உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / சொல்கிறார்கள் / சருகு, குச்சிகளை அரைக்கும் ஆலை நடத்துகிறேன்!

சருகு, குச்சிகளை அரைக்கும் ஆலை நடத்துகிறேன்!

நடமாடும் அரவை ஆலையை உருவாக்கி, சருகுகளையும், குச்சிகளையும் துாளாக அரைத்து, தொழிற்சாலைகளுக்கு விற்பனை செய்து, கணிசமான லாபம் பார்த்து வரும், விழுப்புரம் மாவட்டம், கிளியனுார் அருகே உள்ள ஆதனம்பட்டு கிராமத்தை சேர்ந்த விவசாயி சங்கர்:எனக்கு சிறு வயது முதலே விவசாயத்துல ஆர்வம் அதிகம். அதனால், 10ம் வகுப்பு முடித்ததும், முழு நேர விவசாயியா மாறிட்டேன். எங்கள் நிலத்தில் விளையக்கூடிய சவுக்கு மரங்களை காகித ஆலைகள், சர்க்கரை ஆலைகள், ரசாயன தொழிற்சாலைகள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்களுக்கு விற்பனை செய்கிறேன். சவுக்கு மரங்களை அறுவடை செய்யும் போது, கழிவுகளாக மிஞ்சக்கூடிய சருகுகளையும், குச்சிகளையும் அந்த நிலத்திலேயே போட்டு, கொளுத்தி விடுவது தான் பெரும்பாலான விவசாயிகளின் வழக்கம்.ஆரம்பத்தில் நானும் அப்படி தான் செய்தேன். 'ஆனால் அப்படி செய்யும் போது, நிலத்தில் உள்ள மண் புழுக்கள், நுண்ணுயிர்கள் மற்றும் சத்துக்கள் அழிந்து, விளைச்சல் பாதிக்கும்' என்று சிலர் கூறினர்.அதனால், சவுக்கு சருகுகளையும் துாளாக்கி, பாய்லர்களில் எரிபொருளாக பன்படுத்தலாம் என்ற யோசனை தோன்றியது. உடனே, 2009ல், சவுக்கு சருகுகளை அரவை செய்யும் ஆலையை துவங்கினேன். இதற்கு எப்போதுமே தேவை இருக்கும். ஒரு மாதத்திற்கு, 500 - 600 டன் சருகுகள் அரவை செய்து, துாள் தயார் செய்கிறேன். செங்கல்பட்டு, திருச்சி, திருவண்ணாமலை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள தொழிற்சாலைகளுக்கு விற்பனை செய்கிறேன்.ஆரம்ப காலங்களில், டிராக்டரில் வேலையாட்களை அழைத்துப் போய், விவசாயிகளின் சவுக்கு தோட்டங்களில் கிடக்கும் சருகுகளை எடுத்து சென்று, என் ஆலையில் அரவை செய்வேன். அதில் சில சிரமங்கள் இருந்தன. சிரமங்களை குறைக்க, 10 லட்சம் ரூபாய்க்கு ஒரு லாரியை வாங்கி, அதில் அரவை இயந்திரத்தை இணைத்தேன்.தொழில்நுட்ப ரீதியாக பல முறை தோல்விகளை சந்தித்தேன்; இதனால், 4 லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. படிப்படியாக குறைகளை சரி செய்து, நடமாடும் அரவை ஆலையை முழுமையாக தயார் செய்தேன். லாரி இன்ஜினை, 'ஆன்' செய்து, அதன் வாயிலாக அரவை இயந்திரத்தை இயக்கி, ஒரு மணி நேரத்தில், 2 டன் சருகுகளை அரவை செய்யலாம். இதற்கு, 3 லிட்டர் டீசல் தேவைப்படும். இந்த தொழிலில், 1.5 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளேன்.இதில் மாதம், 2 லட்சம் ரூபாய் லாபம் கிடைக்கிறது என்பது ஒரு பெரிய தொகை இல்லை.ஆனால், என்னை பொறுத்தவரை இதை முழு மனநிறைவாக பார்க்கிறேன். விவசாயத்திற்கும், சுற்றுச்சூழல் நலனுக்கும், நம்மால் முடிந்த பங்களிப்பு செய்து வருகிறோம் என்ற ஆத்ம திருப்தி கிடைக்கிறது!தொடர்புக்கு: 94432 24527


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி