உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இது உங்கள் இடம் / பிரேமலதாவின் கறார் பேச்சு கைகொடுக்குமா?

பிரேமலதாவின் கறார் பேச்சு கைகொடுக்குமா?

கோ.தி.ஸ்ரீராம் விஷ்ணு, சென்னையில் இருந்து அனுப்பிய கடிதம்: நடிகரும், தே.மு.தி.க., நிறுவன தலைவருமான விஜயகாந்த், கடந்தாண்டு இறுதியில் காலமானார். அவருக்கு, லட்சக்கணக்கானோர் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர். அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, கருணாநிதிக்கு பின், இவருக்கு தான் அதிக கூட்டம் திரண்டது.திரைப்படங்களில் அவர் ஏற்று நடித்த கதாபாத்திரங்கள், அவருடைய குணநலன், உதவும் மனப்பான்மை, மனித நேயத்திற்காக தான் அவ்வளவு கூட்டம் சேர்ந்தது. அந்த கூட்டத்தில் அவருடைய கட்சி தொண்டர்கள், 20 சதவீதத்தினர் தான்; மீதி உள்ளோர் அவர் மீது அன்பு கொண்ட மற்றும் மாற்றுக்கட்சியில் உள்ளவர்களும், பொதுமக்களும் தான்.தற்போது லோக்சபா தேர்தல் வரவிருக்கும் சூழலில், தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும், கூட்டணி அமைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.அந்த வகையில் தே.மு.தி.க., பொதுச் செயலரும், விஜயகாந்த் மனைவியுமான பிரேமலதா கூட்டணி சம்பந்தமாக பேசி வருகிறார்.தங்களது கட்சிக்கு, 14 தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா தொகுதியையும் எந்தக் கட்சி கொடுக்கிறதோ, அக்கட்சியுடன் கூட்டணி அமைக்க தயார் என்று கூறி வருகிறார். இவர், விஜயகாந்த் இறப்பிற்கு வந்த மக்கள் கூட்டத்தை வைத்து இவ்வாறு பேரம் பேசி வருகிறார்; அவருக்கு இன்னும் யதார்த்த நிலை புரியவில்லை.தன்னை, ஏதோ ஜெயலலிதா போன்ற மக்கள் தலைவி என்றும் நினைக்கிறார். கடந்த காலங்களில், விஜயகாந்த் உயிரோடு இருந்தபோதே, அந்த கட்சி சந்தித்த தேர்தல்களில் பிரகாசிக்கவில்லை என்பதை உணர வேண்டும். மேலும், தன் கட்சியின் இருப்பை நிலை நிறுத்திக்கொள்ள, எந்தவித பேரமும் பேசாமல், நிபந்தனை விதிக்காமல், வலிமையான கூட்டணியில் சேர்ந்து, கிடைக்கும் தொகுதிகளை பெற்று தேர்தலை சந்தித்தால் அரசியலில் நிலைத்திருக்கலாம்.அதை விடுத்து, கறாராக நடந்து கொண்டால், அடுத்த தேர்தலுக்குள் தே.மு.தி.க., காணாமல் போய் விடும் என்பதை பிரேமலதா உணர வேண்டும்.

தகுதியை தீர்மானிக்க வேண்டியது மக்களே!

