை நேரில் சென்று அறிந்து வர இயலுமா என்பதை, உயர்கல்வித்துறை யோசிக்க வேண்டும். தமிழகத்தில் பி.எட்., - எம்.எட்., படிப்புக்கான கல்லூரிகள், தேவைக்கு அதிகமாக இருப்பதால், இனி, தமிழகத்தில் யாருக்கும் தேசிய தொழில்நுட்ப பல்கலைக் கழகம் அங்கீகாரம் வழங்கக் கூடாது என்ற, தமிழக அரசின் கோரிக்கை நியாயமானது. புதிய கல்லூரிகளுக்கு அனுமதி கொடுத்து, மாணவர்களை சிரமப்படுத்த வேண்டாம். கல்வி, வணிகப் பொருளாகாமல், மாணவர்களின் கல்வித்தரம் உயர, தரவரிசைப் பட்டியலை, பொறியியல் சேர்க்கைக்கு முன்னரே வெளியிட்டு, மாணவர்களின் ஐய்யங்களை போக்க, உயர்கல்வித்துறை முயற்சிக்க வேண்டும்.ஹசாரேவுக்கு வேட்டி அணிவதே அழகு!வீ.சுந்தரமகாலிங்கம், திருவனந்தபுரத்திலிருந்து எழுதுகிறார்: 'வேட்டி அணிவது நியுசன்ஸ்' என, ஒரு வாசகர் இப்பகுதியில் எழுதியிருந்தார். அதுதான் அணிவதற்கு வசதியானது, காற்றோட்டம் உள்ளது. காற்று வீசினால் உள்ளாடை தெரியும் என்பது சரியல்ல. திரைப்படத்தில், நடிகர் வடிவேலு போன்று, வேட்டியைத் தூக்கி கட்டினால்தான் உள்ளாடை தெரியும். இடுப்பில் நிற்காது என்பதும் உண்மையல்ல. தொந்தியுள்ளவர்களுக்கு வசதியாக இல்லாமல் இருந்தால், 'பெல்ட்' போட்டுக் கொள்ளலாம். வேட்டி, சட்டைதான் தென்னிந்திய சீதோஷ்ண நிலைக்கு ஏற்றது. பேன்ட் அணிவது, நடப்பதற்கு வசதி தான். ஆனால் இன்று, பலரும் வேட்டி, கைலி அணியத் தெரியாமல், 'பேன்ட்'டுடன் படுத்துத் தூங்குகின்றனர்.தமிழகம், கேரளாவில் வேட்டி அணிபவர்கள் அதிகம். வடக்கே செல்லும்போது, வேட்டியை மடித்து, வீட்டில் வைப்பதே நல்லது எனக் கூறுவது, வேட்டியைத் தாழ்வு படுத்துவதாகும். இந்தியாவின் முன்னாள் பிரதமர்கள் லால்பகதூர் சாஸ்திரி, நரசிம்மராவ், தார்பாய்ச்சிக் கட்டிய வேட்டி அணிந்தவர்கள் தான். லண்டனில் நடந்த வட்டமேஜை மாநாட்டுக்கு, காந்திஜி சென்றபோது, முழங்கால் வேட்டியும், மேலே சால்வையும் தான் அணிந்திருந்தார். 'இவ்வளவு குறைந்த ஆடையில் வந்திருக்கிறீர்களே...' என, அங்கே கேட்டதற்கு, 'எனக்கும் சேர்த்து உங்கள் மன்னர் அணிந்திருக்கிறாரே' என்றாராம்!ரஷ்யா சென்றபோது, காமராஜர் வழக்கமாக அணியும் கதர் வேட்டி, சட்டை அணிந்து சென்றார். அவருக்கு,'சூட்' தைக்கலாமா என கேட்டதற்கு,'வேண்டாம்; குளிருக்கு சால்வை போதும்' என, கூறிவிட்டார். 'உடை அணிவது அவரவர் விருப்பம் எனக் கூறுபவர், வேட்டி அணிவதை ஏன் தாழ்வாகக் கருதவேண்டும்? வேட்டி, சேலை இடுப்பில் நிற்பதில்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. காந்திஜிக்கு முழங்கால் வரை வேட்டியும், நேருவுக்கு குர்தாவும், நேதாஜிக்கு ராணுவ உடையும், காமராஜருக்கு வேட்டி, சட்டை, துண்டு தான் அழகு. வேட்டி, ஜிப்பா, தொப்பி அணிந்து தான் அன்னா ஹசாரே, உண்ணாவிரதம் இருந்து, நாடு முழுவதும் ஆதரவு திரட்டியிருக்கிறாரே தவிர, பேன்ட் அணிந்து அல்ல! முதல்வர்கள் ஷீலா தீட்சித், மம்தா பானர்ஜி, ஜெயலலிதா சேலை அணிவதே அழகு; உ.பி., முதல்வர் மாயாவதி சுடிதார், சட்டை, துப்பட்டா அணிவது அவ்வளவு அழகாக இல்லை. அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர், டாக்டர் ராதாகிருஷ்ணன், சி.வி.ராமன், சி.பி.ராமசாமி அய்யர் தலைப்பாகை அணிந்ததுதான் அழகு. மன்மோகன் சிங், மாண்டேக் சிங் அலுவாலியா தலைப்பாகை அணிந்திருப்பதுதான் அழகு.இளம் பெண்கள் பாவாடை, தாவணி அணிவது தான் அழகாக இருக்கும். ஆனால், அவர்களை சுடிதாருக்கு மாற்றிவிட்டது நாகரிகம்.வேட்டிக்கு உள்ள வசதியே வேறு!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை