உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இது உங்கள் இடம் / உரக்கச் சொல்வோம்; உண்மை விளங்கும்!

உரக்கச் சொல்வோம்; உண்மை விளங்கும்!

ஜி.ரங்கராஜன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'சிலரை சில காலம் ஏமாற்றலாம்; ஆனால், எல்லாரையும் எப்போதும் ஏமாற்ற முடியாது' என, அண்மையில் பிரதமர் மோடியை, முதல்வர் ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.அவர் தன் பிம்பத்தை கண்ணாடியில் பார்த்து, மனசாட்சியுடன் சுய விமரிசனம் செய்திருப்பாரோ என நினைக்கத் தோன்றுகிறது. ஏனெனில், ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகள் கடந்த பின்னும், தமிழக மக்களை தானே ஏமாற்றுவது அவருக்குப் புரிந்திருக்கும். முதல் கையெழுத்தில் நீட் ஒழிப்பு என்ற, கடந்த சட்டசபை தேர்தல் வாக்குறுதி, காற்றோடு காற்றாக போய், மக்கள் தலையில் மிளகாய், நன்றாய் அரைக்கப்பட்டும் விட்டது! அடுத்தது, மதுவிலக்கு எனும் வாக்குறுதி அறைகூவல் விடுத்து, மூன்று ஆண்டுகள் உருண்டோடி விட்டன. எந்த ஒரு விலக்கும் இல்லாமல், குடிமக்கள் சுதந்திரப் பறவைகளாய், டாஸ்மாக்கில் தாகசாந்தி செய்தபடி தான் உள்ளனர். குடிமகன்களின் குடும்பங்களும், இயன்றவரை தள்ளாடி சீரழிந்தபடி இருக்கின்றன! அடுத்தது, அனைத்து மகளிருக்கான மாதம் 1,000 ரூபாய், உதவித்தொகை வாக்குறுதி! வானம் பார்த்த பூமி போல, மாதம் 1,000 ரூபாயை எதிர்பார்த்து ஓட்டு போட்டு, ஏமாந்து நிற்கும் குடும்பத் தலைவிகள், இப்போது சலிப்படைந்து கிடக்கின்றனர்! அரசு ஊழியரின் பழைய ஓய்வூதிய திட்ட நிறைவேற்ற வாக்குறுதிக்கோ, ஸ்டாலின் அரசு ஒரேயடியாக ஓய்வு கொடுத்து விட்டது. இதை கேட்டு கேட்டு பலனின்றி, அரசு ஊழியர்களும் ஓய்ந்து விட்டனர்! கச்சத்தீவு மீட்பு வாக்குறுதி, வற்றாத ஜீவ நதியாக, ஒவ்வொரு தேர்தலிலும், மக்கள் காதில் ஓங்கி ஒலித்தபடி தான் இருக்கிறது. கச்சத்தீவு அங்கேயே தான் உள்ளது; மீட்கும் வேட்கையைக் காணோம்!இப்போது மீண்டும், 'தமிழக மக்களில் சிலரை, சில காலம் ஏமாற்றலாம்; ஆனால், எல்லாரையும், எப்போதும், ஒருபோதும் ஏமாற்ற முடியாது' என்ற முதல்வரின் பேச்சை, மீண்டும் உரக்கச் சொல்லிப் பார்ப்போம்; உண்மை விளங்கும்!

பஸ்கள் பராமரிப்பில் கூடுதல் கவனம்!

சி.கார்த்திகேயன், சாத்துார், விருதுநகர் மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழகத்தில் ஓடும் அரசு பஸ்கள், தினமும் ஏதாவது ஒரு விபத்தில் சிக்குவதும், சிலர் உயிரிழப்பதும் வாடிக்கையான நிகழ்வுகளாகி விட்டன. சமீபத்தில், பஸ் கண்டக்டரே தன் இருக்கையோடு பஸ்சில் இருந்து வெளியே வந்து விழுந்தது அதிர்ச்சி அளிக்கிறது.தினமும், பஸ்சை பணிமனையில் இருந்து எடுக்கும் போது, சக்கரம் மற்றும் சில விஷயங்களை மட்டும் சோதனை செய்வது வழக்கமாக உள்ள நிலையில், வேறு எந்த ஒரு குறையையும் பணிமனையில் இருக்கும் தொழில்நுட்ப ஊழியர்கள் கண்டுபிடித்து சொல்ல மாட்டார்களா?மேலும், இதே வழித்தடத்தில் செல்லும் தனியார் பஸ்கள் எத்தனை சுத்தமாகவும், பயணம் செய்ய இனிமையாகவும் இருக்கிறது என்பதை தனியார் பஸ்கள் வைத்திருக்கும் நம் அரசியல் கட்சி தலைவர்கள் உணர்ந்து, அதேபோல் ஏன் அரசு பஸ்களை பராமரிப்பு செய்ய முன்வருவதில்லை?இப்போது வரை நடந்தது நடந்தவையாக இருக்கட்டும். இனி வரும் காலங்களில், படிக்கட்டு பயணம் இல்லாமல் தானியங்கி கதவுகள் மற்றும் படிக்கட்டு ஓர ஜன்னல்களை கண்ணாடி கொண்டு அடைப்பது போன்ற விஷயங்களை முறையாக செய்ய வேண்டும். பஸ்சில் பயணிக்கும் மக்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.அதேபோல, போக்குவரத்து ஊழியர்களும், தங்கள் ஊதியம், போனஸ் மற்றும் இதர சலுகைளை பெறுவதில் காட்டும் அக்கறை மற்றும் வேகத்தை, பஸ்கள் பராமரிப்பிலும் காட்ட வேண்டும். ஏனெனில் ஒரு பஸ்சின் டிரைவர், கண்டக்டர் ஆகிய இருவரை நம்பியே அதில், 60 முதல் 70 பேர் வரை பயணிக்கின்றனர். அவர்களது பாதுகாப்பில் எந்த சமரசத்தையும் ஏற்க முடியாது.

நம்மால் வேறொன்றும் செய்ய முடியாது!

சுப்ர.அனந்தராமன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'காங்கிரசுக்கு ஓட்டளிக்காவிட்டால், மின்சாரம் துண்டிக்கப்படும்' என, கர்நாடகாவின் காக்வாட் தொகுதி காங்., - எம்.எல்.ஏ., ராஜு காகே, பகிரங்கமாக மிரட்டியுள்ளார்.அம்மாநிலத்தின், பெலகாவி மாவட்ட, சிக்கோடி லோக்சபா தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து, ராஜு காகே பிரசாரம் மேற்கொண்டபோது, 'இந்தத் தொகுதியில், காங்., வேட்பாளருக்கு அதிகம் பேர் ஓட்டு போட வேண்டும். 'இல்லையெனில், மின்சாரம் துண்டிக்கப்படும். நான் என் வார்த்தையில் எப்போதும் உறுதியாக இருப்பேன்' என, மிரட்டல் பேச்சு பேசியுள்ளார்.இவர் ஒரிஜினலாக, காங்கிரசில் இருந்து நன்றாக சொகுசு அனுபவித்து முடித்துத் திகட்டிய பின், பா.ஜ.,வுக்கு மாறினார். அங்கு பதவி சுகம், பவிசுகள் பல கண்டு அனுபவித்த பின், காங்கிரசுக்கு வந்து சேர்ந்து, திரும்பவும் பா.ஜ.,வில் சேர்ந்து, அங்கே இக லோக சுகங்களை, எடியூரப்பா, ஜெகதீஷ் ெஷட்டர் முதல்வர்களாக இருந்த பா.ஜ.,வின் பொற்காலத்தில், மீண்டும் அனுபவித்து, மீண்டும் காங்கிரசுக்கு வந்து சேர்ந்த பச்சோந்தி பேர்வழி.இவர் ஒருவர் மட்டுமல்ல; பல நுாறு அரசியல்வாதிகளும், இதே போன்று துட்டு சம்பாதிக்கவே, காங்., - பா.ஜ., மற்றும் இன்ன பிற கட்சிகளில் சேர்ந்து சுகங்கள் அனுபவித்து வருகின்றனர்.குற்றவாளிகளின் கடைசி புகலிடம் அரசியல் என்பது, பிரிட்டன், அமெரிக்கா நாடுகளில் சகஜமாக பேசப்படும் உண்மை.ராஜு காகே என்ற இன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ., இப்போது, பிரதமர் அணியும் விலை மதிப்புள்ள கோட் - சூட், ஸ்பெஷல் விமானம் ஆகியவற்றை பற்றி, சகட்டுமேனிக்கு கிண்டல்அடித்துள்ளார்.ஜூன் மாதம் தேர்தல் முடிவுகள் வெளியான பின், இதே ராஜு, முதல்வர் சித்தராமையா பற்றி உடனே, 'கமென்ட்' அடிக்காமல் பொறுத்திருந்து, காற்று திசை மாறும்போது, மீண்டும் பா.ஜ.,வுக்கு பறப்பார். அங்கிருந்தபடி, சித்து மீது கல்லெறிவார்; நாமும் வேடிக்கை பார்ப்போம். அதைத் தவிர, விவஸ்தை கெட்ட நம்மால் வேறொன்றும் செய்ய முடியாது!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Anantharaman Srinivasan
மே 13, 2024 18:48

அரசியல்வாதிகளின் MLA MP களின் யோக்கியதை நாட்டு மக்ககள் அறிந்ததே எழுதியெழுதி படித்துப்படித்து புளித்துப்போய்விட்டது இதற்கு தீர்வை தேர்தல் கமிஷனும் உச்சநீதிமன்றமும் இணைந்து தான் செய்யவேண்டும் தேர்தல் கமிஷன் மத்தியரசின் கைபாவையாக இருக்கும்வரை ஒன்றும் நடக்காது


D.Ambujavalli
மே 13, 2024 10:26

இங்கு மட்டும் என்ன வாழ்ந்தது? ஆட்சிக்கு வந்த மறுநாளே செந்தில் பாலாஜியை நேரே சிறைக்கு அனுப்பிவிட்டுத்தான் மறுவேலை என்றவர் அவர் கட்சி மாறி வந்தது இரட்டை துறை அமைச்சராக்கி, கைதானபிறகும் பதவி இறக்கம் செய்யாது 'இலாகா இல்லாத அமைச்சராக' ஆறு மாதம் நீடிக்க விட்டதும் உலகம் அறிந்த கதை ஆயிற்றே அன்றே சொன்னார் அண்ணா, 'சிங்கப்பூர் சென்று திரும்பியது போல் வா தம்பி' என்று இன்று பலமுறை சிங்கப்பூர் டூரிஸ்டுகள் எல்லாக் காட்சிகளிலும் இருக்கிறார்கள்