என்.மல்லிகை மன்னன், மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் நடந்த மிகப் பிரமாண்டமான பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, எம்.ஜி.ஆர்., பற்றியும், ஜெயலலிதா பற்றியும் வெகுவாக புகழ்ந்து பேசினார்.இதைப் பொறுக்காத அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், 'எம்.ஜி.ஆர்., - ஜெ., பற்றிய பேசிய பிரதமர் மோடி, பழனிசாமி பற்றி ஏன் பேசவில்லை' என்று குமுறி இருக்கிறார்.எம்.ஜி.ஆரும்., ஜெ.,யும் தமிழகத்தில் நல்லாட்சி நடத்தியவர்கள் என்பது தமிழக மக்களுக்கு நன்கு தெரியும். தீய சக்தி என்று எம்.ஜி.ஆர்., அடையாளம் காட்டிய தி.மு.க.,வை, 11 ஆண்டுகள் ஆட்சிக்கு வர விடாமல் தடுத்த பெருமை எம்.ஜி.ஆருக்கு உண்டு.அதேபோல, ஜெ.,யும் 10 ஆண்டுகள் ஆட்சிக்கு வர முடியாமல், தி.மு.க.,வை தடுத்து வைத்திருந்தார். அவர் மட்டும் உயிருடன் இருந்திருந்தால், 2021ல் கூட தி.மு.க., ஆட்சிக்கு வந்திருப்பது சந்தேகம் தான்.ஆனால், பழனிசாமி அப்படியா? தன்னை முதல்வராக்கிய சசிகலாவுக்கே துரோகம் செய்த பெருமைக்குரியவர். வெற்றிச் சின்னமாக விளங்கிய இரட்டை இலை சின்னத்தை தோல்வி சின்னமாக்கிய மாற்றிய பெருமைக்கு சொந்தக்காரர் பழனிசாமி.இவர், அ.தி.மு.க., தலைமை பொறுப்புக்கு வந்ததும் நடந்த உள்ளாட்சி, லோக்சபா, சட்டசபை என அனைத்து தேர்தல்களிலும் கட்சிக்கு தோல்வி தான் பரிசாக கிட்டியது. பா.ஜ., கூட்டணியை முறித்து கொண்டதன் வாயிலாக, வரும் லோக்சபா தேர்தலிலும் அ.தி.மு.க., மண்ணை கவ்வுவது உறுதி.எல்லாவற்றுக்கும் மேலாக, எம்.ஜி. ஆர்., - ஜெ., போன்ற மக்கள் செல்வாக்கு மிகுந்த ஆளுமைகளுடன், பழனிசாமியை அந்த கட்சியின் தொண்டர்களே ஒப்பிட மாட்டார்கள். எனவே, அவர்களுக்கு நிகராக பழனிசாமி பெயரை சொல்லாமல், பிரதமர் மோடி தவிர்த்ததில் வியப்பேதும் இல்லை. சீமானும் தடம் புரண்டு விட்டார்!
த.கிருஷ்ண
பெருமாள், கும்பகோணத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நாம்
தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மனைவி கயல்விழிக்கு தென்சென்னை
லோக்சபா தொகுதி சட்ட ஆலோசகர் பதவி வழங்கப்பட்டுள்ளது.இதுவரை தமிழக
அரசியல் கட்சிகளுக்கு மாற்றான கொள்கையில் பயணித்து வருவதாக சொல்லிய சீமான்,
தடம் புரண்டு தற்போது, அதே வழியில் பயணிக்க துவங்கியுள்ளார் என்பதன்
அறிகுறியே, இந்த அரசியல் நடவடிக்கை.வாரிசு அரசியலை மையப்படுத்தியே,
கயல்விழிக்கு முக்கிய பொறுப்பு தரப்பட்டுள்ளது. இனி வரும் காலத்தில்,
கட்சி சார்பான விவகாரங்களில் தலையிட்டு எதிர்த்து கேள்வி கேட்கும்
தும்பிகளை... மன்னிக்கவும், தம்பிகளை கட்சியை விட்டு துாக்கி கடாசி
விடுவார்.உதயநிதியின் அரசியல் வருகையை, 'கங்காரு குட்டி'யுடன்
ஒப்பிட்டு கேலி, கிண்டல் செய்த சீமான், இனி அப்படி மேடைகளில் பேச முடியுமா?
அப்படியே பேசினாலும், தி.மு.க.,வினர் தரும் பதிலடிக்கு சீமானிடம் விளக்கம்
இருக்குமா?வெள்ளித்திரையில் உச்சம் பெற்ற போதும், நடிகர் விஜய்
சினிமாவிற்கு முழுக்கு போட்டு அரசியலில் தடம் பதிக்க முறையாக வருகிறார்.