ஜி.சூரிய நாராயணன், விழுப்புரத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: அரசியல் கட்சிகள், பல விஷயங்களை தங்கள் வியாபார பொருளாக மாற்றிக் கொண்டு உள்ளன. உதாரணத்திற்கு சமூக நீதி...நாட்டில் உள்ள பெரும்பாலான கட்சிகள், உண்மையிலேயே சமூக நீதி பற்றி அக்கறையுடன் தான் பேசுகின்றனவா அல்லது அவர்கள் கட்சியிலாவது அதை கடைப்பிடிக்கின்றனவாஎன்றால், இல்லை என்றே சொல்ல வேண்டும்.தமிழக திராவிட கட்சிகளுக்கு, சமூக நீதி என்பது ஒரு பிம்ப கட்டமைப்பு, அலங்கார வார்த்தை, அவ்வளவு தான். ஆனால், ஆட்சி கட்டில் ஏற வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், சமூக நீதியை அமல்படுத்துவதில் பா.ஜ., என்றுமே முன்னணியில் இருக்கிறது.சமூக நீதி செயல்பாடு தானே தவிர, ஓட்டு வாங்கும்கருவி அல்ல என்பதை பலமுறை அவர்கள் நிரூபித்து வருகின்றனர். சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி என்ற விமர்சனத்தை தவிடுபொடியாக்கும் வகையில், வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் அப்துல் கலாமை ஜனாதிபதியாக தேர்வு செய்து, சமூக நீதியை நிலைநாட்டினர்.அடுத்து வந்த மோடி, பழங்குடியின சமூகத்தின் திரவுபதி முர்முவை ஜனாதிபதியாக்கி, சமூக நீதியை நிலைநாட்டி உள்ளார். அதுபோல, கட்சியின் மாநில பதவிகள், மத்திய அமைச்சர் பதவிகளிலும், பெரும்பாலும் சமூக நீதியை கடைப்பிடிக்கின்றனர்.தமிழகத்தின், அருந்ததியர் சமூகத்தை சார்ந்த முருகன், மத்திய இணை அமைச்சர் ஆக்கப்பட்டுள்ளார். ஆனால், சமூக நீதியின் ஒட்டுமொத்த குத்தகைதாரர்கள் போல, தங்களை மார்தட்டிக் கொள்ளும் தி.மு.க.,வை சேர்ந்த எம்.பி.,யான டி.ஆர்.பாலு, முருகனை பார்த்து, 'நீங்கள் எம்.பி., மற்றும் மத்திய அமைச்சர் பதவிக்கு தகுதியற்றவர்' என வசைபாடி உள்ளார்.அவரது மனதில் எந்த அளவுக்கு, சமூக வெறுப்பு இருந்தால் இப்படிப்பட்ட வார்த்தைகள் பொதுவெளியில் வரும். காலம், காலமாக தி.மு.க.,வில் எம்.பி., மற்றும் வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் மத்திய அமைச்சர் பதவி என, 'வளமாக' வலம் வந்த பாலுவுக்கு, முருகனை போன்று, அடிமட்டத்தில் இருந்து உயர் பதவிக்கு வந்தவர்களை கண்டால் கசக்கவே செய்யும். அதன் வெளிப்பாடு தான், அவரது தகுதி பற்றி பேச வைத்துள்ளது.ஒருவர் தகுதியுள்ளவர், தகுதியற்றவர் என்பதை முடிவு செய்யும் அதிகாரத்தை இவருக்கு யார் தந்தது? மக்கள் அல்லவா அதை முடிவு செய்ய வேண்டும்.டி.ஆர்.பாலு, முருகனை பார்த்து ஒரு விரல் நீட்டி குற்றம் சாட்டிய போது, மற்ற நான்கு விரல்களும் தன்னை நோக்கி இருப்பதை கவனிக்க தவறி விட்டார் போலும். லோக்சபா தேர்தல் முடிவுகள் வரும்போது, யாரை தகுதியுள்ளவர்களாகவும், தகுதியற்றவர்களாகவும் மக்கள் ஆக்கியுள்ளனர் என்பது தெரியவரும்.

மக்கள் உயிரோடு விளையாடாதீர்கள்!

முனைவர் மீனாட்சி பட்டாபிராமன், மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சமீபத்தில், சென்னை மாநகரில் மகளிர் சிறப்பு பேருந்தில் பயணித்த பெண் ஒருவர், பேருந்தில் திடீரென்று விழுந்த ஓட்டையில் சிக்கி, தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளார். இது ஒன்றும் புதிதல்ல. பஸ் தீப்பிடித்து எரிவதும், அதன் சக்கரங்கள் கழன்று ஓடுவதும், பிரேக் பிடிக்காமல் மரத்தில் முட்டிக் கொள்வதும், மழைக் காலத்தில், பஸ் கூரை வழியே பயணியருக்கு அபிஷேகம் நிகழ்வதும் சர்வ சாதாரணம். அரசியல்வாதிகள் பல விலையுயர்ந்த கார்களில் பயணம் செய்வர்; மக்களுக்கு பிரேக் பிடிக்காத வண்டி தான் கிடைக்கும்!இதே, 'தினமலர்' நாளிதழில் பல முறை பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் தாங்கள் எப்படி இதுபோன்ற ஓட்டை பஸ்களை ஓட்டும்படி நிர்பந்திக்கப்படுகின்றனர் என்பது, செய்தியாக வெளியாகி உள்ளது.அரை ஜாண் வயிற்றுக்காக இரவு பகல் பாராது, தாங்கள் பிரேக் கூட சரியாக பிடிக்காத வண்டிகளை, பல ஆண்டுகளாக ஓட்டி வருவதை, ஓட்டுனர்கள், 'தினமலர்' நாளிதழ் வழியாகபகிர்ந்து கொண்டனர். ஆனால், செவிடன் காதில் ஊதிய சங்கு போல, அரசும் வாய்மூடி மவுனமாய் உள்ளது.தினமும் மக்களுக்கு தேவைப்படும் பேருந்து விஷயத்தில் ஓட்டுனர் ஆரோக்கியத்தைப் பற்றியும், பயணியர் உயிரைப் பற்றியும் சற்றும் கவலைப்படாமல், பஸ் என்ற பெயரில் தகர டப்பாக்களை ஒரு மழைக்கு கூட தாக்கு பிடிக்காத சாலைகளில் ஓடவிட்டு, மக்கள் உயிரோடு விளையாடுவதை மன்னிக்க முடியாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

D.Ambujavalli
பிப் 17, 2024 07:05

ஏதாவது 'சில்லறையை' வீசியிருப்பார் குடும்பத்துக்கு தாயை, மனைவியைத் திருப்பித்தர முடியுமா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை