| ADDED : மே 06, 2024 10:49 PM
பெண்கள் குழுவாக ஸ்வெட்டர்கள் தயாரிக்கும் ஒரே நிறுவனமான, 'நீல்கிரீஸ் வுல்லன் கிளஸ்டர்' நிறுவன உரிமையாளரான, குன்னுாரை சேர்ந்த லதா: என் பூர்வீகம் சென்னையை அடுத்த தாம்பரம். வக்கீலான என் கணவர் தியாகராஜன், நீலகிரியை சேர்ந்தவர். இன்ஜினியரிங் முடித்ததுமே திருமணமாகி இந்த ஊருக்கு வந்தேன். என் மாமனாரும், கணவரும் சுயதொழில் செய்ய ஊக்கம் கொடுத்தாங்க. நீலகிரி மாவட்டத்தில் ஸ்கூல் குழந்தைகள் முதல் ஆபீஸ் போறவங்க வரை பெரும்பாலானோர் தினமும் ஸ்வெட்டர் பயன்படுத்துவாங்க. ஆனால், பஞ்சாப் மாநிலம், லுாதியானாவுல் இருந்து தான் காலம் காலமாக வாங்கி விற்கப்படுது. இந்த நிலையை மாற்றணும்னு தான் இந்த தொழிலை கையில் எடுத்தேன்.ஸ்வெட்டர் தயாரிப்புக்கான பயிற்சி பெற்றேன். பேங்க் லோன் வாங்கி, வீட்டு மொட்டை மாடியில் சின்ன லெவல்ல இந்த தொழிலை ஆரம்பித்தேன்.நாலு நிட்டிங் மிஷின்கள் வாங்கி, ஆறு பேருடன் உற்பத்தியை ஆரம்பித்தேன். சுயதொழிலில் ஆர்வமுள்ள பலரையும் சேர்த்து, குழுவாக இணைந்து செயல்பட ஆரம்பித்தோம். மிஷின்கள் வாயிலாக நவீனமாகவும், புதுமையாகவும் ஸ்வெட்டர்கள் தயாரிக்கப்பட்டாலும், கைவேலைப்பாடுகளால் தயாரிக்கிற ஸ்வெட்டருக்கு தனி வரவேற்பு இருக்கு.இந்த நிலையில், மேலும் கூடுதலாக ஐந்து நிட்டிங் மிஷின்கள் வாங்கினோம். 3 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த மிஷின்களை 2022ல் ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்தோம்.இந்த கம்ப்யூட்டரைஸ்டு நிட்டிங் மிஷின்களில் ஸ்வெட்டர் தயாரிக்க சாப்ட்வேர் வாயிலாக டிசைன் தயார் செய்யலாம். பின் தேவையான ஸ்வெட்டர்களின் எண்ணிக்கை உட்பட எல்லா விபரங்களையும் கம்ப்யூட்டர் வாயிலாக கொடுக்கலாம். இதில், எட்டு மணி நேரத்தில் 300 - 350 ஸ்வெட்டர்களுக்கான உடல் பாகங்களை தயாரிக்கலாம்.அவற்றை லிங்கிங் எனும் பிரத்யேக மிஷின் வாயிலாக ஸ்வெட்டரா உருவாக்குவோம். இதற்கடுத்து எம்ப்ராய்டரிங், வாஷிங், பேக்கேஜிங் உள்ளிட்ட இதர வேலைகளை முடிப்போம். இந்த முறையில் தயாரிக்கிற ஸ்வெட்டர்களை திருப்பூரில் இருக்குற ஏற்றுமதியாளர்கள் குழுமத்துக்கு விற்று விடுவோம். அங்கிருந்து எங்கள் தயாரிப்புகள் வெளிநாடுகளுக்கு போகுது.நேரடியாக, 28 பெண்கள் வேலை பார்க்கின்றனர். 125 பெண்களுக்கு மறைமுக வேலை வாய்ப்பும் ஏற்படுத்தி தருகிறேன். விரைவில் வெளிநாடுகளுக்கு நேரடியாக ஏற்றுமதி செய்யவும் திட்டமிட்டுள்ளேன். ஆண்டுக்கு தற்போது 65 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் செய்து வருகிறேன்.பிசினஸ் பண்றவங்களுக்கு அளவு கடந்த பொறுமையும், எதையும் சமாளிக்கிறதுக்கான துணிவும், காலத்துக்கு ஏற்ப நம்மை, 'அப்டேட்' பண்ணிக்கிற திறனும் இருந்தால், நிச்சயம் வெற்றி பெறலாம்.