உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / சொல்கிறார்கள் / 100க்கும் அதிகமான நாட்டின மாடுகள் வளர்க்கணும்!

100க்கும் அதிகமான நாட்டின மாடுகள் வளர்க்கணும்!

பர்னிச்சர் தொழிலில் நிறைவான லாபம் வந்தா லும், விவசாயிகளால் கைவிடப்பட்டு, வெட்டுக்கு அனுப்பப்படும் நாட்டின மாடுகளை பாதுகாக்க, லாப நோக்கமின்றி கோசாலை நடத்தி வரும், மதுரை வில்லாபுரத்தைச் சேர்ந்த அஜய் கார்த்திக்:எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் படித்திருக்கிறேன். எங்கள் குடும்பத்தினர் நீண்ட காலமாக பர்னிச்சர் தொழில் செய்து வருகின்றனர். அதனால், நானும் 10 ஆண்டுகளுக்கு முன் இந்த தொழிற் கூடத்தை துவங்கினேன்.இது, எங்களது சொந்த இடம். மொத்த பரப்பு 1.25 ஏக்கரில், அரை ஏக்கரில் தொழிற்கூடம் அமைத்து, மீதி பரப்பில் வீட்டிற்கு தேவையான காய்கறிகள் சாகுபடி செய்வதுடன், பல விதமான மரங்களை வளர்த்து வருகிறேன். இயற்கை இடுபொருட்களுக்காக மாடுகள் வளர்க்க விரும்பினேன். குடும்ப நண்பர் ஒருவர் உம்பளச்சேரி இனத்தைச் சேர்ந்த மாட்டை அன்பளிப்பாக கொடுத்தார். வளர்க்க ஆரம்பித்த போது தான், நாட்டு மாடுகள் வளர்ப்பில் ஆர்வம் அதிகமானது. சினை பிடிக்காமை, மிகவும் குறைவான அளவு பால் தருதல், உடல் நலிவுற்றல், வயது முதிர்வு, வறட்சியால் பசுந்தீவனம் பற்றாக்குறை உட்பட சில காரணங்களுக்காக, விவசாயிகளால் கைவிடப்பட்டு வெட்டுக்கு அனுப்பப்படும் நாட்டின மாடுகளை மீட்டெடுத்து பாதுகாக்க முடிவெடுத்தேன்.அதற்காக இங்கு கோசாலையை துவங்கினேன். பர்னிச்சர் தொழிலை கவனித்தபடியே, ஐந்து ஆண்டுகளாக வெற்றிகரமாக நடத்தி வருகிறேன். இங்கு 23 மாடுகள் உள்ளன. பொதுவாக, நாட்டின மாடுகளை மேய்ச்சல் முறையில் வளர்த்தால் தான் ஆரோக்கியமாக வளரும். இதற்காக இந்த பகுதி விவசாயிகளுடன் ஒப்பந்தம் செய்துள்ளேன். அவர்கள் நிலங்களில் பயிர்கள் இல்லாத நாட்களில், என் மாடுகளை மேய்ச்சலுக்கு விடுவேன். அடர் தீவனமும் கொடுத்து வருகிறேன்.வசதி படைத்த விவசாயிகள், இயற்கை விவசாயத்திற்கு இந்த மாடுகளை விலைக்கு கேட்டால், குறைந்த விலையில் விற்பனை செய்வேன்.அதன் வாயிலாக கிடைக்கும் வருமானத்தை இந்த கோசாலை செலவுகளுக்கு பயன்படுத்திக் கொள்வேன். பர்னிச்சர் தொழிலில் எனக்கு நிறைவான வருமானம் கிடைத்து வருவதால், அதில் இருந்து இந்த கோசாலைக்கு செலவு செய்கிறேன்.அழிவின் விளிம்பில் உள்ள நாட்டின மாடுகளை பாதுகாக்கணும் என்ற ஒரே நோக்கத்துடன் தான், இந்த கோசாலையை துவங்கி, நடத்தி வருகிறேன்.இதை பெரிய அளவில் விரிவுபடுத்தி, 100க்கும் அதிகமான நாட்டின மாடுகள் வளர்க்கணும். மாடுகள் வாயிலாக கிடைக்கும் சாணத்தை பயன்படுத்தி, விபூதி, பற்பொடி, கொசு விரட்டி உள்ளிட்ட மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயார் செய்து, மிக குறைவான விலையில் விற்பனை செய்ய வேண்டும் என்பது தான் எதிர்கால திட்டம்.தொடர்புக்கு:76677 70404


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை