'நீங்களா தோற்கடிச்சீங்க...?'
ராஜிவ் படுகொலைக்கு நீதி கேட்டு காங்., சார்பில், கடலூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கே.எஸ்.அழகிரி எம்.பி., பேசும்போது, 'வைகோ, நெடுமாறன் போன்றோருக்கு, தமிழகத்தில், தமிழர்களின் ஆதரவு இருந்தால், அவர்கள் முதல்வராகி இருப்பர். எம்.பி., தேர்தலில் வைகோ வெற்றி பெற்றிருக்க வேண்டும். அவர்களுக்கு தமிழகத்தில் ஆதரவு இல்லை.'புதிதாக வந்துள்ள சீமான் சொல்கிறார்... 'சட்டசபை தேர்தலில் காங்கிரசை நாங்கள் தான் தோற்கடித்தோம்...' என்கிறார். அவர் எங்கே எங்களை தோற்கடித்தார். எங்களை நாங்களே தான் தோற்கடித்துக் கொண்டோம்' என்றதும் கூட்டத்தில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.இதைக் கேட்ட, காங்கிரஸ்காரர் ஒருவர், 'இவர், சீமானை திட்டற மாதிரி நம்மையே மட்டம் தட்டறாரே... நம்ம ஆளுங்களை சொல்றாரா... தி.மு.க., கூட சேர்ந்ததால தோற்றோம்னு கூட்டணியை குறை சொல்றாரா...' என, புலம்பியபடியே நகர்ந்தார்.
கேட்டு வாங்கிய கைதட்டல்...!
கொடைக்கானல் மலைப்பகுதி கும்பறையூர் ஊராட்சியில் இலவச கறவை மாடு வழங்கும் விழா நடந்தது. திண்டுக்கல் கலெக்டர் நாகராஜன், அரசின் திட்டங்களை எடுத்துக்கூறும் போது, பொதுமக்கள் அமைதி காத்தனர். அவர்களை கைதட்டும்படி கலெக்டர் கேட்டுக் கொண்டார்.ஒரு கட்டத்தில், பழநி எம்.எல்.ஏ., வேணுகோபாலை பார்த்து, 'நீங்களும் கைதட்டுங்கள்...' என்றார். அதற்கு வேணுகோபால், 'நான் சட்டசபையில் மேஜையை தட்டித்தான் பழக்கம். எனவே, மேஜையை தட்டுகிறேன்' எனக் கூறி, பேச்சின் இடையே அவ்வப்போது மேஜையை தட்டிக் கொண்டிருந்தார்.கலெக்டர், பொதுமக்களைப் பார்த்து, 'கை தட்டல் போதாது... உரக்கத் தட்டுங்கள்...' என, அடிக்கடி கூறி, கைதட்டலை கேட்டு வாங்கினார்.இதைப் பார்த்த, விழா ஏற்பாட்டாளர், 'இனி, கலெக்டர் விழா என்றால் கைதட்ட, தனியாக ஆட்களை கூட்டி வர வேண்டும் போலிருக்கே...' என, 'கமென்ட்' அடித்தார்.