ஆனால், சீமான் அரசியல் கட்சியின் மைய புள்ளியாக இருந்த போதும், தற்போது
சினிமாவில் ஒரு முக்கிய கதாபாத்திரத்திற்காக தாடி வளர்ப்பது என்பது, அவரது
பணம் ஈட்டும் கொள்கையை அப்பட்டமாக எடுத்துரைக்கிறது.'தனித்து
போட்டி என்ற கொள்கை பிடிவாதத்தால், கட்சி வளர்ச்சியை ஓரம் கட்டி வருகிறார்
சீமான். தன் செல்வாக்கை உயர்த்த, தொண்டர்களின் உழைப்பை உறிஞ்சுவதா' என,
ஆங்காங்கே இப்போதே தொண்டர்கள் கேள்வி எழுப்ப துவங்கி விட்டனர்.சூழ்நிலைக்கு
ஏற்ப மேடை பேச்சு, புகழ் பெற்ற தலைவர்களை அண்ணன், மாமா, மச்சான் என்று
பெயரளவில் உரிமை கொண்டாடி, அந்த கட்சி தொண்டர்களை வசியப்படுத்தும் சீமானின்
தந்திர பேச்சு இனி எடுபடாது. நீதி துறையில் சீர்திருத்தங்கள் தேவை!
கு.
காந்தி ராஜா, சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: இந்திய
நீதிமன்றங்களில், 5 கோடியே 11 லட்சம் வழக்குகள் நிலுவையில் இருப்பதாக,
பார்லிமென்டில் சமீபத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, மிகவும் அதிர்ச்சி
தரக்கூடிய செய்தி.'தாமதிக்கப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதிக்கு
சமம்' என்பர். இவற்றில், 1.10 லட்சம் வழக்குகள், 30 ஆண்டுகளுக்கும் மேலாக
தீர்க்கப்படாமல் நிலுவையில் இருக்கின்றன. இதனால் பெரிதும் பாதிக்கப்படுவது,
ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களாகவே இருக்கின்றனர். இந்தப் பிரச்னைக்கு
உடனடி தீர்வு காணப்பட வேண்டியது அவசியமாகும்.பல கிரிமினல் வழக்கு
களில், இறுதி தீர்ப்பு கிடைப்பதற்குள் ஒருவரது வாழ்க்கையே முடிந்து
விடுகிறது என்றால், சொத்து தகராறு போன்ற சிவில் வழக்குகளின் நிலைமை
இன்னமும் மோசம். இறுதி முடிவு கிடைப்பதற்குள், பல தலைமுறைகளே கடந்து
விடுகின்றன.சட்டசபை அல்லது லோக்சபா தேர்தல் வெற்றியை எதிர்த்து,
தோல்வியுற்றவர் வழக்கு தொடர்ந்தால், ஐந்து ஆண்டு பதவிக்காலம் முடிந்த பிறகே
தீர்ப்பு வருகிறது. இப்படிப்பட்ட தீர்ப்புகளால் என்ன பயன்?இன்றைய
தேதியில், மாவட்ட மற்றும் தாலுகா நீதிமன்றங்களில் சுமார் 4.50 கோடி
வழக்குகள் தேங்கியிருக்கின்றன; மாநில உயர் நீதிமன்றங்களில் 62,000; உச்ச
நீதிமன்றத்தில் 80,000 வழக்குகளும் முடிவடையாமல் இருக்கின்றன.இதற்கு,
நீதிபதி களையோ, வழக்கறிஞர்களையோ மட்டும் குறை கூற முடியாது. அரசு மற்றும்
உச்ச நீதிமன்றம் இணைந்து, வழக்கறிஞர்களின் ஒத்துழைப்புடன் தீர்வு காண
வேண்டும்.கடந்த சில ஆண்டுகளாக,நம் நாடு பல்வேறு விஷயங்களில்,
பெரும் மாற்றத்தையும், முன்னேற்றத்தையும் சந்தித்து வருகிறது. கடந்த கால
கவைக்குதவாத சட்டங்கள் பல நீக்கப்பட்டு, காலத்துக்கேற்ற மாற்றங்கள் கொண்டு
வரப்படுகின்றன.அந்த வகையில், நீதிமன்றங்களில் வழக்குகள் முடிய ஏற்படும் காலதாமதத்திற்கும் ஒரு தீர்வை கண்டறிய வேண்டும்.நீதிபதி
காலி பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும்; வாய்தாக்களுக்கு கட்டுப்பாடுகள்
விதிக்கப்பட வேண்டும்; விளம்பரத்திற்காக வழக்கு தொடுப்போருக்கு அதிகபட்ச
அபராதமும், சிறை தண்டனையும் விதிக்கப்பட வேண்டும்.இப்படி நீதி துறையில் பல சீர்திருத்தங்களை செய்தால், வழக்குகள் தேங்குவதற்கு ஓரளவுக்கு தீர்வு கிடைக்கும்.